செப்டம்பர் 10... ஏ.எல் விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ’தலைவி’ ரிலீஸ் ஆகிறது. ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள்... வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுபோல் படத்தின் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் கெட் -அப் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன. இந்த நிலையில், ‘தலைவி’ படம் குறித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜுவிடம் பேசினோம்...
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ வெளியாவது குறித்து?
”அம்மாவின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை வரலாறு எல்லோருக்கும் தெரியவேண்டும். அதற்காக, படமாக எடுக்கலாம். தமிழகத் தலைவர்களான பெரியார், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார்கள். அதேபோல, அம்மாவின் வாழ்க்கை வரலாறாகவே ’தலைவி’ படம் வந்திருந்தால் நிச்சயம் வரவேற்கிறேன். அம்மாவுக்கு சிறுவயதிலேயே தந்தை இல்லை. வழிகாட்டும் நேரத்தில் தனது அம்மாவையும் இழந்து விட்டார். தனியொரு பெண்ணாக சமூகத்தில் சாதிக்க முடியும் என்பதற்கு அம்மா மிகப்பெரிய உதாரணம். ஈஸியாகவெல்லாம் பதவிக்கு வந்துவிடவில்லை; முதல்வர் ஆகிவிடவில்லை. அரசியல் எவ்வளவு கடினமானது என்பது, அதில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். ஆண்களான எங்களுக்கே அப்படி இருக்கும்போது, அம்மா ஒரு பெண். அவருக்கு எப்படி இருந்திருக்கும்? எவ்வளவு சவால்களை சந்தித்திருப்பார். அவரது, வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அம்மா தைரியமானவர்; தன்னம்பிக்கையானவர். பெண்களுக்கு முன்மாதிரி.
அம்மாவின் தன்னம்பிக்கைக்கு ஒரேயொரு உதாரணம், மத்திய அரசு நடத்திய தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் அம்மா பேசிக்கொண்டிருக்கும்போது பெல் அடித்து உட்காரச் சொன்னார்கள். ”நான் 7 கோடி தமிழர்களுக்காக பேச வந்திருக்கிறேன். அவர்களின் பிரச்சனைக் குறித்து பேசும்போது நீங்கள் பெல் அடித்து உட்காரச் சொல்வது சரியில்லை” என்றுக்கூறி வெளிநடப்பு செய்த ஒரே பெண் முதல்வர். அதேமாதிரி, காவிரி பிரச்னைக்காக 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். இப்படியொரு துணிச்சலானவரை எங்கும் பார்க்க முடியாது.
மிக முக்கியமாக ‘தொட்டில் குழந்தை திட்டம்’ கொண்டுவந்து பெண் சிசுக்கொலையைக் குறைத்தார். இதெல்லாம், பெரிய வரலாற்றுச் சாதனை. அதனால், அம்மாவின் வாழ்க்கை வரலாறு மக்களுக்குப்போய் சேரவேண்டும். ’தலைவி’ படத்தில் அம்மாவின் வாழ்க்கையை நன்கு ஹைலைட் செய்திருந்தால் நாங்கள் வரவேற்போம்”.
’தலைவி’ படம் பிரிவியு ஷோவில் பார்த்தீர்களா?
“இன்னும் பார்க்கவில்லை. பிரிவியு ஷோவுக்கு யாரும் அழைக்கவில்லை. அதனால், வெளியான பின்புதான் 10 ஆம் தேதி தியேட்டரில் மக்களோடு மக்களாக பார்க்கலாம் என்றிருக்கிறேன். படம் ரீலா இருக்கா ரியலா இருக்கா என்பது படத்தை பார்த்தால்தான் தெரியும். படம் பார்த்துவிட்டு பேசினால் இன்னும் சரியாக இருக்கும்”.
கங்கனா ரனாவத்தின் ’தலைவி’ புகைப்படங்கள் ஜெயலலிதாபோல் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்ததே?
“நான் இன்னும் ’தலைவி’ புகைப்படங்களைப் பார்க்கவில்லை. ஆனால்,மேக்கப் எல்லாம் போட்டு அம்மா மாதிரி படத்தில் கொண்டுவந்து விடுவார்கள். பெரியார் வாழ்க்கை வரலாற்று படத்தில் சத்யராஜை பெரியார் மாதிரி கொண்டு வந்தார்கள். ’காமராஜ்’ படம் எடுக்கும்போதும் அதேமாதிரி கொண்டு வந்தார்கள். அதனால், அம்மா மாதிரியே கங்கனா ரனாவத்தையும் கொண்டுவர வாய்ப்பிருக்கு”.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று கங்கனா மரியாதை செலுத்தியதை எப்படி பார்க்கிறீர்கள்?
“எல்லோரும் அம்மாவிடம் ஆசி வாங்கத்தானே நினைவிடம் கட்டி வைத்திருக்கிறோம். நினைவிடத்தை வெறும் நினைவிடமாக மட்டும் அமைக்கவில்லை. மியூசியம், அம்மா படித்த புத்தகங்கள், அம்மா பொன்மொழிகள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், எல்லோரும் அம்மா நினைவிடத்திற்குச் செல்லலாம். கங்கனா ரனாவத் கேரக்டரோடு ஒன்றிப்போய் உணர்வால் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அவராகத்தான் சென்றுள்ளார். யாரும் சொல்லிப் போகவில்லை. அவர், அம்மாவின் வாழ்க்கையை ஒரு நடிப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. அம்மா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியதே படத்தில் நல்லா பண்ணிருப்பார் என்பதை உணர முடிகிறது. அதேசமயம், கலைஞர் நினைவிடத்துக்கு சென்றதை, அவரும் கலைத்துறையில் இருந்ததால் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். ’கலைஞர் 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்றால், அதைத்தாண்டி 70 ஆண்டுகள் கலைத்துறையில் இருந்தார்’ என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார். அதனால், கங்கனா ரனாவத் அரசியல்வாதி என்ற உணர்வோடு அங்கு சென்றிருக்கமாட்டார். அதனால், இதில் அரசியலை கலக்க வேண்டாம்”.