‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்

‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்
‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்
Published on

‘96’ கதை யாருடையது? இதுதான் இன்றைக்கு கோடம்பாக்கம் ஹாட் டாப்பிக். பாரதிராஜா இந்த விவகாரத்தில் தனது உதவி இயக்குநர் சுரேஷுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். ஆனால் ‘96’ இயக்குநர் பிரேம்குமார் மிகத் தெளிவாக இன்று எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கமாக பதிலளித்துள்ளார். மேலும் ‘96’ என நாங்கள் தலைப்பு வைத்து பத்திரிகையில் விளம்பரப்படுத்திய போது ‘92’ எனத் தலைப்பு வைத்து படம் எடுக்க இருந்த சுரேஷ் என்பவர் எங்கே போனார்? ஏன் அப்போதே இந்தப் புகாரை எழுப்பவில்லை என சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார். 

உண்மையில் இவர்கள் என்ன சொல்கிறார்கள்? விளக்கமாக விவரிக்கிறது இந்தக் கட்டுரை. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ‘96’ இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘இந்தக் கதை என்னுடையதுதான். இந்தக் கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இதை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்தக் கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் டைட்டில் ‘96’ என வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.
படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்தக் கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார்.

அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்தக் கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்தக் கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர்தான் இந்தக் கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

ஒரே கதையை நான் எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்? சென்னை ‘உங்களை அன்புடன் வரவேற்கிறது’ மற்றும் ‘அசுரவதம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.

இக்கதையை என்னுடைய குறிப்பேட்டில் முறையாக என் கைப்பட எழுதி பைண்டிங் செய்த ஃபைல் உள்ளது. இதன் பின்னர் தான் இந்தக் கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் ‘92’ என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்தக் கதையை அவரே இயக்கியிருக்கலாமே? ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்?

இந்தப் படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம். கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம். இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்தப் படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா?

இது போன்ற பிரச்னைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்திருக்கலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
கதைத் திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இதுதான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருந்து அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.”என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.

இது குறித்து உதவி இயக்குநர் மணி வில்லன் என்பவர் பேசுகையில், “சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் ‘92’ என்ற கதையைச் சொல்லும் போது நானும் உடனிருந்தேன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது. அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறுவேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு.”என்றார்.

ஆனால் பாரதிராஜா இந்தக் கதையை தான் சில வருடங்கள் முன்பாகவே தனது உதவி இயக்குநர் சுரேஷிடம் கேட்டதாக கூறியுள்ளார். அவர் “கருவை திருடினால்கூட பரவாயில்லை. குழந்தையையே திருடி விட்டார்கள். இதற்கு தீர்வாக பிற மொழிகளில் படம் பண்ணுவதற்கான வாய்ப்பையாவது பாதிக்கப்பட்ட சுரேஷூக்கு கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நான் ஏன் பொய் சொல்ல போகிறேன்” என்று கூறியிருக்கிறார். 

இந்தப் படத்தின் கதை எங்கு தொடங்குகிறது என்று சுரேஷ் தனது ஸ்கிரிப்டில் விளக்கி இருப்பதாகவும் அதன்படி இருபுறங்களிலும் மரங்கள் அடர்ந்த சாலையில் ஒரு பேருந்து வருவதை போன்ற புகைப்படத்தை காட்டி விளக்கம் கொடுத்துள்லார். அந்தக் காட்சி அப்படியே ‘96’ பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் படம் வெளியான மறுநாளே இந்தப் பிரச்னையை கிளப்ப நினைத்தோம். ஆனால் ஒரு வெற்றி படத்தினை இந்தக் குற்றச்சாட்டு மூலம் மட்டுப்படுத்த வேண்டாம் என தனது குருநாதர் பாரதிராஜா தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். இந்தக் கதைக்கு முதலில் ‘92’ என வைத்திருந்ததாகவும் இதனை பராதிராஜா இயக்க இருந்த நிலையில் ‘பால்பாண்டி என்கிற பாரதி’ எனத் தலைப்பை மாறியதாகவும் அவர் விளக்கியுள்ளார். 

தமிழ் சினிமாவின் ஒரு பெரிய இயக்குநர் இந்த விஷயத்தில் ஒருதரப்பாக செயல்படுவாரா என்பது மிகப் பெரிய கேள்வியாக நம் முன் நிற்கிறது. அதே போல பிரேம்குமார் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் மிகத் தெளிவாக தன் மீதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நோட் புக்கில் எழுதி வைத்து ஒன்றன் பின் ஒன்றாக பதட்டமே இல்லாமல் விளக்கம் அளித்துள்ளார். அப்போது யார் சொல்வது உண்மை? என்பது குறித்து குழப்பம்தான் நீடிக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com