ஓடிடி திரைப் பார்வை: இதயத்தை இனிக்கவைக்கும் ’மதுரம்’ - மலையாள சினிமாவின் மற்றொரு ’மகுடம்’

ஓடிடி திரைப் பார்வை: இதயத்தை இனிக்கவைக்கும் ’மதுரம்’ - மலையாள சினிமாவின் மற்றொரு ’மகுடம்’
ஓடிடி திரைப் பார்வை: இதயத்தை இனிக்கவைக்கும் ’மதுரம்’ - மலையாள சினிமாவின் மற்றொரு ’மகுடம்’
Published on

காதல் மனைவியோ நிச்சயிக்கப்பட்ட மனைவியோ, இளம் மனைவியோ வயதான மனைவியோ மாறாத அன்புடன் எப்போதும் காதலித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நம் இதயத்தை தேனில் நனைத்து இனிக்க இனிக்க சொல்லியிருக்கிறது ‘மதுரம்’.

அஹமது கபீர் இயக்கியுள்ள இந்த மலையாளப் படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ், ஜாஃபர் இடுக்கி, அர்ஜுன் அசோகன், ஸ்ருதி ராமச்சந்திரன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வாகாப், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்கள். ஜோஜு ஜார்ஜ் தயாரித்து நடித்துள்ளார். ஜிதின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அரசு மருத்துவமனையின் காத்திருப்போர் அறைதான் கதைக்களம். திருமணமாகி மூன்று நாள்கள் மட்டுமே வாழ்ந்த காதல் மனைவி எழுந்து நடந்துவிடமாட்டாளா என்ற ஏக்கத்தில் ஒன்பது மாதங்களாக நம்பிக்கையோடு காத்திருக்கும் கணவன் சாபுவாக ஜோஜு ஜார்ஜ். 40 வருட காதல் மனைவியின் மூட்டு அறுவை சிகிச்சைக்காக வந்திருக்கும் ரவியாக இந்திரன்ஸ். மனைவியை விவாகரத்து செய்யும் மனநிலையுடன் அம்மாவின் சிகிச்சைக்காக வரும் அர்ஜுன் அசோகன். ‘மகனாக அவரைப் பார்த்துக்கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு’ என்று அப்பாவின் ஆபரேஷனுக்காக வரும் ஃபஹிம் சாஃபர் என அந்தக் காத்திருப்போர் அறையில்தான், ஃப்ளாஷ்பேக்குகள் வந்து சங்கமிக்கின்றன. அடுத்தடுத்து யாருடைய கதை? என்னென்ன காட்சிகள் வரும்? என்று நம்மையும் அந்த அறையில் அமரவைத்து ஆவலோடு காக்க வைக்கிறது திரைக்கதை.

பிறந்தநாள் என்றாலே கேக் என்ற சம்பிரதாயத்தை கட் செய்துவிட்டு, காதலிக்கு பிடித்த பிரியாணியில் கேண்டிலை வைத்துக் கொண்டாட ஆரம்பிக்கும்போதே, வழக்கமான படம் இல்லை ‘இது ஸ்பெஷல்’ என்ற ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. அதுவும் அந்த பிரியாணி, மீன் குழம்பு, வறுத்த மீன், அப்பளம், தேங்காய் சட்னி என்றெல்லாம் வித விதமான உணவுகளை காண்பித்து ரசிகர்களை ’ருசிகர்களாகவும்’ மாற்றியிருக்கிறார்கள். ஃபுல் கட்டு கட்டிவிட்டு படம் பார்த்தால்கூட பசியை தூண்டிவிடுகின்றன படத்தில் வரும் உணவுக்காட்சிகள். அதுவும், காதலோடு சமைக்கும்போது, ’அதில் ஒரு ஸ்பெஷல் டேஸ்ட்’ ஏற்படும் என்பது சுவைப்பட சொல்லப்பட்டிருக்கிறது.

சிகிச்சையில் இருக்கும் மனைவியின் துணிகளை காயப்போட்டுக்கொண்டே “இந்தமாதிரி சமயத்துல நாம பொண்டாண்டிகளுக்கு செய்யுறது பாக்கியம்டா. இதை, நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன். ரொம்ப வருஷமா நம்ம துணிகளை அவங்கதான துவைச்சாங்க. இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு” என்று இந்திரன்ஸ் சொல்ல “எனக்கு கல்யாணம் பண்ணினதுமே அந்த பாக்கியம் கிடைச்சுடுச்சு” என்கிறார் ஜோஜு ஜார்ஜ. மனைவி மீதான பேரன்பை பரிமாறிக்கொள்ளும் காட்சியில் இருவருமே நெகிழவைத்து சமூகத்திற்கும் பரிமாற்றம் செய்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகள் என்றாலே லஞ்சம், அலட்சியம், அழுகை, ஓலம், புறக்கணிப்பு, கவலை என பார்த்து பார்த்து பழகிப்போன மக்களுக்கு ஆறுதல், அக்கறை, அரவணைப்பு, சந்தோஷம், காதல் என அரசு மருத்துவமனையை நம்பிக்கையூட்டும் இடமாக காண்பித்திருப்பதுதான் திரைக்கதையின் பெரிய ப்ளஸ்.

மருத்துவமனையின் காத்திருப்போர் அறையிலும் காதல் ஏற்படலாம் என்பதை ஃபஹிம் சாஃபர் காதல் மூலம் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போனது செம்ம சுவாரஸ்யம். அதுமட்டுமா?... அர்ஜுன் அசோகனையும் குழப்பமான மனநிலையில் விவாகரத்து செய்வதை தவிர்த்து, மனைவியுடன் சேர்த்துவைத்து காதலிக்க வைக்கிறது, அதே அரசு மருத்துவமனையின் காத்திருப்போர் அறை. அவர் விரும்பியதுபோல் தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தால் தனி அறையில் தங்கியிருந்திருப்பார். தனியாகவே வாழ்க்கையை தொடர்ந்திருப்பார்.

விபத்துக்குள்ளானவரை அழைத்துவந்து அட்மிட் செய்துவிட்டு காசு வேணாம் என்று செல்லும் ஆட்டோக்காரரில் ஆரம்பித்து, ’பில் ஏறிக்கிட்டே போகுது நீ பார்த்து பொறுமையா கொடுப்பா’ என்று மனிதத்தோடு பேசும் டீக்கடைக்காரர், ஜோஜு ஜார்ஜ் காதலுக்கு ’பாலமாகவும்’ பணமில்லாமல் தவிக்கும்போது பணம் கொடுத்து ’பலமாகவும்’ இருக்கும் ஹோட்டல் கடைக்காரர் ஜாஃபர் இடுக்கி என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் நம் இதயத்தில் மனிதத்தை அழுத்தமாக விதைத்து கதகளி ஆடுகிறார்கள்.

“மேடம்… உங்கப்பாக்கிட்டேயிருந்து லெட்டர் வந்திருக்கு” இளம் போஸ்ட்மேன் ரவி சொன்னவுடன் உற்சாகப் புன்னகையுடன் துள்ளிக்குதித்து ஓடிவருகிறாள் சுலேகா. வாங்கிய கடிதத்தை கட்டியணைத்தபடி கண்களாலேயே ரவியை கட்டிப்போட்டுவிட்டு ஆவலோடு உள்ளே செல்கிறாள். காரணம், கடிதம் அப்பா அனுப்பியது அல்ல. அப்பா அனுப்பியதாகச் சொல்லி போஸ்ட்மேன் காதலன் ரவி தினந்தோறும் கொடுக்கும் கடிதம்தான் அது. மாதத்திற்கொருமுறை கடிதம் அனுப்பிய அப்பா, ஆறுமாதத்திற்கொருமுறை, வருடத்திற்கொருமுறை என்றிருக்க, அப்பாவின் பெயரில் தினந்தோறும் கடிதங்களைக் கொடுக்க ஆரம்பித்து ஒருக்கட்டத்தில் சுலேகாவின் வீட்டில் மாட்டிக்கொள்கிறார் போஸ்ட்மேன் ரவி. இப்படியொரு காட்சி படத்தில் இல்லவே இல்லை. ஆனால், ’ஃபோர்ட்டி இயர்ஸ் ரவி வெட்ஸ் சுலேகா’ என்று அடிக்கடி மகிழ்ச்சியுன் வெளிப்படுத்தும் ரிட்டயர்டு போஸ்ட்மேன் இந்திரன்ஸ் தனது காதல் ஃப்ளாஷ்பேக்கை, போஸ்ட் கார்டு சைஸில் டயலாக்காக சொன்னாலும் நம் கற்பனையிலேயே காட்சிப்படுத்திவிடுகிறார்கள். அதாவது,ரவி காதல் வசனங்கள் மூலம் சாபுவின் காதலையும் சாபு-சித்ரா காதல் காட்சிகள் மூலம் ரவி- சுலேகா காதலையும் கற்பனை செய்ய வைத்துவிடுகிறது.

கோவிந்த் வசந்தாவின் இசையில் ‘பரிமித நேரம்’ பாடலில் கண்களை உருட்டி கன்னக்குழியில் நம்மையும் விழவைத்துவிடுகிறார் நாயகி ஸ்ருதி ராமச்சந்திரன். படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் நம்மை தாலாட்டி ஸ்பெஷல் சோறூட்டுகிறது இப்பாடல். பின்னணி இசையும் இப்பாடலும்தான் மதுரத்துக்கு ’மதுரம்’ சேர்த்திருக்கிறது.

’வீட்டில் மனைவிதான் சமைக்கவேண்டும், துணி துவைக்கவேண்டும், வீட்டை சுத்தம் செய்யவேண்டும், கணவனைப் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்ற பழைய வழக்கங்களை காதல் மருந்தை செலுத்தி ஆண்களின் இதயத்தை தூய்மைப்படுத்திய முயற்சிக்காக இயக்குநர் அஹமது கபீரை ’அகம்’ மகிழ்ந்து பாராட்டலாம். ’மூன்று வேளையும் சமைக்கணும், துணி துவைக்கணும், வீட்டை சுத்தம் செய்யணும், உன்னையும் பார்த்துக்கிறேன்னு சொன்னேன். அது, உண்மையாகிடுச்சுல்ல’ என்று ஜோஜு ஜார்ஜ் சொல்லும்போதே நம் கண்களிலிருந்து நீர் ததும்பிவிடுகிறது.

அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றாலே தரமான சிகிச்சை கிடைக்கும் என்று படம் முழுக்கக்கூறி நம்பிக்கையூட்டிய இயக்குநர், மருத்து-மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனையில் கட்டணம் வசூலிப்பதில்லை என்பதையும் சரியாக சொல்லியிருக்கலாம். ஆனால், அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளுக்கு கட்டணம் வசூலிப்பதுபோல் படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பது முரண். இதை, காத்திருப்போர் அறையில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்களிடம் இயக்குநர் விசாரித்திருந்தாலே தெரிந்து கொண்டிருக்கலாம்.

மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக கிடக்கும் மனைவியிடம்’உன்னைப் பார்க்க வரணும்னாக்கூட பர்மிஷன் கேட்டு, கியூல நின்னு அஞ்சு நிமிஷம்தான் பார்க்கமுடியுது. ஆனா, இனிமே அப்படியில்ல. எந்த தடையும் இல்லாம எப்பவுமே நாம ரொமான்ஸ் பண்ணப்போறோம்’ என்று ஜோஜு ஜார்ஜ் மனம் மாறும் காட்சிகள், ஒருவரை குணப்படுத்த மருத்துவச் சிகிச்சையைத்தாண்டி, கூடவே இருந்து அன்புசெலுத்தி பார்த்துக்கொள்ளும் ‘கேர்’தான் என்பதை உணர்த்துகிறது. தன் மனைவிக்கு ’அற்புதம்’ நிகழ்ந்துவிடாதா என ஏக்கத்தோடு காத்திருக்கும் அவர், இறுதியில் எடுக்கும் முடிவுதான் ’அற்புதமானது’.

‘இனி அவ்ளோதான்’ என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்று வெறுமையாகிப்போன ஒவ்வொருவருக்கும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ‘இனிதான் இனிப்பான வாழ்க்கையே தொடங்குகிறது’ என்ற பாசிட்டிவ் எனர்ஜியை பாசமாக ஊட்டி வாழ்தலின் இனிமையை உணர்த்தி புத்துயிர் கொடுக்கிறது. மொத்தத்தில், நம் இதயங்களை இனிக்க வைக்கிறது ’மதுரம்’.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com