துரிதமாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்

துரிதமாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்
துரிதமாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்
Published on

குரங்கணி தீ விபத்து சம்பவத்தில் மீட்பு நடவடிக்கைகளில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெகதீசனின் பங்களிப்பு முக்கியமானது.

குரங்கணி தீ விபத்து சம்பவத்தில் காவல்துறையினர், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீட்புப் பணியில் துரிதமாக செயல்பட்டனர். எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருந்தாலும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெகதீசனின் பங்களிப்பு அளப்பரியது. தகவல் கிடைத்ததும், ஜெகதீசன் எப்படியோ காட்டுத் தீயில் சிக்கியவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார். அங்கு காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து அதனை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். உடனடியாக ஊடகங்களிலும் இந்த வீடியோக்கள் வெளியானது. இதுதான், அதிகாரிகளை விரைந்து செயல்பட வைத்தது. 

முதலில், காட்டுத் தீயில் சிக்கிய நிவேதிதா என்பவர் 108 ஆம்புலன்ஸுக்கு உதவி கேட்டு போன் செய்துள்ளார். தேனி காவல்நிலையத்தில் இருந்த ஜெகதீசன் தகவல் கிடைத்த உடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் அவர் கூறுகையில், “தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிட்டேன். அந்த இடத்திற்கு மிகவும் எளிதாக செல்ல முடியவில்லை. அங்கும், இங்கும் என எல்லா இடங்களில் நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. நான் அந்த இடத்திற்குச் சென்ற உடன், நெருப்பில் சிக்கி மோசமான காயங்களால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். வலியோடு மொதுவான குரலில் தங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுமாறு என்னை கேட்டுக் கொண்டார்கள். சிலர் அருகில் உள்ளவர்களின் மொபைல் எண்களை கொடுத்து தங்களை நிலையை தெரிவிக்குமாறு கூறினர். சிலர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்” என்றார்.

பெரும்பாலானோர் காயங்களுடன் ஆழமான பள்ளத்தில் கிடந்தார்கள். பரவி வந்து கொண்டிருந்த தீயில் இருந்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பள்ளத்தில் குதித்திருக்க வேண்டும். பின்னர், ஜெகதீசன் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமையை விவரமாக எடுத்துக் கூறியுள்ளார். 108 ஆம்புலன்ஸ் பணியில் சேர்ந்த 4 ஆண்டுகளில் இதுபோன்ற அதிர்ச்சிகரமான துயரத்தை தன்னுடைய வாழ்நாளில் சந்தித்தில்லை என்று ஜெகதீசன் கூறினார். பின்னர், அன்றைய நாள் முழுவதும் தீயில் சிக்கியவர்களை மீட்பு மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார். 32 வயதான ஜெகதீசன், 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் அவர், இதற்கு முன்பு மருத்துவ உதவியாளராக ஓராண்டு பணியாற்றியுள்ளார். 

குரங்கணி காட்டுத் தீவிபத்துப் பகுதிக்குச் சென்று துரிதமாக பணியாற்றிய ஜெகதீசனுக்கு அரசின் சார்பில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். “ஆம்புலன்ஸ் எந்த அளவுக்குச் செல்லுமோ அதையும் தாண்டி ஆம்புலன்ஸை இயக்கி, காயமடைந்தோர் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு வர உதவினார். அதோடு, அங்கிருக்கும் நிலவரத்தை படம் பிடித்து மீட்புக் குழுவினருக்கு அனுப்பினார். சம்பவப் பகுதியில் இருந்து காட்சிகளை அனுப்பியதால் தான் மீட்புக் குழுவினரும் விரைவாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது. வெறும் பணியாக நினைக்காமல் மீட்புப் பணி நிறைவு பெறும் வரை முழு ஒத்துழைப்புக் கொடுத்த அவருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பது அவசியம்” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com