காமெடி நடிகர்களும் சிக்ஸ்பேக் வைக்கலாம் என்று தன்னம்பிக்கையூட்டியவர் சூரி!

காமெடி நடிகர்களும் சிக்ஸ்பேக் வைக்கலாம் என்று தன்னம்பிக்கையூட்டியவர் சூரி!
காமெடி நடிகர்களும் சிக்ஸ்பேக் வைக்கலாம் என்று  தன்னம்பிக்கையூட்டியவர் சூரி!
Published on

தமிழ் முன்னணி நடிகர் சூரியின் 43-வது பிறந்தநாள் அவரது ரசிகர்களாலும் திரைத்துறையினராலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

காமெடி நடிகர் என்றால் அதே உடல்வாகுடன்தான் இருக்கவேண்டும் என்ற மாயையை உடைத்தவர் சூரி. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஹீரோக்கள் மட்டுமே வைத்து வந்த ’சிக்ஸ்பேக்’ உடல் கட்டமைப்பை காமெடி நடிகர்களாலும் வைக்க முடியும் என்று நிரூபித்தவர் சூரிதான். சீமராஜா படத்தில் சிக்ஸ்பேக் வைத்து தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் வைத்த முதல் காமெடி நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். உடலை வருத்தி சிக்ஸ்பேக் வைத்த உழைப்புதான், இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அவரை ஹீரோவாகவும் சிக்ஸர் அடிக்க வைத்துள்ளது.

நடிகர் சூரி 1977-ஆம் ஆண்டு மதுரையில் முத்துசாமி சேங்கையரசி தம்பதிகளின் ஆறு மகன்களில் ஒருவராகப் பிறந்தார். குடும்ப வறுமையால் பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்போடு நிறுத்தியவர் நடிப்பார்வத்தால் சென்னைக்கு வந்தார். ஆனால், சினிமாவில் நுழைவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று உணர்த்தியது காலம். பசி, பட்டினி என்று நாட்கள் கழிந்தது. அதனால், பசியைப் போக்க கிடைத்த வேலையை செய்யலாம் என்று லாரி கிளீனர், பெயிண்ட்டர் வேலை என்று கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துவந்தார். ஆனாலும், அவருக்குள் நடிப்பு ஆர்வம் இருந்துகொண்டேதான் வந்திருக்கிறது. அதனால், சினிமாக் கதவுகளையும் தட்டிக்கொண்டே இருந்தவருக்கு சிறு சிறு வேடங்கள் கிடைத்தன. ஆனால், அவரை ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம்தான்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், படத்தில் 50 க்கும் மேற்பட்ட பரோட்டாக்களை ஒரே நேரத்தில் அசால்ட்டாக சாப்பிட்டு தமிழகம் முழுக்க பிரபலமானார். உணவுப்பிரியர்கள் அதனை மீம்ஸ்களாக தெறிக்கவிட்டனர். அதன்பிறகு, சூரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கத் துவங்கினார். வெண்ணிலா கபடிக்குழு கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. இந்த 11 வருடங்களில் சூரி அடைந்திருக்கும் இடம் என்பது சாதாரணமானதல்ல. 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் என்பதே தமிழ் சினிமாவில் அவருக்கான இடத்தையும் தமிழ் மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டும்.

மிகக்குறிப்பாக, சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்தி பறவையில் நண்பராக நடித்தார். அதிலிருந்து, சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், சீமராஜா, நம்மவீட்டுப்பிள்ளை வரை தொடர்ச்சியாக சூரிதான் சிவகார்த்திகேயனின் நண்பர். நிஜத்திலும் நண்பராக உள்ளார்.

அதேபோல, நடிகர் விமலுடன் களவாணி படத்தில் நடித்தவர், வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா,புலி வால், தேசிங்கு ராஜா, மாப்ள சிங்கம் தொடர்ச்சியாக நடித்தார். சமீபத்தில் சர்ச்சையில்கூட நண்பர்கள் இருவரும் சிக்கினார்கள். இப்படியே, நடிகர் விஜய்,  சசிகுமார், சூர்யா படங்களிலும் சூரி தொடர்ந்து நடித்து வருகிறார். திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் நல்ல நண்பராக இருந்தால் மட்டுமே சினிமாவில் தொடர்ந்து நடிப்பார்கள்.அதற்கு சூரி ஒரு உதாரணம்.  அஜித் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகர்களின் நண்பர் மட்டுமல்ல. இயக்குநர்களின் நண்பரும் கூட, காரணம் வெண்ணிலா கபடிக்குழுவில் சுசீந்திரன் இயக்கத்தில் புகழ் பெற்றவர் அவரின் நான் மகான் அல்ல, பாண்டியநாடு, பாயும் புலி, கென்னடி  கிளப் வரை தொடர்ந்து நடித்தார். அதேபோல, இயக்குநர் பாண்டிராஜின் எல்லா படங்களிலும் சூரி தவறாமல் இடம் பிடித்துவிடுவார். இயக்குநர்களுடன் நல்ல நட்பு இருந்தால்தான் இப்படி எல்லா படத்திலும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், படத்தில் மட்டுமல்ல. நிஜத்திலும் நடிகர்களின் இயக்குநர்களின் நண்பர்தான்.

இந்தக் கொரோனா சூழலில் எல்லோரும் வீட்டில் முடங்கிக்கிடக்க சூரி தனது குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com