இலவசத்தைத் தொடங்கிவைக்கும் வணிக நிறுவனங்கள்
இன்றைய உலகில், மக்கள் பெரும்பாலும் இலவசம் என்று சொல்லப்படும் மாய வலையில் முதலில் வீழ்ந்து விடுகின்றனர். பின்னர், அதற்கு கொஞ்ச நாட்களில் கட்டணம் வசூலிக்கப்படும் போதுதான் அதிலிருந்து வெளியேற முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.
அதாவது, முதலில் இலவசமாய் ஒன்றை வழங்கி, அதற்கு நம்மை அடிமையாக்கும் இந்த உலகம், பின்னர் சிறு தொகையை வசூலிக்க ஆரம்பித்து, அதன் பிறகு ஒவ்வொரு சேவைக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அரசியலில் ஆரம்பித்த இந்த வித்தை பயணம், தற்போது வணிகத்திலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. முக்கியமாக, வணிக நிறுவனங்கள் இதைத்தான் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகின்றன. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம்.
இலவசத்தைத் தொடங்கி வைத்த சிம் கார்டு நிறுவனங்கள்
இதற்கு, இலவசமாய் வழங்கப்பட்ட சிம் கார்டுகளை இங்கு முதல் உதாரணமாய் நினைவுபடுத்தலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல தொலைதொடர்பு நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சிம் கார்டுகளை இலவசமாக வழங்கி வந்தன. அதிலும் இலவச டேட்டா, போன்கால்கள், எஸ்.எம்.எஸ்கள், இதுதவிர இன்னும் எண்ணற்ற சலுகைகளை வழங்கி வந்தன. அதிலும் சில நிறுவனங்கள் இன்டெர்நெட் டேட்டாக்களை அள்ளி வீசின.
இதனால் மக்களும் போட்டி போட்டுக்கொண்டு 2-3 என சிம்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக சிம் நிறுவனங்கள், மாதம் ஒன்றுக்கு 1 ஜி.பி. டேட்டாவுடன் பிற சலுகைகளுக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயித்திருந்த நிலையில், ஜியோ நிறுவனம் அளவற்ற இணைய சேவை இன்னபிற சலுகைகளுடன் இலவச சிம்களை வழங்கி, சிம் உலகில் புரட்சி செய்தது. இதன் மூலம் ஸ்மார்ட்போனைக் வைத்திருந்த எல்லா மக்களும் இணையத்துடனேயே மூழ்கி இருந்தனர்.
இன்கம்மிங் கால் சேவை தற்போது இல்லை!
இதை நன்கு புரிந்துகொண்ட ஜியோ மற்றும் இதர சிம் நிறுவனங்கள் இலவசமாக வழங்கிய சிம்களுக்கு, பின்னர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கின. முக்கியமாக, வாழ்நாள் முழுவதும் இலவசமாக இருந்த இன்கம்மிங் கால் சேவை இப்போது இல்லவே இல்லை. மாதம் குறைந்தது 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்தான் சிம் ஆக்டிவேட் ஆக இருக்கும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலவசமாய் வழங்கி கட்டணத்தை வசூலிக்கும் கிரெடிட் கார்டுகள்
அதுபோல் சில வங்கி நிறுவனங்கள், வாழ்நாள் முழுவதற்குமான இலவச கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. உங்கள் சம்பளம் அல்லது மாத வருமானத்திற்கு மேல் உங்களுக்கு கடன் வசதியை வழங்கும் ஒரு சேவையே கிரெடிட் கார்டு ஆகும். அந்தத் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும். அதற்குமேல் கடந்தால் வட்டியுடன் சேர்த்து அந்த தொகையைச் செலுத்த வேண்டும். முதலில் இந்த கார்டு இலவசமாக வழங்கப்படுவதாகச் சொல்லும் வங்கி நிறுவனங்கள், பின்னர் அந்த அட்டையை பராமரிப்பதற்காக வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்கின்றன.
5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்
அதுபோல் ஒரு மாதத்துக்கு, எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாய் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற விதிமுறையை வங்கி நிறுவனங்கள் மாற்றி, 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் பிடிக்கப்படும் என்ற புதிய விதியைப் புகுத்தி அதற்கென கட்டணத்தையும் நிர்ணயம் செய்தன.
மேலும், தற்போது அனைவருக்கும் வங்கிச் சேவை அத்தியாவசியமாகி விட்டதால், அதன் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பணம் அனுப்ப, எஸ்.எம்.எஸ். பெற, பணப் பரிமாற்ற தகவல்களைப் பெற என அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டாலும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
விளம்பரமே இன்றி பார்ப்பதற்கு தனிக் கட்டணம்
இன்று பொழுதுபோக்கு உலகில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் யூடியூப் சேனல்கூட, இலவசமாய்த்தான் காட்டப்படுகிறது. ஆனால், அதுகூட சமீபகாலமாக கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ஒருகாலத்தில் விளம்பரங்கள் இல்லாமல் இருந்த யூடியூப் சேனல்கள், இன்று விளம்பரத்துடன்தான் தொடங்கப்படுகிறது. அந்த விளம்பரத்தை நீக்கிவிட்டு நாம் பார்த்தாலொழிய, விளம்பரமே இன்றி பார்ப்பதற்கு என தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதுபோல் கடந்த காலங்களில், ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எல்லாம் இலவசமாகக் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதற்கான உரிமத்தை வாங்கிய பிறகு, அவற்றைப் பார்ப்பதற்கு கட்டணத்தை நிர்ணயித்தன. அந்தச் சமயத்தில் வெறும் 5 நிமிடம் மட்டும் இலவசமாய் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அந்த 5 நிமிடத்திற்குப் பிறகு தானாகவே காட்சிகள் ரத்தாகிவிடும்.
ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம்
அதுபோல் பிரபல மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதில், ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரைப்போன்று மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் குறிப்பிட்ட வீடியோக்களைப் பார்ப்பதற்கு வருங்காலங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், இலவசமாய் தொடங்கிய யுபிஐ பரிவர்த்தனையிலும், இன்று வியாபாரியிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை தொடங்கியிருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ (UPI) முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) தெரிவித்திருந்தது. இது மக்களிடையே, அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய நிலையில், அதற்கு பே.டி.எம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்ட அறிக்கை
யுபிஐ வழியாக இரண்டு முறைகளில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. ஒன்று, வங்கிக்கணக்கில் இருந்து யுபிஐ ஐடி வழியாக மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தப்படுகிறது. இது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த முறை பரிவர்த்தனைக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் மற்றொரு முறையான மொபைல் வாலட்டில் இருந்து யுபிஐ வழியாக வேறொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தெரிவித்திருந்துதான் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
யுபிஐ பரிவர்த்தனை குறித்து பே.டி.எம் தந்த விளக்கம்
அதாவது, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் வாலட்டில் இருந்து யுபிஐ வழியாக 2000 ரூபாய்க்கு மேல் வியாபாரிகளுக்கு செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் (interchange fee) வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்திருந்தது. இந்த புதிய கட்டண முறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்திருந்தது. இது, மக்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய நிலையில், இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது பே.டிஎம்.
இது தொடர்பான பே.டி.எமின் ட்விட்டர் பக்கத்தில், “யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிக் கணக்கு வாயிலாகவோ, வாலட் வாயிலாகவோ பணம் செலுத்தும்போது எந்தவொரு வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த தேவை இல்லை. பொய் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். மொபைல் பரிவர்த்தனைகள் நம் பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும்” என்று தெரிவித்துள்ளது.
அதாவது, மொபைல் வாலட்டில் இருந்து ஒரு வியாபாரிக்கு 2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ வழியாக பணம் செலுத்தும்போது, அந்த வியாபாரியிடம் இருந்து 1.1% கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர, பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து யுபிஐ பரிவர்த்தனை செய்ய இப்போதைக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாவிட்டாலும், யூபிஐ பயன்பாட்டுக்காக வியாபாரிகள் அந்த 1.1 சதவிகித கட்டணத்தை செலுத்த நேரிடுவதால், எப்படியும் வியாபாரிகள் தாங்கள் விற்கும் பொருட்களின் விலையை கூட்டும் பட்சத்தில் அந்த விலையேற்றம் வாடிக்கையாளரான பொதுமக்கள் மீதே சுமத்தப்படும் என்ற அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.