ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா செலவிட்ட தொகை எவ்வளவு? - ஒரு பார்வை

ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா செலவிட்ட தொகை எவ்வளவு? - ஒரு பார்வை
ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா செலவிட்ட தொகை எவ்வளவு? - ஒரு பார்வை
Published on

ஜார்ஜ் புஷ் தொடங்கி இரண்டு தசாப்தங்களாக நடந்து வந்த ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. தற்போது தலிபான் வசம் ஆப்கானிஸ்தான் வந்துவிட்ட நிலையில், இதுவரை அந்நாட்டில் அமெரிக்கா செய்த செலவுகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தலிபான்களை அழிக்கத் துடித்த அமெரிக்க அரசு, இதற்காக பெரும் படை துருப்புகளை ஆப்கானிஸ்தான் நோக்கி அனுப்பியது. ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கில் இருந்த அமெரிக்க துருப்புகள் ஒருகட்டத்தில் 1,10,000 பேர் என்ற அளவுக்கு துருப்புகள் எண்ணிக்கையை ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி தலிபான்களை ஒடுக்கியது. இதற்காக அமெரிக்கா செலவு செய்த பணம் ஏராளம்.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் `Costs of War Project' என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு செலவழித்த தொகை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 11, 2001 முதல் இந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் நடந்த போருக்காக அமெரிக்கா 2.26 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.

தலிபான்களை அழிக்க அமெரிக்கா செலவு செய்த இந்த மொத்த தொகையானது, ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்காவின் 30 பணக்கார கோடீஸ்வரர்களின் நிகர மதிப்புகளை விட அதிகம். தினசரி ரீதியாக கணக்கிட்டால் இந்த இரண்டு தசாப்தங்களில் ஒவ்வொரு நாளும் 300 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்கா செலவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த தொகையில் தலிபான்கள் உடனான நேரடி யுத்தத்துக்கு தான் அதிகமான தொகைகளை செலவிட்டு இருக்கிறது அமெரிக்கா. நேரடி சண்டைக்கு செலவிட்ட தொகை மட்டும் 800 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும். ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு கடன் வாங்கித்தான் இந்த தொகைகளை கொடுத்திருக்கிறது. இந்தக் கடனுக்கான வட்டியாக மட்டும் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க அரசு செலுத்தியுள்ளது. இந்த வட்டி தொகையையும் சேர்த்தே மொத்தம் 2.26 ட்ரில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது பிரவுன் பல்கலைக்கழக குழு. ஆப்கானிஸ்தான் போருக்காக வாங்கிய கடனுக்கான வட்டி மட்டும் 2050-ம் ஆண்டு வாக்கில் 6.5 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, நேரடி யுத்தத்தை தாண்டி ஆப்கானிஸ்தானை சீரமைப்பு செய்வதற்காக அமெரிக்கா 144 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலவிடப்பட்டுள்ளது. நிர்வாகத்தை மேம்படுத்துதல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உதவுதல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்கான வேலைத்திட்டங்கள், மனிதாபிமான உதவி திட்டங்கள் போன்றவை இந்த மறுசீரமைப்பில் இருந்தாலும், இந்த தொகையில் பெரும் பகுதி ஆப்கானிஸ்தானின் ராணுவ படைகளுக்கு பயிற்சி அளிக்க ஒதுக்கியுள்ளது அமெரிக்கா.

மே 2002 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கும், ராணுவத்தை ஆயுதப்படுத்துவதற்கும் 88.3 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.

அதேநேரம், இந்த தொகையில் 19 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியது, மோசடி செய்தது மூலம் வீணடிக்கப்பட்டதாக அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையும் பிரவுன் பல்கலைக்கழக குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.
மேலும், பணம் செலவிடப்பட்ட விதத்தையும் குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் ராணுவ கட்டமைப்புக்கே அதிகப்படியான முதலீடுகளை ஒதுக்கீடு செய்த அமெரிக்க அரசு, இதில் தலிபான்களை ஒடுக்குவதற்கான ஆபரேஷன்கள், ராணுவ வீரர்களின் உணவு, உடை, மருத்துவ வசதிகள், ஊதியம், சலுகை போன்றவற்றிற்காக என பணத்தை வாரி இறைத்துள்ளது.

இந்த மதிப்பீடுகள் போரில் இறந்த அமெரிக்க துருப்புகளுக்கு செலவிட்டதை கணக்கிடாமல் செய்யப்பட்டுள்ளது. போரில் இழந்த உயிர்களையும், மதிப்புகளையும் சேர்க்கும் பட்சத்தில் செலவுகள் இன்னும் அதிகமாகும். உதாரணத்துக்கு போரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மட்டும் 2,500 பேர் உயிரை விட்டுள்ளனர். இறப்புகளைப் பராமரிக்க மட்டும் இதுவரை 300 பில்லியன் டாலர் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொகையை சேர்க்கும் பட்சத்தில் மொத்த தொகை இன்னும் அதிகமாகலாம்.

இதனிடையே, தற்போது அமெரிக்க படைகள் திரும்பப்பெற்று வந்தாலும், ஆப்கன் அரசுப் படைகளுக்கு 2024ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் வீதம் உதவி செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- தகவல் உறுதுணை: அல்ஜஸீரா, ஃபோர்ப்ஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com