தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக நடைபெறும் ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் உடுமலைப்பேட்டை சங்கர், திருவாரூர் அபிராமி, நெல்லை கல்பனா, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி, கண்ணகி - முருகேசன் என ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தியுள்ளது தஞ்சாவூர் ஐஸ்வர்யா ஆணவப் படுகொலை.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் நவீன் என்பவரும், நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யா என்பவரும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நவீன், கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தறி ஓட்டும் வேலை செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த தகவல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, ஐஸ்வர்யாவுக்கு போன் செய்த அவரது சகோதரர், 'ஊருக்கு வா தான் உன்னை அழைக்க வருகிறேன்' என்று கூறியுள்ளார். இதனால் பீதியடைந்த ஐஸ்வர்யா, 'நாம் இருவரும் வேறு எங்காவது போய் விடுவோம்' என்று நவீனிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நவீனின் நண்பர்கள் உதவியுடன் இருவரும் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதோடு அதை வீடியோவும் எடுத்துள்ளனர்.
இது ஐஸ்வர்யாவின் பெற்றோர்களுக்கு தெரிய வர, ஐஸ்வர்யாவை தேடி திருப்பூருக்குச் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அங்கு இல்லாததை அறிந்த அவர்கள் அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது நவீனின் நண்பர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த நரேஷ் என்பவர் மூலமாக தங்க வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அவரிடம் விசாரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவலர் ஒருவரை அனுப்பி ஐஸ்வர்யாவை அழைத்து வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நவீன் உடன் இருந்த ஐஸ்வர்யாவை அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி அதிகாலை நவீனுக்கு போன் செய்த அவரது நண்பர் ஐஸ்வர்யாவை கொலை செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளார். இதற்கிடையே ஐஸ்வர்யா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததை அடுத்து, காவல் துறையினருக்கு கூட தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டனர். இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நவீன் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்தி கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இது தற்கொலை இல்லை கொலை என்பதும் ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்டு அதன் பிறகு இறந்த உடலை எரித்துள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடாந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா ஆகிய இருவரையும் பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இது போன்ற ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற காரணம் என்ன? சாதி மறுப்பு திருமணங்களில், தலையிடும் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்கிறதா? ஆணவக் கொலைகளை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்று பெண்ணிய செயல்பாட்டாளர் வழக்கறிஞர் திலகவதி கூறிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்....
இந்த சமூகத்தில் ஆணவக் கொலைக்கு முக்கிய காரணம் ஆணாதிக்கம் தான். பெண்கள் என் பேச்சைக் கேட்கணும். என் கட்டுப்பாடுகளை தாண்டி செயல்படக் கூடாது. எனக்கு கீழே இருப்பவர்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடாது. இதுதான் அடிப்படையான சிந்தனையா இருக்கு. இந்த சிந்தனையை உடைத்து பெண்கள் சுய தேர்வு பண்ணும்போது ஆணவக் கொலைகள் நடைபெறுகிறது. பெண்கள் சாதியை மீறியிருப்பாங்க. அல்லது அப்பா அம்மா பேச்சை மீறியிருப்பாங்க. இதை பெண்கள் பண்ணும் போதுதான் ஆணவக் கொலையாக மாறுது.
சில இடங்களில ஆணவக் கொலைகள் பண்ணப்படுவது ஆண்களாக இருக்கலாம். ஆனால் இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஒரு பெண்ணாகதான் இருப்பாங்க. ஒரு பெண் இந்த கட்டுப்பாடுகளை மீறும்போது தான் ஆணவக் கொலைகள் நடக்குது. ஆணாதிக்கமும் சாதியும் ஒன்னோடு ஒன்னு பின்னிப்பிணைந்திருப்பது தான் இதற்கு காரணம். இந்த பெண்ணின் கருவில எந்த சாதிய குழந்தை வளரணும். அல்லது எந்த நபருடைய குழந்தை வரணும் என்று முடிவெடுக்கும் உரிமை பெத்தவங்களுக்கோ, அல்லது அந்த சமூக பெரியவங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவங்க நெனச்சுக்கிறாங்க. ஒரு பெண் தங்களை மீறி போகும் போது அந்த சமூகத்துல கலப்பு வந்துவிடக் கூடாது. வேறு சாதி குழந்தை நம் குழுவில் வந்துவிடக் கூடாது அப்படி வருவது நமக்கு அசிங்கம் அவமானம் அப்படீன்னு நெனைக்கிறாங்க.
அடிப்படையான சாதியை இங்கு ஒழிக்காமல், ஆணவக் கொலைகளை ஒழிக்க முடியாது. காதலும், சுய தேர்வும் ஒரு பெண்ணுடைய அடிப்படையான உரிமை சார்ந்த விசயம் என்பதை புரிய வைக்காம நம்மால் இங்கு ஒன்னும் பண்ண முடியாது. சாதி ஆணவக் கொலைக்கு தனி சிறப்புச் சட்டம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனெற்றால் கொலை வேற ஆணவக் கொலை வேற. கொலை என்பது தனிப்பட்ட பிரச்னை, ஆனால் ஆணவக் கொலை என்பது ஒரு சமூகத்திற்கு எதிரானது. ஒரு சாதி ஒடுக்கு முறைக்கு எதிரானது. ஒரு பெண் தனியா எப்படி முடிவெடுக்கலாம் அப்படீங்கிற பெண்ணியத்திற்கும் பெண்ணிய சிந்தனைக்கும் எதிரானது. இந்த சிந்தனைகள் பெண்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்துதான் ஆணவக் கொலைகள் நடக்குது.
இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது அவர்களை அழைத்து காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்துவது சட்டப்படி தவறு. 18 வயதிற்கு மேலே இருக்கிற ஒரு பெண், தான் எங்கே இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. அந்தப் பெண் 18 வயதிற்கு உள்ளே இருந்தாலும் தனது அப்பா அம்மா கூட போக விருப்பம் இல்லையென்றால் காவல் நிலையத்தில் சொல்லிவிட்டு காப்பகங்களுக்குச் செல்லலாம். ஒரு பெண்ணையோ, குழந்தையையோ கட்டாயப்படுத்தி அப்பா அம்மா கூட அனுப்புவது மோசமான ஒரு செயல். அதை காவல்துறையினர் தொடர்ச்சியா செய்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு தனியாக முடிவெடுக்கும் உரிமை கிடையாது என்று காவல் துறையினரும் நம்புறாங்க. அப்பா அம்மா கூட போகணும், சாதியை காப்பாத்தணும், பொற்றோர் பேச்சைக் கேட்கணும், சமூக கட்டமைப்பை காப்பத்தணும் என்ற சிந்தனையோடு அடிப்படை காவல் துறையினர் முதல் உயரதிகாரிகள் வரை இருக்காங்க. அவங்களோட மனநிலை மாறி, சட்டத்திற்கு உட்பட்டு நடந்தாலே சரியாக இருக்கும். காவல்துறை மீது சிறிய புகார் வந்தால்கூட அரசும் உயரதிகாரிகளும் தலையிட்டு இதை ஒரு சீரியஸான பிரச்னையாக பார்க்க வேண்டும். அதுவரை ஆணவக் கொலை நடந்து கொண்டுதான் இருக்கும்.
சின்ன சின்ன சாதி பிரச்னைகள் வரும் போதே அதை ஒரு சீரியஸான பிரச்னையாக பார்க்க வேண்டும். அதை ஒரு சாதாரண பிரச்னை என கடந்து செல்லக் கூடாது. ஆனால், அப்படி அரசு அதிகாரிகளோ, அரசோ அபபடிப் பார்ப்பதில்லை. என்றைக்கு சாதிய குற்றங்களை கொடூரமான குற்றங்களாக உடனே எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்கிறார்களோ அன்றைக்குதான் சாதிய ரீதியிலான குற்றங்களும், குற்றங்கள்தான் என்று மக்களுக்கு புரிய ஆரம்பிக்கும். அதேபோல் சமத்துவம் சார்ந்து விழிப்புணர்வை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பரப்ப வேண்டும். இவ்வளவு முற்போக்கான தமிழ்நாட்டில் இன்னமும் ஆணவக் கொலைகள் நடக்கிறது என்றால் கட்டாயமாக முற்போக்கு என்று சொல்வதில் நமக்குதான் கஷ்டமாக இருக்கிறது.
நீங்களும் நானும் சேர்ந்ததுதான் சமூகம். அப்பா அம்மா மற்றவர்களின் பேச்சைக் கேட்டு ஆணவப் படுகொலை செய்யும் அளவிற்கு போகிறார்கள் என்றால் முதலில் அவர்கள் அப்பா அம்மாவா என்ற சந்தேகம்தான் வருது. பெத்த புள்ளைகளை கொலை செய்யும் அளவிற்கு ஒரு அப்பா அம்மா போவாங்களா. நம்ம கலாச்சாரத்துல இவங்க என்ன சொல்லுவாங்களோ அவங்க என்ன சொல்லுவாங்களோ என்றுதான் நாம சின்ன சின்ன முடிவு கூட எடுக்குறோம். நம்ம கூட இருந்து பேசுனவங்க நாளைக்கு ஒரு பிரச்னை என்றால் வந்து நிற்கமாட்டாங்க என்பதை பெற்றோர் உணரவேண்டும். ஆணவக் கொலைகளை ஆதரிப்பது போல் நிறைய திரைப்படங்கள் வருது, நம்ம வீட்டு பெண்கள் நாம சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பன போன்ற படங்கள் கூட எடுக்குறாங்க. அது போன்ற படங்களை எடுக்கக் கூடாது. மாறாக சமத்துவம் பேசும் படங்கள் மூலமாக, நாடகங்கள் மூலமாக, அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதை செய்யாமல் இங்கு சாதியை ஒழிப்பது கஷ்டம்தான்” என்றார்.
கரு.பழனியப்பனின் சிவப்பதிகாரம் படம் இறுதியில் “ஏதாவது செய்யணும் சார்” என்ற வசனத்துடன் முடியும். அதேபோல், தமிழ்நாடு அரசும் மற்றும் மனித குலத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் இத்தகைய கொடூரமான கொலைகளை தடுத்து நிறுத்த நிச்சயம் ஏதேனும் புதிய, அழுத்தமான முன்னெடுப்புகளை மேற்கொண்டே ஆக வேண்டும். எத்தனையோ விஷயங்களில் முன்னிலையில் இருக்கும் நம்முடைய மாநிலம் இத்தகைய அவப்பெயர்களுக்கு மீண்டும் மீண்டும் ஆளாவதை தடுக்க வேண்டும்.