எடப்பாடியில் இபிஎஸ் தேர்தல் பரப்புரை; வீட்டிற்குள் முடங்கிய ஓபிஎஸ்: அதிமுகவில் நடப்பதென்ன?

எடப்பாடியில் இபிஎஸ் தேர்தல் பரப்புரை; வீட்டிற்குள் முடங்கிய ஓபிஎஸ்: அதிமுகவில் நடப்பதென்ன?
எடப்பாடியில் இபிஎஸ் தேர்தல் பரப்புரை; வீட்டிற்குள் முடங்கிய ஓபிஎஸ்: அதிமுகவில் நடப்பதென்ன?
Published on

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை எடப்பாடி தொகுதியில் தொடங்கியுள்ளார். துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அரசியல் விமர்சகர்கள் இடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட்டநிலையில், அரசியல் அரங்கம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லாமல் ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்கள். நீயா நானா என வாக்குவாதத்தில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டும் வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மிகவும் ஆரவரத்தோடு அமர்களமாக தேர்தல் பிரச்சாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் போன்ற மூத்த தலைவர்கள் இல்லாமல் பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். இது அரசியல் விமர்சகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது.

இது தொடர்பாக புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர் லஷ்மணன் பேசும் போது, 

“இன்றைக்கு முதல்வர் தொடங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம் விளையாட்டுத்தனம் அல்ல. மிக மிக சீரியஸாக அதிமுக என்கிற மிகப்பெரிய இயக்கத்தின் வரப்போகிற சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தொடங்கிய பிரச்சாரம். சீரியஸான பிரச்சாரம்.

கடந்தகால அதிமுக நடைமுறைகளை எடுத்துப் பார்த்தாலும், எந்த பிரதான அரசியல் கட்சிகளுடைய நடைமுறைகளை எடுத்துப் பார்த்தால் அந்த கட்சியினுடைய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருந்திருக்கிறார். திமுகவிலும் அதிமுகவிலும் அதுதான் நடைமுறை.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை கட்டிக்காத்த ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த இடத்திற்கு தன்னை முன்னிருத்தி நடக்கிற இந்த தேர்தல். அப்படி முன்னிருத்தியவர் எடப்பாடி பழனிசாமி அல்ல, இன்றைக்கு அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கின்ற ஓ.பி.எஸ் தான் எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப் படுத்தினார்.

நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை. அறிவிக்கவும் கட்சியினுடைய விதிமுறைகள் இடமளிக்காது. ஏனென்றால் எல்லாமே நல்லபடியாக சட்ட விதிமுறைகளின் படி நடந்தது. இந்த கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கின்ற ஓ.பி.எஸ் தான் அறிவித்தார். அதெல்லாம் சரியாக நடந்தது.


ஆனால், இன்றைக்கு கூட்டணி கட்சிகளை அழைத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்களா என்று நான் கேட்க மாட்டேன். ஏனென்றால் கூட்டணியே இன்னும் முடிவாகாமல் இருக்கிறது. இருக்கின்ற கூட்டணி கட்சிகளும் குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உங்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற ஓபிஎஸ் இருந்துதான் இபிஎஸ் இந்த பிரச்சாரத்தை தொடங்கி இருக்க வேண்டும்.

இன்றைக்கு ஏதோ எடப்பாடி அல்லது சேலத்தில் இருக்கின்ற பத்திரிகையாளர்களோ, கட்சிக்காரர்களோ அதிமுகவோ மற்ற கட்சிக் காரர்களோ அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடும் உற்று நோக்கிய பிரச்சாரம் இது. ஏனென்றால் தங்களை ஆண்டுகொண்டிருக்கிற, தங்களை மீண்டும் ஆள விரும்புகிற ஒரு முதலமைச்சர் பிரச்சாரத்தை தொடங்குகிற போது ஒட்டுமொத்த தமிழகமும் கவனிக்கும். மற்ற அரசியல் கட்சிகளும் பார்ப்பார்கள் பிற பகுதிகளில் இருக்கிற அதிமுக தொண்டர்களும் கவனிப்பார்கள்.

ஓபிஎஸ் இருந்து ஒரு உற்சாகத்தோடு எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர். அம்மாவுடைய மறைவிற்குப் பிறகு இருவரும் இந்த கட்சியை கட்டிக்காத்து நான்கு ஆண்டுகள் இந்த ஆட்சிக்கு வந்த சோதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து இந்த ஆட்சியை நடத்தி வந்தோம். மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த, மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆசனத்தில் அமர்த்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று முதலில் மைக் பிடித்து பேசியிருக்க வேண்டியவர் ஓபிஎஸ் தான்.

தலைமை பொறுப்பேற்று, முன்னிலை வகித்து இந்த பிரச்சாரத்தை தொடங்கியிருக்க வேண்டிய ஓபிஎஸ் இன்றைக்கு எங்கே இருக்கிறார் என்று விசாரித்து பார்த்தால், இன்றைய திட்டப்படி தன்னுடைய மாவட்டத்தில் இருக்கிற வடபுதுப்பட்டி, அன்னஞ்சி மற்றும் லட்சமிபுரம் ஆகிய மூன்று ஊர்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி திட்டங்கள் இன்று(19.12.2020) ஓபிஎஸ்-க்கு இருந்தது.

ஆனால், முதலமைச்சர் எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கிக் கொண்டிருக்கும் போது, ஓபிஎஸ் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார். எங்கே இருக்கிறார் என கட்சிக்காரரிடம் கேட்ட போது. அண்ணன் தெற்கு அக்ரஹாரத்தில் இருக்கிற பழைய வீட்டில் இருக்கிறார் என்றவரிடம் எதுக்குங்க வீட்டையெல்லாம் சொல்றீங்க என்று கேட்டதற்கு அண்ணனுக்கு எப்போதெல்லாம் மூடு சரியில்லையோ அப்பெல்லாம் பழைய வீட்டில் இருப்பார் என்று சொன்னார்.

இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பிஜேபி தலைவர் எல்.முருகன் கோடிட்டு காட்டியுள்ளார். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை அதிமுகவுக்கு உண்டு. அந்த அடிப்படையில் தன்னுடைய ஆதங்கத்தையெல்லாம் மறைத்து எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என ஓபிஎஸ் அறிவித்துவிட்டார்.

ஆனால், தமிழ்நாடு பிஜேபி என்பது சாதாரண கூட்டணி கட்சியல்ல. உங்களை கட்டுப்படுத்துகிற மறைமுகமாக ஆளுகை செலுத்துகிற மத்தியில் ஆட்சியில் இருக்கிற கட்சி. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்குகிற போது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அவர்கள் வேண்டுமானால் முடிவு செய்யலாம் ஆனால் அறிவிக்க வேண்டியது நாங்கள்தான் என்று சொல்கிறார்கள் என்றால் அப்படிப்பட்ட கட்சியோடு கூட்டணி இல்லைஎன்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியின் தேர்வை பிஜேபி ரசிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக ஒரு அரசியல் மாற்றம் வரும் என்று எல்.முருகன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். முருகன் சொல்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் அமித் ஷாவே ஒப்புக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஜெயக்குமார் சொல்கிறார். இது தவறான தகவல்.

அமித் ஷாவை மேடையில் வைத்துக் கொண்டு இந்த கூட்டணி தொடரும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் அறிவித்த பிறகு, “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஏற்படுத்திய இந்த அதிமுக ஆட்சி வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றுதான் அமித்ஷா சொன்னார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தொடருவார் என்று சொல்லவில்லை. பிஜேபி-யின் இந்த அரசியலைதான் அதிமுக அரசு மிகவும் கவனிக்க வேண்டும்.

கூட்டணியில் பிஜேபி இருந்தால் இருக்கட்டும் இல்லா விட்டால் போகட்டும் என்று அன்வர்ராஜா சொல்லியிருக்கிறார். பிஜேபிக்கு ஏற்கெனவே அனுபவம் இருக்கிறது. அதிமுகவை உடைத்த அனுபவம் இருக்கு, இரட்டை இலையை முடக்கிய அனுபவமும் இருக்கு. அதிமுக கவனமாக காய் நகர்த்த வேண்டிய நேரம் இது.

நீங்கள் அறிவிக்கிற திட்டங்கள் அறிவிக்கிற சலுகைகள் மக்களிடம் கொண்டு செல்லும் பிரச்னைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அதிமுகவில் இருக்கின்ற குழப்பங்களை தீர்க்கின்ற கடமை ஒபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இருக்கிறது. ஓபிஎஸ் சும்மா மட்டுமில்ல, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்த பிறகு கடந்த 20 நாட்களாக மதுரையில் இருந்து வெளிவருகிற நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்.

மக்கள் தலைவர் ஓபிஎஸ், 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒப்பற்ற தலைவர் ஓபிஎஸ். இந்த வாசகங்களை எதற்காக சொல்கிறார் ஓபிஎஸ். முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிலை படுத்திய பிறகு மக்கள் தலைவர் ஓபிஎஸ் என்று எதற்காக சொல்கிறார். அம்மாவே தேர்ந்தெடுத்த முதலமைச்சர் வேட்பாளர் ஓபிஎஸ் தான் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கிறது.

ஒரு ஆட்சியை ஒருவரிடம் ஒப்படைத்தால் அந்த ஆட்சியை மீண்டும் ஒப்படைக்கிற நேர்மையும் கண்ணியமும் நிறைந்தவர் ஓபிஎஸ் என்று யாருக்காக சொல்கிறார் ஓபிஎஸ். இதையெல்லாம் அரசியலில் கவனிப்பவர்கள் கவனிக்கத்தான் செய்வார்கள். இந்த குழப்பங்களை கேள்விகளை தீர்க்க வேண்டிய கடமை இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com