மிஸ்டர் விஜய் தனி ஒருவனா ? கூட்டத்தில் ஒருவனா ?
ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விஜய் பற்றி பொதுவாக சில விஷயங்கள் பரப்பபட்டு வந்தது. அதாவது, நடிகர் விஜய் ரொம்ப மெனக்கெட்டு நடிக்க மாட்டார், அதிகமாக வெளியே பேசமாட்டார், பொது மேடைகளில் பேச தவிர்ப்பார், மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர், எளிதில் சந்திக்க முடியாது என சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் குற்றச்சாட்டு என்று கூற முடியாவிட்டாலும், பொது மக்களிடமும் அவரின் ரசிகர்களுக்கும் இவ்வாறான பிம்பம் ஏற்படுத்தப்பட்டது.
இவற்றை நிரூபிப்பதுபோலவே விஜயின் செயல்பாடுகளும் இருந்து வந்தது. ஆனால் "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என உலக தத்துவத்துக்கு விஜய் மட்டும் விதிவிலக்கா என்ன. காலங்கள் கூட கூட ஆண்டுகள் உருண்டோட, வயதும் ஏற ஏற விஜயும் மாறத் தொடங்கினார். பொது மேடைகளில் அதிகம் தென்பட்டார், இளைஞர்களை இன்ஸ்பையர் செய்யும் பேச்சுகளை மேடைகளில் பேசினார். இதில் உச்சக்கட்டமாக டெல்லியில் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போதே பலர் விஜய்க்கு அரசியல் ஆசை வந்துவிட்டதால்தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதையெல்லாம் விஜய் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மேலே மேலே முன்னேறிக்கொண்டிருந்தார். மிக முக்கியமாக விஜய் அடுத்தடுத்த செய்த பல உதவிகளும், போராட்டங்களில் பங்கேற்பும் மிகப் பெரிய விளம்பரம் மேற்கொண்டு செய்யவில்லை. இந்த எளிமையான நடவடிக்கை அவரை மேலே மேலே உயர்த்தியது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு மெரினாவில் போராட்டக்காரர்கள் மத்தியில் அமர்ந்து அமைதியாக பங்கேற்ற போட்டோக்கள் அப்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கடுத்து நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை, நடிகர் விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் உள்ள அனிதாவின் வீட்டுக்கு திடீரென காலை சென்றார் விஜய். அங்கு அனிதாவின் தந்தை சண்முகத்தை சந்தித்தார், அவருடன் தரையில் அமர்ந்து ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார். விஜய் தரையில் அமர்ந்து இருக்கும் போட்டாக்களை விஜயின் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கம் நடத்திய மெளனப் போராட்டத்திற்கும் முதல் ஆளாய் வந்து நின்றார் விஜய். முதல் ஆளாக வந்தவர் இறுதி நபராக கூட்டத்தைவிட்டு வெளியேறினார். எந்தப் போராட்டமாக இருந்தாலும் விளம்பரத்துக்காக இல்லாமல் உணர்வுப் பூர்மவமாக பங்கேற்பவர் நடிகர் விஜய். மே 22 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இங்கேயும் பகலில் செல்லாமல் உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு இரவில் சென்றார், நிதியுதவி அளித்தார். பகலில் போனால் ரசிகர்கள் அதிகம் கூடுவர் என்பதால் நள்ளிரவு நேரத்தில் அமைதியாக சென்றுள்ளார் விஜய். தனது ரசிகர் ஒருவரது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்தார்.
‘நேரம் கடந்து வந்துடேன். அதற்காக தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்’ என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கூறினார் விஜய். இதான் இந்த எளிமைதான் விஜய். விமர்சனங்கள் விஜய் மீதும் அவர் நடிப்பின் மீதும், அவர் நடவடிக்கைகள் மீதும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவர் மீதான விமர்சனங்களுக்கு வெகுண்டு எழுந்து சூடான வார்த்தைகளில் பதில் அளித்ததில்லை ! இனியும் அப்படிதான் இருப்பார் விஜய், ஏனென்றால் அவர் பெரும் வெற்றிகள்தான் அவரை விமர்சிப்பவர்களுக்கான பதில்கள்.