இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் ! கோலிக்கு இருக்கும் 'ஆப்ஷன்' என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் ! கோலிக்கு இருக்கும் 'ஆப்ஷன்' என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் ! கோலிக்கு இருக்கும் 'ஆப்ஷன்' என்ன?
Published on

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவின் 11 பேர் கொண்ட அணியை மாற்றாமல் களமிறக்கிய கோலிக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்க இருக்கும் 4 ஆவது டெஸ்ட் போட்டி கடுமையான சவாலை கொடுத்திருக்கிறது.

நாட்டிங்கம் டெஸ்ட் டிரா, லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெற்றி என அசரவைக்கும் 11 வீரர்களை கொண்டு லீட்ஸ் மைதானத்தில் களமிறங்கிய கோலிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது இங்கிலாந்து அணி. அதுவும் 76 ரன்கள், ஒரு இன்னிங்ஸ் வித்தியாசம் என படுதோல்வியை தழுவியது இந்தியா. இந்திய அணியின் தேர்வுமுறை குறித்து கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தொடரின் தலைவிதியை தீர்மானிக்க போகும் ஓவல் டெஸ்ட்டில் அணியில் சில மாற்றங்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் கோலி. இங்கிலாந்தை பொறுத்தவரை ஆடுகளம், வானிலை சூழல் ஆகியவற்றை கொண்ட அணித் தேர்வு முடிவு செய்யப்படும்.

ஓவல் மைதானம் எப்படி?

இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்துக்கு பின்பு மிகவும் முக்கியமானதும் புகழ்ப்பெற்ற மைதானமாக கருதப்படுவது ஓவல். இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 13 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓவல் மைதானத்தில் விளையாடி உள்ளது. அதில் இங்கிலாந்து 5 வெற்றியும், இந்தியா 1 வெற்றியும் பதிவு செய்துள்ளன. ஏழு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்தியா கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது என்று சொல்ல முடியாது. ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களை விடவும் ஓவலில் அதிக விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களே எடுத்துள்ளனர்.

கோலி முன் இருக்கும் ஆப்ஷன்கள் என்ன?

பேட்டிங்கை பொறுத்தவரை அதிலும் தொடக்க பேட்ஸ்மேன்களான கே.எஸ்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாகவே விளையாடி வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் ரோகித் சர்மா இதுவரை சதமடிக்கவில்லை என்றாலும் மிகவும் நிதானமாகவும் பக்குவமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல கே.எல்.ராகுலும் லார்ட்ஸில் அற்புதமான சதத்தை விளாசினார். நாட்டிங்கம்மில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் அரை சதமடித்தார். லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் மட்டுமே கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை. அதனால் இரண்டு தொடக்க வீரர்களை மாற்றும் நிர்பந்தம் இல்லை. அடுத்து மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் புஜாரா முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடினார்.

ஆனால் லார்ட்ஸ் டெஸ்ட்டின் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக விளையாடி 40 சொச்சம் ரன்களை சேர்த்தார். பின்பு மூன்றாவது டெஸ்ட்டில் 91 ரன்களை சேர்த்தார். இதனால் கோலிக்கு புஜாரா மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கும். இதன் காரணமாக புஜாராவும் ஓவல் டெஸ்ட்டில் இருந்து கழட்டிவிடப்பட வாய்ப்பில்லை. அடுத்து 4 ஆவது இடத்தில் களமிறங்குபவர் கேப்டன் கோலி. இதுவரை விளையாடியுள்ள 5 இன்னிங்ஸில் மொத்தம் 124 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலியின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், கேப்டனாயிற்றே அதனால் அவரிடத்தில் மாற்றம் இருக்காது.

5 ஆம் பேட்ஸ்மேன் யார்?

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே மொத்தம் 95 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 61 ரன்களை லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அடித்தார் ரஹானே. ஆனால் லீட்ஸ் டெஸ்ட்டில் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதனால் ஓவல் டெஸ்ட்டில் ரஹானேவை ஓரம்கட்டி வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதே எழ தொடங்கியிருக்கிறது. ரஹானே ஒருவேளை கழட்டிவிடப்பட்டால் அவருக்கு பதில் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கோலிக்கு மொத்தம் 3 ஆப்ஷன்கள் இருக்கிறது ரஹானேவின் இடத்தை நிரப்ப. அவருக்கு இருக்கும் முதல் சாய்ஸ் ஹனுமா விஹாரி. இந்திய அணிக்காக ஏற்கெனவே சிறப்பாக விளையாடியவர், காயத்தில் இருந்து மீண்டு லெவனில் இடம்பிடிக்க காத்திருக்கிறார்.

2-ஆவது சாய்ஸ் மயாங்க் அகர்வால். கே.எல்.ராகுலுக்கு முன்பாக கடந்த ஆண்டுகளில் ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறங்கி களக்கியவர். ஏற்கெனவே வெளிநாடு ஆடுகளங்களில் விளையாடி அனுபவம் கொண்டு இருப்பவர். அவரும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற பின்பு அணிக்குள் வர காத்திருக்கிறார். கடைசி சாய்ஸாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். டி20, ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் அவர் டி20 ஸ்டைலுக்கு செட் ஆவாரா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. ஆனால் உள்நாட்டு போட்டிகளில் அனுபவம் நிறைய இருக்கிறது சூர்யகுமார் யாதவுக்கு. அதனால் ரஹானேவை மாற்ற நினைத்தால் இந்த மூவரில் ஒருவர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்கள்.

ஆனால் 6 ஆம் இடத்தில் ரிஷப் பன்ட் தொடர்ந்து நீடிப்பார் என்றே தெரிகிறது. இளம் வீரர் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும். ஒருவேளை ஓவல் டெஸ்ட்டில் பண்ட் சொதப்பினால் மட்டுமே அணியில் அவரின் இடம் குறித்து யோசனை செய்யப்படும். 2018 இல் ஓவல் மைதானத்தில் ரிஷப் பன்ட் அருமையான சதத்தை பதிவு செய்தார் என்பது கவனிக்கதக்கது.

இஷாந்த் சர்மாவுக்கு 'கல்தா'?

இந்திய அணியில் ஓவல் மைதானத்தில் விளையாடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக முன்னிலையில் உள்ளார் இஷாந்த் ஷர்மா. ஆனாலும் ஓவல் டெஸ்ட்டில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்படுவார் என்றே தெரிகிறது. லீட்ஸ் டெஸ்ட்டில் 22 ஓவர்கள் வீசி 92 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. மேலும் இஷாந்த் சர்மாவால் பழைய வேகத்திலும் வீச முடியவில்லை. இதன் காரணமாக அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம். அவர் பேட்டிங்கிலும் கெட்டிக்காரர். அதேபோல ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பும் கோலிக்கு இருக்கிறது. எது எப்படியோ சில மாற்றங்களை கோலி செய்தால் மட்டுமே ஓவலில் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகும் என்பதே நிதர்சனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com