’சூப்பர் ஸ்டார்களின் சூப்பர் நாயகி’- சில்க் ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

’சூப்பர் ஸ்டார்களின் சூப்பர் நாயகி’- சில்க் ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
’சூப்பர் ஸ்டார்களின் சூப்பர் நாயகி’- சில்க் ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
Published on

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் டி.பி ராஜலட்சுமி, சரோஜா தேவி, பத்மினி, ஜெயலலிதா, ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா, மாதவி, மீனா,குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, தேவயானி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 100-க்கும் மேற்பட்டவர்கள் முன்னணி நடிகைகளாக இருந்திருக்கிறார்கள்; இருந்தும் வருகிறார்கள். ஆனால், அந்தகால கிட்ஸ்கள் மட்டுமல்ல… 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என எந்த கால கிட்ஸ்கள் மத்தியிலும் ’ஹிட்’ அடித்தவர் என்றால், அது நடிகை சில்க் ஸ்மிதாதான்.

’See look.. see look’ என்று ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் பார்த்து ரசிக்க வைத்தவர். அவர், இறந்து 25 வருடங்கள் ஆகிறது. ஆனாலும், தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்திய மக்களின் ஹார்ட்டின் நாயகியாக இறந்தும் வாழ்வதால்தான் பாலிவுட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை ‘தி டர்ட்டி பிக்சர்’ என படமாக எடுத்து வெற்றியும் பெற்றார்கள். அப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை வித்யா பாலனுக்கு கிடைத்தது. அப்படியொரு புகழ் மிக்க நடிகையான சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் இன்று.

காந்தப்பார்வையால் வசீகரித்த விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா 1960-ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார். ஆனாலும், அவரது, பூர்வீகம் கரூர் என்பதால், தன்னை தமிழச்சி என்று சொல்வதில்தான் பெருமை கொண்டிருந்தார். குடும்ப வறுமையால் சினிமா நடிகர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்தவர், வினுசக்கரவர்த்தியால் ’வண்டிச்சக்கரம்’ படத்தில் சில்க் என்ற கேரக்டரில் அறிமுகமாகி, பின்னாளில் பலமொழி சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஜோடியானார் என்பது வரலாறு.

’பொன்மேனி உருகுதே’, ’அடி ஏய் மனம் நில்லுனா நிக்காதடி’, ’நேத்து ராத்திரி’, ’மெல்ல மெல்ல என்னை தொட்டு’, ’ஆடிமாசம்’, ’பேசக்கூடாது’, ’வா மாமா வசமாத்தான் மாட்டிக்கிட்ட’, ’பூவே இளைய பூவே’, ’வெத்தல போட்ட சோக்குல’ என சில்க் ஸ்மிதா ஆடிப்பாடிய பாடல்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் ரஜினி, கமல்ஹாசன் என ஸ்டார் நடிகர்கள்தான். ஆனால், நம் நினைவுகளில் இப்போதுவரை மின்னிக்கொண்டிருப்பது என்னவோ ’சில்க்’ ஸ்மிதாதான். அவர், உயிருடன் இருந்திருந்தால் ’அழகே பொறாமைப்படும் பேரழகு’ என்று பாகுபலி படத்தில் இடம்பிடித்த வசனம் சில்க் ஸ்மிதாவுக்கே இப்போதும் பொருந்திப் போயிருக்கும் என்று பலர் சொல்வதுண்டு. அப்படியொரு பேரழகியான சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை அனைத்து கால கிட்ஸ்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

சில்க் ஸ்மிதாவை நேரில் சந்தித்தவரும் தீவிர ரசிகருமான பிரபல ஓவியர் ஸ்யாமிடம் ”உங்களின் மனம் கவர்ந்த ஆதர்ச நாயகி யார்?” என்று கேட்டால் ’சில்க் ஸ்மிதா’ என பட்டென பதில் வருகிறது. ஆதர்ச நாயகியின் நினைவுகளில் மூழ்கி ஒரு ஓவியர் பார்வையில் பேசத்தொடங்கினார் ஓவியர் ஸ்யாம்,

” சில்க் ஸ்மிதாவோட அழகைப்பார்த்து ரசிக்காத;பிரமிக்காத நாளே இல்லை. அதுவும், அவங்களோட கண்ணு இருக்கே சான்ஸே இல்ல. ஒரு மாடலிங் கேர்ளுக்கு கழுத்துக்கு கீழ இருக்கிற இரண்டு பக்க எலும்புக்கு மேலேயும் குழி இருக்கணும். அந்தக்குழியில் ரெண்டு ஸ்பூன் எண்ணையை விட்டா அப்படியே நிக்கணும். அதுமட்டுமில்ல, அந்த எலும்பு பளபளப்பா மின்னணும். அதுக்காக, ஃபேஷன் ஷோவுல கலந்துக்கிற மாடலிங் கேர்ள்ஸ் துளசி, வெங்காய ஜூஸ்ல ஆரம்பிச்சு விதவிதமான ஜூஸ்களை சாப்பிடுவாங்க. ஆனா, பளபளப்பான போர்ன், அந்தக்குழி சில்க் ஸ்மிதாவுக்கு இயல்பாகவே இருந்ததை கவனிச்சிருக்கேன். அதாவது, எல்லோருக்குமே உள்ளுக்குள்ள எலும்புக்கூடுதான் இருக்கு. ஆனா, அந்த எலும்புக்கூட்டோட வடிவம்தான் ஒரு பெண்ணோட அழகா கட்டமைக்குது.

சில்க் ஸ்மிதாவோட எலும்புகள் ரொம்ப அழகா கட்டமைக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, அவங்களோட நெஞ்சுக்கும் இடுப்புக்கும் அவ்வளவு நீண்ட பயணம் இருக்கும். அந்த வளைவு சாதாரண வளைவு இல்ல. அதுவும், அவங்க பளிச்சுன்னு ரொம்ப வெள்ளையா இருந்திருந்தா ரசிச்சுட்டு அப்படியே விட்டிருப்போம். ஆனா, சாக்லேட் கலர்ல ஒரு கிரேக்க பேரழகி மாதிரி இருந்ததாலதான் இன்னைக்கு வரைக்கும் அவங்களை ரசிச்சுக்கிட்டே இருக்கிறோம். அவங்களோட லிப்ஸ், மூக்கு, கன்னம் யார் ஜாடையிலும் இருக்காது. அவங்க யார் மாதிரியும் கிடையாது. அவங்களோட நீண்ட ஹேர்ஸ்டைல்... இப்படி அவங்களுக்கு ஆயிரமாயிரம் லைக்ஸ் கொடுத்துக்கிட்டே இருக்கலாம். குழந்தைத்தனமாத்தான் இருக்கும் அவங்களோட பேச்சு.

அப்போ, எனக்கு 18 வயசு. அம்புலிமாமாவுல நான் ஓவியரா இருக்கும்போது பக்கத்திலேயே ராகிணி ஸ்டூடியோவுல‘ அன்று பெய்த மழை’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. அப்போத்தான் என்னோட ஆதர்ச நாயகியை நேர்லப்பார்த்தேன். பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல ஷூட்டிங் ப்ரேக்ல இருந்த என்னோட ஆதர்ச நாயகி, “என்னப் பார்க்குற?”ன்னு திடீர்னு என்னைப்பார்த்து கேட்டப்போ ஒரு நிமிஷம் நிலைகுலைஞ்சு போயிட்டேன். மறுபடியும் அதே குரல்,


“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”-பட்டுன்னு சொல்வேன்னு நான் நினைச்சுக்கூடப்பார்க்கல. அவங்க புன்னகைச்சுக்கிட்டே, “ம்... எந்த யூனிட்?”- அதாவது நானும் ஷூட்டிங்ல ஒர்க் பன்றவன்னு நினைச்சுக்கிட்டு கேட்டாங்க.

“நான் சினிமா ஆர்ட்டிஸ்ட்லாம் இல்ல மேடம். பத்திரிகை ஆர்டிஸ்ட்”

“ஓ... நல்லா வரைவீங்களா?”

“உங்களோட ஓவியத்தை வரைஞ்சதால அடில்லாம் வாங்கியிருக்கேன்”

“என்ன சொல்றீங்க?”

”அலைகள் ஓய்வதில்லை... சூரக்கோட்டை சிங்கக்குட்டி படம்லாம் பார்த்துட்டுவந்து கணக்கு நோட்டுலயும் புக்லேயும் உங்க படத்தையே வரைஞ்சுவெச்சுட்டேன். கணக்கு வாத்தியார் பார்த்துட்டு செம்ம அடி... பின்னிட்டாரு”
அதைக்கேட்டு கோல்டு காயின்களை அள்ளிவீசியதுபோன்று இருந்தது, அவரது சிரிப்பு.

“இப்போ அந்த புக் இருக்கா?”

”ஊர்லதான் இருக்கு. கண்டிப்பா எடுத்துட்டு வந்துக் காட்டுறேங்க”

“என்னை ஒரு ஓவியம் வரைஞ்சு எடுத்துட்டு வர்றீங்களா?”

“இதை நீங்கக் கேட்டுத்தானா செய்வேன்?”


-இதுதான் எனது ஆதர்ச நாயகியை பார்த்தது முதலும் கடைசியுமாய். அதற்குப்பிறகு, அவர் ஷூட்டிங்கில் பிசியாகிவிட்டதால் அவரைப் பார்க்கமுடியவில்லை. அவங்கள எவ்ளோ பார்த்தாலும் ‘போர்’ அடிக்காது. தனிப்பட்ட முறையில் ஒரு கவர்ச்சி நடிகையா ஜெயிக்கிறதுங்கிறது சாதாரண விஷயம் இல்ல. அதுவும், சாப்பாடு சமைச்சு வியாபாரம் செஞ்சு பொழைச்சுக்கிட்டிருந்த ஒரு பெண் இந்தளவுக்கு வந்தது எவ்வளவு பெரிய கிரேட்!

அவங்களோட இடத்தை யாராலையும் நிரப்பமுடியல; நிரப்பவும் முடியாது. பாலுமகேந்திராவின் ஆஸ்தான கதாநாயகி அவங்கதான். எவ்ளோ அழகான நடிகை ஸ்ரீதேவி. அவங்களுக்கே புடிச்ச நடிகை சில்க் ஸ்மிதாதான்னு அவங்களே ரசிச்சு சொல்லியிருக்காங்க. சுஜாதாக்கிட்ட சில்க் ஸ்மிதாவைப்பற்றி பேச ஆரம்பிச்சோம்னா போதும். பிரமிச்சுப்போயி பேசுவாரு. அப்படியொரு ஊடுருவல் அழகு அவங்க.

அதனாலதானே, அவங்க கடிச்சுட்டு வெச்ச ஒரு ஆப்பிள் 1000 ரூபாய்க்கு ஏலம் போனது. பிரதாப் போத்தனின் படங்களில் மாடர்லிங் கேர்ளா நடிச்சுருப்பாங்க. அடேங்கப்பா... அசிங்கம்.. அறுவறுப்பு இல்லாத கவர்ச்சி... பெண்களே ரசிக்கும் நடிகை. அவங்களோட முரட்டுத்தனத்தை பாக்யராஜ் ரகசியபோலீஸ் 100 படத்துல ரொம்ப அழகா பயன்படுத்தியிருப்பாரு. இப்படி என்னோட ஆதர்ச நாயகியைப்பற்றி சொல்லிக்கிட்டே போகலாம்” என்று பூரிப்புடன் பேசுகிறார், ஓவியர் ஸ்யாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com