தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைபிடித்த மாணவ, மாணவிகளை இன்று சந்தித்துள்ளார் நடிகர் விஜய். சென்னை நீலாங்கரையில் பாராட்டு விழாக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் பேசியவற்றின் முழு விவரங்களை, இங்கே அறிவோம்:
“என் நெஞ்சில் குடி இருக்கும், பொது தேர்வில் சாதனை படைத்த நண்பர்கள் நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம்” என்றுதான் இன்று தனது உரையை தொடங்கினார் நடிகர் விஜய்.
தொடர்ந்து பேசுகையில், “நான் நிறைய விழாக்களில் பேசி இருந்தாலும் இது போன்ற விழாவில் பேசுவது இது தான் முதல் முறை. என் மனதில் ஏதோ ஒரு பொறுப்பு வந்ததுப் போல நான் உணர்கிறேன். உங்களை பார்க்கும் பொழுது எனக்கு எனது பள்ளி நாட்களின் ஞாபகம் வருகிறது. நான் உங்களைப்போன்று மிகவும் Bright ஸ்டூடண்ட் கிடையாது. நான் ஜஸ்ட் பாஸ் ஸ்டூடண்ட் அவ்வளவு தான். நான் நடிகனாக வரவில்லை என்றால் நான் டாக்டராக மாறி இருப்பேன் என்று சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமாதான் அதை நோக்கி தான் நான் பயணப்பட்டேன்.
இதுபோல் ஒரு விழாவை ஏற்பாடு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நான் கேட்ட ஒரு அழகான டயலாக். ‘காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, ரூபாய் இருந்தா பிடிங்கிப்பானுங்க. ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது’ (அசுரன் படத்திலிருந்து). என்னை ரொம்ப பாதித்த ஒரு வரியாக இது இருந்தது. இது உண்மையான எதார்த்தம். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு ஏதாவது ஒன்று செய்யவேண்டும் என்று என் மைண்டில் ஓடிக்கொண்டே இருந்தது, அதற்கான நேரம் தான் இது என்று நான் நினைக்கிறேன்.
இந்த மாணவர்களுக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும், இந்த விழாவுக்காக பாடுபட்ட மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஆனந்த் அண்ணாவுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் இலவசமாக கிடைப்பது அட்வைஸ் தான். அது உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது என்பது எனக்கு தெரியும். ஆனால் படி என்று சொல்வதை விட இந்த விழாவில் வேறென்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
எனக்கு பிடித்த சில விஷயங்களை ஷேர் பண்ணுகிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு முழுமையான கல்வி என்பது ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்து பட்டம் பெறுவது அல்ல. ஜன்ஸ்டீன் என்ற அறிவியல் அறிஞர் சொன்ன ஒரு விஷயம் தான் என் நியாபகத்திற்கு வருகிறது. ‘நாம் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்று கற்றதை மறந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ அது தான் கல்வி.’ ஆரம்பத்தில் இந்த வரி எனக்கு புரியவில்லை அப்புறம் புரிந்தது.
எனக்கே புரிந்தது என்றால் உங்களுக்கு புரியாதா? படித்த அறிவியலோ, கணக்கோ, வரலாறோ, பொருளாதாரமோ ... இவற்றை எல்லாம் நீக்கிவிட்டால் எது எஞ்சி இருக்கும்? உங்களுடைய கேரக்டர் (நன்நடத்தை) - உங்களின் சிந்திக்கும் திறன். படிப்பு முக்கியம் தான், ஆனால் அதை தவிர உங்களின் கேரக்டருக்கும் சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் முழுமையான கல்வியானது கிடைக்கிறது.
உதாரணத்திற்கு கேரக்டரைப்பற்றி ஒரு அழகான வரி ஒன்று உள்ளது when, wealth is lost nothing is lost,
when health is lost something is lost.
when character is lost everything is lost.
அதாவது
நீங்க பணத்தை இழந்தால் எதையும் இழக்கவில்லை.
ஆரோக்கியத்தை இழந்தால் ஏதோ ஒன்றை இழப்பீர்கள்.
ஆனால் குணத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழப்பீர்கள்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் இத்தனை நாட்கள் வீட்டில் அம்மா அப்பா கண்காணிப்பிலோ அல்லது சொந்தகாரகளின் இருப்பிடத்திலேயோ தங்கி இருந்து படித்திருக்கலாம். இப்பொழுது மேல் படிப்பிற்காக் நீங்கள் வேறு இடங்களுக்கு செல்ல நேரிடலாம். அங்கு உங்களுக்கு அனைத்துமே புதியதானவையாக இருக்கும். இடம், நண்பர்கள்.... இப்படி, அங்கு உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை சரியாக, சுய கட்டுப்பாட்டுடன் கையாளவேண்டும். நமது வாழ்க்கை நமது கைகளில் என்பதை மறக்கக்கூடாது. அதே சமயம் சுய கட்டுப்பாடு மிக அவசியம்.
அதுபோல் சிந்திக்கும் திறன். இப்பொழுது ஷோசியல் மீடியாவில் வரும் பொய் செய்திகள் உங்களின் கவனத்தை திசை திருப்பும். அதில் எதை எடுத்துக்கொள்ளலாம், எதை விட்டு விடலாம், எதை நம்பலாம், எதை நம்ப வேண்டாம், எது உண்மை எது பொய் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான அறிவை பெறுவதற்கு நீங்கள் பாடப்புத்தகத்தை தாண்டி படிக்க வேண்டும். எல்லா தலைவர்கள் பற்றியும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
அம்பேத்கர், பெரியார், காமராஜர் இப்படி பல தலைவர்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். இதில் நல்ல செய்திகளை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றவற்றை விட்டு விடுங்கள். இது தான் இன்றைய உங்களின் Take some message.
முன்பு ஒரு பழமொழி இருக்கும், உன் நண்பனை பற்றி சொல்லு உன்னை பற்றி நான் சொல்றேன் என்று. ஆனால் அது இப்பொழுது மாறி விட்டது. நீ எந்த ஷோசியல் மீடியாவை ஃபாலோ பண்றேன்னு சொல்லு, நான் உன்னை பற்றி சொல்கிறேன் - என்பதுதான் இன்றைய பழமொழி.
நீங்கதான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து பல புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்க தான் தேர்ந்தெடுக்க போறீங்க. நம்ம விரலை வைத்துக்கொண்டு நம்ம கண்ணையே குத்துவது என்று கேள்வி பட்டு இருக்கிறீர்களா? அது தான் இப்பொழுது நடக்கிறது. எது...? காசு வாங்கி ஓட்டு போடுறது.
ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாய் என்றால், ஒரு தொகுதியில கிட்டதட்ட 1,50,000 கொடுக்கிறார்கள் என்றால் என்ன... ஒரு 15,00,00,000 கோடி ஆச்சா... ஒருத்தர் ஒரு பதினைந்து கோடி செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன்பாக அவர் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்? இதை எல்லாம் எஜுகேஸன் ஸிஸ்டத்தில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களிடத்தில், “அப்பா... அம்மா... இனி காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க...”ன்னு சொல்லி பாருங்க. சும்மா ட்ரை பண்ணி பாருங்க... இத நான் ஏன் சொல்றேன்னா... இது எப்போ நடக்குதோ அப்பொழுது தான் உங்களின் கல்வி முறை முழுமை அடையும்.
கடைசியாக ஒன்று கூறிக்கொள்கிறேன். உங்கள் தெருவிலேயோ அல்லது உங்கள் நண்பர்களோ எக்ஸாமில் தோல்வியடைந்தவர்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்களுடன் நேரம் கிடைக்கும் பொழுது பேசி அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்க. எக்ஸாமில் பாஸ் செய்வது ஈஸின்னு சொல்லுங்க... உங்களின் நம்பிக்கையான பேச்சால் அவர்கள் வெற்றி பெற்றால், இதை நீங்க கொடுக்கின்ற பரிசாக நான் எடுத்துக்கொள்கிறேன்.
வெற்றிபெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தோல்வியடைந்தவர்கள் விரைவாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
உங்களை டிஸ்கரேஜ் செய்ய ஒரு கூட்டம் இருக்கும் அவர்களை பற்றி கவலைப்படாமல், உங்களுக்குள் இருக்கும் ஒருத்தனின், ஒருத்தியின் பேச்சை கேளுங்கள்.
மாணவர்களே... எச்சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் தவறான முடிவெடுக்காமல் வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துக்கள்
வளர்ப்போம் கல்வி”