என்ற ஒற்றை கேள்விக்கு, கடந்த வாரங்களில் ஆளுந்தரப்பிலிருந்து வந்த பதில்களில் சில இங்கே...
“நேரு ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது?”
“1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது?”
“இலங்கையில் இந்திய ராணுவத்தால் சிங்களப்பெண்களுக்கு என்ன நடந்தது?”
“டெல்லியில் நிர்பயாவுக்கு என்ன நடந்தது?”
“சீக்கியர்களுக்கு என்ன நடந்தது?”
“ராஜஸ்தானில் சிறுமிக்கு என்ன ஆனது?”
“நாங்குநேரியில் என்ன நடந்தது?”
- இப்படி இன்னும் சிலகூட வந்தன. இதில் எதுவுமே கேள்விக்கான பதில் இல்லை என்பதுதான் வேதனை. எல்லாமே எதிர்க்கேள்விகள்.
நீ செய்தது பெரிய தப்பா - நான் செய்தது பெரிய தப்பா’ ‘உன் ஆட்சிக்காலத்தில் அதிக பெண்கள் துன்புறுத்தப்பட்டனரா, என் ஆட்சிக்காலத்தில் அதிக பெண்கள் துன்புறுத்தப்பட்டனரா’ ‘உன் ஆட்சிக்காலத்தில் அதிக வன்கொடுமையா, என் ஆட்சிக்காலத்தில் அதிக வன்கொடுமையா’ என்ற மோதலைத்தான் நிகழ்த்துகிறார்கள். இன்னும்கூட இதுதான் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் யார் என்ற ஒரு கேள்வி மட்டுமல்ல... மணிப்பூர் பிரச்னை தடுக்கப்படாதது ஏன், அங்கு ஏன் வன்முறை இந்தளவுக்கு கட்டவிழ்த்துவிடப்பட்டது, அங்கு பெண்கள் மீதான பாதிப்புகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் நசுக்கப்படுள்ளது என எந்தக் கேள்விக்கும் இதுவரை உரிய தரவுகளோடு பதில்களில்லை.
என்ன கேள்வி கேட்டாலும் கடந்த கால கொடூர நிகழ்வுகள் நினைவுகூரப்பட்டு ‘அதைவிட இது பெருசா’ என்றே பதில்கள் வருகின்றன.
அதிகபட்சமாக, ‘நாங்கள் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவோம்’ என்ற வாக்குறுதி மட்டும் வருகிறது. ‘கடும் கட்டுப்பாடுகளுடன்’ இன்று மணிப்பூரில் ‘சுதந்திர’ தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த பதில்களையெல்லாம் கேட்டபிறகு, இந்த 76 வருட சுதந்திர இந்தியாவில் பெண்ணாய் வாழ்வதற்கும் பிற்படுத்தப்பட்டவராய் வாழ்வதற்கும் உண்மையில் அச்சப்பட வேண்டியுள்ளது.
‘நெருப்பில்லாம புகையுமா’ என்ற வக்கிர கேள்விகள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை விடாமல் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. இந்த 2023-லும், பள்ளிச் சிறுவர்கள் மனதிலும் சாதி எனும் விஷச்செடி பற்றிப்படர்ந்து கொடிவிட்டு கிடக்கிறது. இனி வரும் தலைமுறை மீதான நம்பிக்கையை, இந்த சாதியக் காற்று கொஞ்சம் அசைத்துப்பார்த்துவிட்டது. "சாதிகள் மட்டுமே சமுதாயம் என்றால் வீசும் காற்றிலும் விஷம் கலக்கட்டும்" என்ற கவிஞர் பழனிபாரதியின் வரிகள் முகத்தில் அறைகிறது. உண்மையில் அந்த விஷக்காற்றைத்தான் நாமெல்லாம் சுவாசிக்கிறோம்.
“இன்றைய போக்கு நிச்சயம் கவலை அளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது. பெரும் பாரத்தோடு முன்னேறிக்கொண்டே வந்த நாம், திடீரென அப்படியே பின்னோக்கி இழுக்கப்பட்டது போல இருக்கிறது.
இங்கு நாம் உணரவேண்டியது, 'பிரச்னைகளை வேறு திசையில் கையாள்வது, முந்தைய கால பிரச்னைகளை குறிப்பிட்டு இப்போதுள்ள பிரச்னையை பேசாமல் இருப்பது' போன்ற பாஜக - ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியலைத்தான். எனில் இதற்கு முன் கடந்த காலங்களில் இப்படியான தவறுகளும் குற்றச்செயல்களும் வன்முறைகளும் நடந்ததே இல்லையா, இவர்கள் சொல்லும் உதாரணங்களெல்லாம் பொய்க் குற்றச்சாட்டா என்றால், அப்படியில்லை. அப்போதும் நடந்துள்ளன. ஆனால் அந்த கட்சிகளெல்லாம் அப்படியான தவறுகளை கொள்கைகளாக கொண்டு வேண்டுமென்றே செய்யவில்லை.
மாறாக அங்கெல்லாம் அவர்களின் கைமீறி சில விஷயங்கள் நடந்தது. அதற்காக அக்கட்சிகள் எதுவும் இப்போதுவரை அச்சம்பவங்களை நியாயப்படுத்தவில்லை. ‘ஆமாம், அங்கு தவறு நடந்தது. அந்த இடத்தில் காவல்துறை அத்துமீறிவிட்டது, தோல்வியடைந்துவிட்டது’ என்றெல்லாம் ஒப்புக்கொண்டார்கள். கூடவே தங்கள் தோல்விகளுக்கான விலையையும் அந்தந்த கட்சிகள் கொடுத்துவிட்டன.
பாஜக-வின் கொள்கையே, மக்களை அழிக்க வேண்டும் - ஒரு கூட்டத்தை அழித்துதான் தங்களின் கொள்கையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் போன்றவைதான்.
- வழக்கறிஞர் அருள்மொழி
அதனால்தான் இவர்களிடம் 'ஒரு இடத்தில் ஏன் கலவரம் நடந்தது என்று கேட்டால், ‘அங்கு இந்த இனக்குழுவினர் இருந்தார்கள்’ ‘அங்கு தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்’ ‘அந்நிய நாட்டினர் ஊடுருவி கலவரத்தை தூண்டிவிட்டார்கள்’ ‘இவர்கள் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்றார்கள்’ என்றெல்லாம் கூறுகின்றனர். ஆக இறுதியில், அம்மக்களையே குற்றவாளியாக்குவார்கள். ஒருபோதும் தாங்கள்தான் பிரச்னை என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இப்படியானவர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்.
இவர்களின் உதவியோடு இன்று மதவாதம் வளர்ந்து வருகிறது. இதனால் எல்லாவற்றிலும் பெரும்பான்மைவாதம், அடையாள அரசியல் போன்றவை உருவாகின்றன. இதனால் மக்கள் வாழ்வதற்கே பெரும் அச்சுறுத்தலான சூழல் நிலவுகிறது.
இதிலும்கூட பெரும்பான்மையாளர்கள் என்று வந்துவிட்டால், முதலில் ‘நாம் இந்துக்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட மட்டுமே மக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். ஏனெனில் களத்தில் வந்து பார்த்தால், இந்துக்களிலேயே சாதிய பிரச்னைகள் பல இருக்கின்றன, பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இருக்க, ‘இந்துக்கள்’ என்ற ஒரு போர்வை மட்டுமே இங்கு இருப்பது போல கட்டமைக்கின்றனர். இதற்காக முதலில் சிறுபான்மை மக்கள் நம் எதிரிகள் போல சித்தரிக்கப்படுகின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் மதத்தின் பெயரால், மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழலை, நம்பிக்கையில்லாமல் வாழும் சூழலை சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். மட்டுமன்றி பெரும்பான்மைவாதத்தில் உரிமை மறுக்கப்படுவோரின் பார்வைக்கு, ‘நாமே உரிமை மறுக்கப்படும் இடத்தில்தான் இருக்கிறோம்’ என்பதே தெரிவதில்லை. அவர்கள் என்னவோ, நமக்கு எல்லாம் கிடைக்கிறதென்ற நினைப்பில் இருந்துவிட்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் நாங்குநேரி சம்பவம்.
இப்படி திட்டமிட்டு ஒரு மதத்தை மட்டும் வலிமைப்படுத்துகிற போது, அதன் உட்பிரிவுகள் கூர்மைப்படுத்தப்படுகிறது என்று பொருள். இப்படி ஒரு மதத்தை மட்டும் வலிமைப்படுத்தும் இவர்கள், அடுத்தபடியாக சாதியென வரும்போது, ‘சாதி என்பது அழகான சொல்’ - ‘சாதிப்பெருமை என்பது குடிப்பெருமை’ என்றெல்லாம் சொல்கின்றனர்.
பாம்பு கடித்தவர்களுக்கு, விஷமேறினால் வெத்தலையில் மிளகு வைத்து கடிக்க சொல்வார்கள். அப்படி கடிக்கும்போது, அவர்கள் காரமே தெரியாமல் சாப்பிட்டுவிட்டால், விஷம் தலைக்கேறிவிட்டதென பொருள்படுமாம். அப்படித்தான் சாதி நஞ்சு தலைக்கேறிவிட்டால், அவர்களுக்கு எதுவுமே தெரியாது.
இந்த சாதி நஞ்சு தலைக்கேறியவர்கள் நோக்கம், இங்கு சாதிய மோதல்கள் வரவேண்டும் என்பது மட்டுமே. அதற்காகவே உழைக்கும் இவர்கள், அதை நடத்திக்காட்டுவர். பின் வந்து ‘இதுதான் பெரியார் மண்ணா’ என்பார்கள். இவர்களையெல்லாம் முறியடித்து நாம் வெல்ல வேண்டும். வெல்வோம். அதுதான் பெரியார் மண். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே பெரியார் மண்ணாக மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் முழுமையான சுதந்திரத்தை சுவாசிக்க முடியும்.
சாதிய ஒடுக்குமுறை என்பதை போலவே, இன்னொரு ஒடுக்குமுறையும் இங்கு அறியப்பட வேண்டியதாக இருக்கிறது. அது
இன்று இங்கு நம் தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருப்பவர் உட்பட, உயரிய அரசமைப்பு பதவியில் இருப்பவர்கள் கூட குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசுகின்றனர். இன்னொருபக்கம், தேவதாசி முறையையும் ஆதரித்து பேசுகின்றார்கள்.
மதவாதம் அனைத்தும் முடியும் இடம், வீட்டிலுள்ள பெண்ணின் உடல் மீதுதான். ‘என் பேச்சைக்கேட்டு வீட்டுக்குள்ளேயே நான் சொல்வது போல இருக்க வேண்டும்’ ‘அடி உதை வாங்கினாலும் குடும்ப அமைப்பைவிட்டு வெளியே போகாதே’ ‘வெளியே போனால் ஆண் உன்னை தவறாகத்தான் பார்ப்பான், பேசுவான், நீ போகாத’ என்றெல்லாம் சொல்வது, பெண்ணை இன்னும் இன்னும் முடக்கும் செயல்கள்.
விடுதலை பெற்ற நாடு என நாம் இந்தியாவை சொல்லும்போது, அந்த விடுதலை பெண்களுக்கும் உண்டுதானே? எனில் பெண்ணுக்கு மட்டும் கட்டுப்பாட்டோடு சுதந்திரம் வழங்குவது எப்படி சரியாகும்? இதுவா பண்புள்ள சமூகம்? பெண் சுதந்திரமற்று கட்டுப்பாடுகளுடன் வாழ நிர்பந்திக்கப்படும்பட்சத்தில், இந்நாடு சுதந்திர நாடு என சொல்வதில் அர்த்தமில்லாமல் போகும்.
ஆக பெண்ணுக்கு சம வாய்ப்பும், பாதுகாப்பான சூழலும் கிடைக்க வேண்டும். இவை அனைத்தும் பெண்ணுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்கூட பொருந்தும்” என்றார்.
இதிலிருந்து நாம் மீண்டாகவேண்டும். அப்படி மீண்டு, அனைவருக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் வழங்கப்பட்டு, பொருளாதார ரீதியாகவோ பாலின அடிப்படையிலோ யாருக்கும் யாரும் அடிமையாக இல்லாமல் வாழும் பட்சத்தில் சுதந்திர இந்தியாவென இன்னும் பெருமையாக மார்தட்டி சொல்வது சரியாகவும் இருக்கும்!
ஆக சுதந்திர நாடென்கையில் அதற்கு பொருளாதார ரீதியாக விடுதலை பெற்று - மதவாத கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு - பாலின சமத்துவத்துடன் நாம் வாழவேண்டும். இவை எதுவுமே இல்லாமல் நாம் இந்நாளை கொண்டாடுவதென்பது, தீபாவளி பொங்கல் போல வெறும் இந்த ஒரு நாளுக்கான கொண்டாட்ட மனநிலை மட்டுமே.
இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற குரல்கள் வலுவாக ஒலித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் கல்கத்தாவின் முன்னாள் பிஷப்பான ஜே.ஈ.வெல்டன் "கடைசி பிரிட்டிஷ் வீரர் கப்பல் ஏறியவுடனேயே இந்தியா எதிரெதிர் இன, மத சக்திகளின் போர்க்களம் ஆகிவிடும். பிரிட்டிஷ் பேரரசு மெல்ல மெல்ல - ஆனால் - நிச்சயமாக உருவாக்கிய அமைதியான, முற்போக்கு நாகரிகம் ஓர் இரவில் அழிந்துவிடும்" என்றார். ஆனால் அதைப் பொய்யாக்கி - நிறைய ரத்தங்களும் சிந்தி - 76 ஆண்டுகள் கடந்துவிட்டோம்.
இந்த வேற்றுமைகள் நம்மைப் பிரிக்காமல், ஜனநாயகத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல் இன்னும் நிறைய சுதந்திர தினங்களைக் கொண்டாடத் தயாராவோம்.