வறுமையின் பிடியில் தவிக்கும் ஆப்கன் மக்கள்: உடைமைகளை விற்று பசி தீர்க்கும் அவலம்!

வறுமையின் பிடியில் தவிக்கும் ஆப்கன் மக்கள்: உடைமைகளை விற்று பசி தீர்க்கும் அவலம்!
வறுமையின் பிடியில் தவிக்கும் ஆப்கன் மக்கள்: உடைமைகளை விற்று பசி தீர்க்கும் அவலம்!
Published on

ஆப்கானி்ஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் முற்றிலும் வெளியேறிவிட்ட நிலையில், அந்நாடு தற்போது முழுமையும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மீண்டும் தலிபான்கள் ஆட்சி தொடங்கியுள்ள ஆப்கானிஸ்தானில் மக்கள் கடுமையான வறுமையின் காரணமாக தங்கள் உடைமைகளை விற்கத் தொடங்கியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைவிட உலக நாடுகளை கவலைகொள்ள செய்துள்ள விஷயம், அங்கு நிலவி வரும் வறட்சி மற்றும் பொருளாதார சரிவு. ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பொருட்கள் இந்த மாதம் தீர்ந்துவிடும் என்று அறிவித்துள்ள நிலையில், அங்கு பலர் பட்டினியுடன் இருந்து வருகின்றனர். உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். அந்நாட்டின் பொருளாதாரம் விவசாய உற்பத்தி சார்ந்தே அமைந்திருக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சியால் விவசாயம் என்பது இல்லாமல் போய்விட்டது. போதாக்குறைக்கு கொரோனா பொருளாதாரத்தை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியது. இந்த தருணத்தில் ஆப்கன் உள்நாட்டு போர் அதிகமாகி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அடிமட்டத்துக்கு போய்விட்டது. தற்போது ஆட்சி அமைத்திருக்கும் தலிபான்கள் தங்கள் முன்னிருருக்கும் சவால்களை தாண்டி எந்தளவுக்கு பொருளாதாரத்தை சீர் செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை.

நாட்டின் மொத்த வருமானத்தில் 20 சதவிகிதத்திற்கும் மேல் வெளிநாட்டு உதவிகள் மூலம் பெற்று வரும் ஆப்கன் வருங்காலத்தில் தங்களின் நாட்டை மீள் கட்டமைக்க பெரும்பாலும் சீன மற்றும் ரஷ்யாவின் நிதி உதவியையே நம்பியிருப்பதாக சமீபத்தில் பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் தெரிவித்திருந்தார். தலிபான்கள் இப்படி பேசினாலும், ரஷ்யாவும் சீனாவும் இது தொடர்பாக திட்டவட்டமாக வாய் திறக்கவில்லை. எந்த மாதிரியான நிதி உதவிகள் கொடுக்கப்போகிறார்கள் என்பதையும் சீனா, ரஷ்யா தெளிவாக வெளிப்படுத்தவில்லை.

இப்படியான நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபை சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதாவது, தற்போதைய நிலையே தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானில் 97% மக்கள் அடுத்த ஆண்டின் மத்தியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்லும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதம் சர்வதேச உதவியிலிருந்து வந்தது. இப்போது, பல நாடுகள் தலிபானின் அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டதால், அந்நாடு பொருளாதார பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, ஆப்கனுக்காக 600 மில்லியன் டாலர் அளவில் நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்தார். இந்த நிதியின் மூன்றில் ஒரு பங்கு அந்நாட்டு மக்களின் உணவு தேவைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இதேபோல் அட்லாண்டிக் கவுன்சிலில் பேசிய, ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ஜெனரல் அஜ்மல் அஹ்மதி, ஆப்கன் மீதான உலகளாவிய தடைகள் நீக்கப்படாவிட்டால் விரைவில் அங்கு ஜிடிபி 10-20 சதவிகிதம் வரை சரியும் நிலை உண்டாகலாம் என்று எதிர்கால நிலையை எடுத்துரைத்துள்ளார்.

இந்த கடுமையான நிலை காரணமாக தற்போது ஆப்கன் மக்கள் தங்களின் உடைமைகளை விற்கத் தொடங்கியுள்ளனர். வறுமையின் காரணமாக, தங்கள் வீட்டில் இருக்கும் மெத்தை, கட்டில் போன்ற அத்தியாவசிய உடைமைகளை சொற்ப விலைக்கு விற்று வருகின்றனர். ஆப்கானியர்கள் பலரும் தங்களின் வீடுகளின் முன் சிறிய கடைகளை அமைத்து உடைமைகளை விற்கத் தொடங்கியுள்ளனர். வயிற்றுப் பசியை போக்க இந்த தொகை உதவும் என்பதால் இதுபோன்ற ஆப்கானியர்கள் பலரும் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, ஆப்கானியர்களுக்கு உறுதுணையாக இருக்க தயார் என்று இந்தியா தெரிவித்துள்ளது. உதவி வழங்க முன்வருவோரை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்றும், சமுதாயத்தில் அனைத்து பிரிவினருக்கும் பாரபட்சமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

- மலையரசு

தகவல் உறுதுணை: அல்ஜஸீரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com