“ஒளிவு மறைவே இல்ல சார். தம்பி அஜித் மனசுல எத நினைக்கிறாரோ அத அப்படியே பேசுவார். இப்ப இல்ல. அவர் வளர்ந்து வரும் காலத்துலயே அப்படிதான். அவ்வளவு பணிவு. அவ்வளவு அன்பு. அவர் போல வேற ஆளே இல்ல” என எடுத்த வேகத்திலேயே டாப் கியரில் பறக்கிறார் செளந்தர். யார் இவர்? அஜித்துக்கு இவருக்கும் என்ன சம்பந்தம்?
“எங்க அண்ணன் கேமிராமேன் ரமேஷ்குமாருக்கு தம்பி அஜித் நல்ல பழக்கம். நான் அவரை முதன்முதலா 1994 மார்ச் மாசம் சந்திச்சேன். அப்பவே அவர் ஜெண்டில் மேன். ரொம்ப தங்கமானவர். அவரை சந்திச்சு ‘நாங்க ஒரு படம் எடுக்குறோம். இதான் என்னோட வாழ்க்கை. நீங்க விஜய் கூட சேர்ந்து ஒருபடம் நடிச்சுக் கொடுக்கணும்’னு கேட்டேன். அவர் கதை கேட்டார். உடனே அவர் வேற வார்த்தையே யோசிக்கல. ‘கட்டாயம் நான் பண்றேன்’னு சொன்னார். வந்து நடிச்சுக் கொடுத்தார். ஒத்த ரூபாய் சம்பளம் வாங்கல. படத்துல வர்ற அத்தனை காஸ்ட்யூமும் அவர் சொந்த காஸ்ட்யூம்ஸ். விதவிதமா ட்ரெஸ் போட்டு அசத்தியிருப்பார். வீட்ல இருந்து வரும்போதே அவர் சூட்கேஸ்ல மொத்த ட்ரெஸையும் கொண்டு வந்திடுவார். அந்தளவுக்கு நேர்மையான நடிகரை நான் பார்த்ததே இல்ல” என உணர்ப்பூர்வமாக பேசுகிறார் செளந்தர். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் தயாரிப்பாளர். தமிழ்சினிமா வரலாற்றில் விஜய், அஜித் சேர்ந்து நடித்த ஒரே படம் இவர் தயாரித்தப் படம்தான்.
“தம்பி அஜித்திடம் எனக்குப் பிடிச்ச ஒரே பழக்கம் அவர் எப்போது பார்த்தாலும் நாக்கைத் தொட்டுதான் பேசுவார். ‘நாக்கு ஒண்ணுண்ணே. நம்ம வாக்கும் ஒண்ணுண்ணே’னு அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு விஷயத்தை நாக்கை தொட்டுப்பேசிட்டா அந்த வார்த்தையில இருந்து பின் வாங்கவேமாட்டார். அந்தளவுக்கு நேர்மை. வாக்கு சுத்தம். அந்த வார்த்தை சுத்தம்தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு. சினிமா இன்டஸ்ட்ரியில் நான் பல காலமா இருக்கேன். என் கூட வந்த பல தயாரிப்பாளர்கள் இன்னைக்கு காணாமல் போயிட்டாங்க. ஆனா நான் நிறைய படங்கள் பண்ணலையினாலும் இன்னும் ஃபீல்டுலதான் இருக்கேன். அந்தப் பெருமைக்கு இரண்டு பேர் காரணம். ஒண்ணு, விஜய். இன்னொருவர் அஜித். ரெண்டு பேரும் இந்தத் தூரம் போக அவங்க உழைப்புதான் காரணம். அந்த ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு படம் எடுத்த ஒரே பேனர் எங்க பேனர். அந்தப் பெருமையை காலத்தால யாராலும் மாற்ற முடியாது” என நெகிழ்கிறார் செளந்தர்.
“நான் அஜித் கூட பல இடங்களுக்கு போயிருக்கேன். இதே மெட்ராஸ்ல பல தெருக்களில் டூவீலர்லயே சுத்தியிருக்கோம். என் படத்தின் செங்கல்பட்டு ஏரியாவை வாங்கினவர்தான் சிவசக்தி பாண்டியன். அந்தக் காலத்தில் சிடி எல்லாம் கிடையாது. மெயில் கிடையாது. படத்தின் மொத்த போட்டோவையும் ஆல்பமா வச்சிருப்போம். அந்த ஆல்பத்தை பார்த்துவிட்டு ‘இந்தப் பையன் யாரு?’னு கேட்டார். இவர் பேர் அஜித் குமார். அமராவதி படத்தின் ஹீரோனு நான் சொன்னேன். அதன் பிறகுதான் அவர் ‘வான்மதி’ எடுத்தார். அதன் பின்தான் ‘காதல்கோட்டை.’ ரெண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். தம்பி அஜித்தை எங்கேயோ கொடுப்போன படங்கள்.” என்றவர் திடீரென்று கண்கலங்க ஆரம்பித்தார். ஏன்? என்னாச்சு?
“அவர் என் படத்தில் சொந்தக்குரல்ல பேசணும்னு ஆசைப்பட்டார். ஆனா ‘அஜித் டப்பிங் பேசினா பட்ஜெட் அதிகமாகும். ஆகவே வேற ஆள் வச்சு டப்பிங் பேசிடலாம்’னு சொன்னார் படத்தின் இயக்குநர் ஜானகி செளந்தர். நான் செலவுக்கு பயந்துக் கொண்டு சரினு சொல்லிட்டேன். எனக்கு டெக்னிக்கலா அப்ப எதுவுமே தெரியாது. இயக்குநர் சொன்னார் அத செஞ்சிடுவோம்னு முடிவெடுத்துட்டேன். அது நான் செய்த மடத்தனம். தம்பி அஜித் எனக்கு பல வருஷ பழக்கம். எங்க வீட்லயே இருப்பார். எங்க அம்மாவை கேளுங்க, எங்க வீட்டுப்பிள்ளை அஜித். ஆனா பட்ஜெட்டை மனசில் வைத்து நான் இயக்குநர் பேச்சை கேட்டது பெரிய சிக்கலாக போய்விட்டது. அஜித்துக்கு நான் மிகப்பெரிய தப்பு செய்துவிட்டேன். அந்தத் தப்புக்கு நான் மனப்பூர்வமாக இத்தனை வருஷங்கள் கழிச்சு அஜித்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னை மன்னிப்பார்னும் நான் மனசார நம்புகிறேன். கட்டாயம் இத போடுங்க சார். இந்த ஒரே காரணத்துக்காகதான் அவரை இன்னைக்கு வரைக்கும் நேர்ல சந்திக்காம இருக்கேன்”என்கிறார் செளந்தர்.
“என் படத்தின் மொத்த ஷூட்டிங் 48 நாள். தம்பி அஜித்தை வைத்து நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் ரோட்லதான் ஷூட்டிங் எடுத்தோம். அங்க அப்ப பாலம் கிடையாது. ஒரு கார்னர் வீடு. அந்த வீட்டுக்கு முன்னாலதான் ட்ரெயின்ல அடிப்பட்டு கதைப்படி அஜித் இறப்பார். காதலிக்கும் பொண்ணு அவரை ஏற்றுக் கொள்ளலனு தற்கொலை பண்ணிப்பார். அந்த சீனை மிக அருமையா நடிச்சுக் கொடுத்தார்.
அந்த ஷூட்டிங்கிற்கு எஸ்.ஏ.சி வீட்ல இருந்து சாப்பாடு வரும். அங்கேயே ஸ்பாட்ல உட்கார்ந்து ஒண்ணா சாப்பிடுவோம். மந்தைவெளியிலதான் அப்ப அஜித் குடியிருந்தார். அடிக்கடி அவர் வீட்டுக்குப்போய் இருக்கேன். அவர் அம்மாகூட பழகியிருக்கேன். அந்தக் காலகட்டத்தில் தம்பி அஜித்தின் வாழ்க்கை மிகப்பெரிய போராட்டம். காலநேரம் பார்க்காம கடுமையா உழைச்சார் அவர். அந்த சமயம் கார்மெண்ட்ஸ் பிசினஸ் பண்ணிக் கொண்டிருந்தார். தம்பிக்கு அப்பவே ரேஸ் மேல விருப்பம். மிகச் சாதாரண வண்டியை அவர் ரேஸ் பைக்போல ஓட்டுவார். அப்ப அவர் எக்ஸ்ப்ளோர் பைக் வச்சிருந்தார். அவர் அந்த ஏரியாவில் வண்டி ஓட்டுவதே தனி அழகு. அவ்வளவு ஸ்டைலா ஓட்டுவார். நான் கூடவும் போயிருக்கேன். அந்தக் காலத்தை மறக்கவே முடியாது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் பைக்லயே வந்திடுவார். சிவாஜி எம்.ஜியாருக்கு ஒரே ஒரு ‘கூண்டுக்கிளி.’ அதே போல விஜய், அஜித்துக்கு என் படம் ‘ராஜாவின் பார்வையிலே.’ அதுபோதும் சார்” என்கிறார் செளந்தர்.
“முதல் நாள் ஷூட்டிங். கேமிராவை வைக்கப்போறோம் பயங்கர மழை. அன்றைக்கு செட் மட்டும் 50 ஆயிரம் மேல செலவு பண்ணியிருப்போம். முழுசா செட் நனைஞ்சு போச்சு. மழையிலயே நனைஞ்சுக்கிட்டே ரெண்டு பேரும் நடிக்கிறாங்க. அந்த ஷாட் முடிஞ்ச உடனேயே ஒரே கார்லயே அஜித், விஜய் உட்கார்ந்திருந்தாங்க. அந்தளவுக்கு நல்ல நண்பர்களாக இரண்டு பேருமே இருந்தாங்க. அந்த அன்புலதான் விஜய் எனக்கு ஐந்து லட்சம் கொடுத்தார். நலிந்த தயாரிப்பாளர் நிதியில இருந்து அவர் செய்த உதவியை நான் சாகும் வரை மறக்கவே முடியாது” என்கிறார் சௌந்தர்.