'கனவின் வெளிப்பாடு', 'கூட்டணி வெற்றி இலக்கு'... - திமுகவின் 'விஷன் 200' சாத்தியமா?

'கனவின் வெளிப்பாடு', 'கூட்டணி வெற்றி இலக்கு'... - திமுகவின் 'விஷன் 200' சாத்தியமா?
'கனவின் வெளிப்பாடு', 'கூட்டணி வெற்றி இலக்கு'... - திமுகவின் 'விஷன் 200' சாத்தியமா?
Published on

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இன்றி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது திமுகவும் அதிமுகவும். அரசியல் களம் சூடுபிடித்துள்ள தற்போதைய சூழலில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'விஷன் 200' என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இது சாத்தியமா என்று ’நியூஸ் 360’-ல் நடந்த விவாதம் ஒரு பார்வை...


தமிழக சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்பதால் தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுவதால் புதுசு புதுசா பலர் உருவாகிக்க கொண்டு இருக்கிறார்கள். சிலரைக் கட்டாயப்படுத்தி புதிய கட்சியை தொடங்கச் செய்கிறார்கள். எல்லா சதிகளையும் செய்யும் இவர்கள் தேர்தல் நெருக்கத்தில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இப்படி தாக்குதல் நடத்துகிறார்கள் என்று நாம் பலவீனமடைந்துவிடக் கூடாது. சோர்ந்து விடாமல் மேலும் மேலும் உழைக்க வேண்டும். ஆறாவது முறை வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஆறுமடங்கு உழைக்க வேண்டும்.

இன்றே நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டாக வேண்டும். நம்முடைய இலக்கு 200-க்கு மேல்தான் என்பது. ’விஷன் 200’ இந்த இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும்” என்று பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 'விஷன் 200' சாத்தியமா?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திமுக முனைப்பு காட்டிவரும் சூழலில், கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளை திமுக பெற்றது என்பதை பார்க்கலாம்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 96 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 தொகுதிகளை கைப்பற்றியது.

1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 221 இடங்களை திமுக கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த திமுக அதன்பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலைதான் இருக்கிறது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக 184 இடங்களை பெற்றது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் பெறாதா மிகப்பெரிய வெற்றி இது.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதிக எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு ஆட்சியமைத்த கட்சியும் திமுகதான். அதேபோல அதிக எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு எதிர்க்கட்சியாக இருப்பதும் நாம்தான் என 2016ல் அதிமுக வெற்றி பெற்றபோது கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருந்தார். 89 எம்.எல்.ஏ-க்களோடு எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் உருவெடுத்தார். 2006 தேர்தலில் திமுகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ -க்களின் ஆதரவோடு திமுக ஆட்சியமைத்தது. இதனால் இந்த அரசை ’மைனாரிட்டி’ அரசு என்று ஜெயலலிதா விமர்சித்தார்.

இதற்காகதான் கடந்த இரண்டு மாதங்களில் இருந்த நிலையை மாற்றி தற்போது ’விஷன் 200’ என்ற திட்டத்தை அறிவித்து இருக்கிறார். இதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது கூட்டணி கட்சியினரிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது திமுக கூட்டணியில் 11 கட்சிகள் இருக்கின்றன. இவர்களில் திமுக 200 இடங்களில் போட்டியிட்டால் மீதமுள்ள 34 இடங்களைதான் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப் போகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கேள்வி: நேற்று 'மிஷன் 200' என்ற திட்டத்தை திமுக தரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தொகுதி கூட பின்வாங்கிவிடக் கூடாது. ஒரு இன்ச் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுக இந்த முறை உங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறதா?

வைகைச் செல்வன் (அதிமுக செய்தித் தொடர்பாளர்): ”திமுக தனது கனவை வெளிப்படுத்தி இருக்கிறது. எல்லா கனவும் நனவாகிவிடுமா என்பது சந்தேகம்தானே. கனவு காண்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவை பகல் கனவாக போவதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் அதோடு மாத்திரம் இல்லாமல் அந்த கூட்டணி கட்சியினரிடையே குழப்பமும், சிக்கலும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் 10 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது அதிமுக. இந்த 10 ஆண்டு காலமும் மக்களோடு இணைந்திருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்ளை வழங்கி இருக்கிறோம்.


திமுக அப்பட்டமான வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறது. திருமங்கலம் பார்முலாவை இந்த நாட்டிற்கும் உலகத்திற்கும் அறிமுகப்படுத்திய பெருமை திமுகவையே சாரும். பணம் மட்டுமே எப்போதும் பிரதானமாக இருப்பதில்லை. ஆனால் அதையும் தாண்டி மக்களிடையே பணியாற்றுபவர்களைத்தான் மக்கள் தேர்தெடுப்பார்கள்.

அப்படித்தான் 7 முறை தன்னை ஆட்சிப் பீடத்திலே தன்னை தக்கவைத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிற இயக்கமாக அதிமுக இருக்கிறது. திமுக தனது ஆசையை கனவை அவாவை வெளிப்படுத்தி இருக்கிறது. 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து இருக்கிறது. அது அவர்களுடைய லட்சியமாக இருக்கலாம். ஆனால், அதனுடைய நிச்சயம் என்னவென்று சொன்னால் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒருபோதும் அந்த வாய்ப்பை தமிழக மக்கள் தர மாட்டார்கள்.”

கேள்வி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசும் போது கடந்த முறை 1.1 வாக்கு வித்தியாசத்தில்தான் நாம் வெற்றிவாய்ப்பை இழந்தோம். அதற்கு காரணம் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற மிதப்பில் இருந்தோம் என்றவர் ’மிஷன் 200’ என்று அறிவித்துள்ளார். இதற்கு காரணம் என்ன?

ப்ரியன் (பத்திரிகையாளர்): திமுகவை பொறுத்தமட்டில் இந்தத் தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. இப்ப விட்டால், எப்பவும் இல்லை என்று ரஜினி சொல்லும் வார்த்தைகள் திமுகவும் பொருந்தும் என்று நான் பார்க்கிறேன். அதனால், திமுக எல்லாவிதமான முயற்சிகளையும் எல்லாவிதமான தடைகளையும் தாண்டி வரக்கூடிய யுக்திகளையும் வகுக்கக் கூடிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணி மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் மிக்க பண பலத்துடன் கூடிய அணியாக இருக்கிறது. திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி அடைந்தால் கூட, சட்டமன்ற தேர்தலில் பல தடைகளை தாண்டி வரவேண்டி இருக்கிறது.

ஏற்கெனவே ஸ்டாலின் சொல்வதுபோல் சிலரை வற்புறுத்தி கட்சி ஆரம்பிக்க வைக்கிறார்கள் என்ற சொல்லுகிற விஷயம் ரஜினி மற்றும் மு.க.அழகிரிக்காக கூட இருக்கலாம். இதன் மூலமாக திமுகவின் ஓட்டுகளை பிரிப்பதற்கான சதி நடப்பதாக ஸ்டாலின் நினைக்கிறார்.


இந்தச் சூழ்நிலையில் திமுக 200 தொகுதிகளில் போட்டியிடும் என்று உதயநிதி சொன்னதற்கு, அதெல்லாம் வதந்தி என ஸ்டாலின் சொன்னார். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், 'விஷன் 200' என்பது கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கான இலக்காக வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஏனென்றால், 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெற வேண்டுமென்றால், அது 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டியதிருக்கும். பிறகு திமுக கூட்டணி கட்சிகளுக்கு எப்படி தொகுதிகளை ஒதுக்க முடியும்.

கடந்த 6 சட்டமன்ற தேர்தல்களை பார்த்தால் அதிகபட்சமாக திமுக 176 தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கிறார்கள். அதனால் இந்த முறை 170 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் அவர்கள் போட்டியிடுவார்கள். ஆனால், மற்ற சின்னச் சின்ன கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துவார்கள். ஆனால் பெரிய கட்சிகளை வற்புறுத்த மாட்டார்கள். இந்த விஷன் 200 என்பது கூட்டணி கட்சிகளோடு சேர்த்துதான்."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com