உத்தரப் பிரதேசத்தில் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளும் புதிய புயலை கிளப்பி வருகின்றன. குறிப்பாக, 'இலவச மின்சாரம்' உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் முக்கிய அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் 'இலவச மின்சாரம்'. உத்தரப் பிரதேசத்தில் தேர்தலில் 403 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி 100 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்களை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகிறது. அப்படித்தான் முதல் கட்சியாக 'ஆம் ஆத்மி', இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியைக் கையிலெடுத்தது.
செப்டம்பர் 16 அன்று லக்னோ வந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ''ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றால், ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்களின் விவசாயத்திற்காக வரம்பற்ற இலவச மின்சாரம் பெறுவார்கள்' என்று வாக்குறுதி அளித்தார். மேலும், 'நிலுவையில் உள்ள 3.8 மில்லியன் மின்சார கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதுடன் மாநிலத்தில் 24 மணிநேரம் தடையற்ற மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்' என்ற வாக்குறுதியையும் வழங்கினார்.
ஆம் ஆத்மி கையிலெடுத்த 'இலவச மின்சாரம்' வாக்குறுதி இப்போது உத்தரப் பிரதேசத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஆம் ஆத்மியை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் இலவச மின்சாரம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்னும் இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும், அந்தக் கட்சியின் மற்ற தலைவர்கள் தங்களின் பேச்சில், பேனர் மற்றும் போஸ்டர்கள் மூலமாக 300 யூனிட் மின்சாரம் தருவதாக உறுதியளித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி இலவச மின்சாரத் திட்டத்தை கையிலெடுக்க காரணம், உத்திரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் மின்சார செலவுகள். 2017-ல் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்த பிறகு நவம்பர் 30, 2017 அன்று மின் கட்டணங்கள் சராசரியாக 12.7 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதுவே 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மின் கட்டணங்கள் சராசரியாக 11.7 சதவிகிதம் உயர்த்தப்பட்டன. மொத்தமாக யோகி ஆதித்யநாத் ஆட்சி காலத்தில் மட்டும் 24 சதவீதம் அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு தற்போது தேர்தல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. இதனை உணர்ந்தே ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் இலவச மின்சார வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன.
அயோத்தியின் முன்னாள் எம்எல்ஏவும், சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவருமான பவன் பாண்டே என்பவர், ``யோகி தலைமையிலான பாஜக அரசு, மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி, விவசாயிகளையும் பொதுமக்களையும் கடும் இன்னலுக்கு ஆளாக்கி இருக்கிறது. உயர்த்தப்பட்ட மின்சார கட்டணங்களால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது" என்றுள்ளார்.
ஆனால் பாஜக இந்தக் குற்றச்சாட்டை ஏற்க மறுக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, ``சமாஜ்வாதி கட்சியின் முந்தைய ஆட்சி காலத்தில் மின் கட்டணங்கள் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டன. இதில் பாதிகூட பாஜக அரசு உயர்த்தவில்லை" என்றுள்ளார். இவர்களின் குற்றச்சாட்டு சண்டைக்கு மத்தியில், தற்போது அரசியல் கட்சிகள் அளித்துவரும் வாக்குறுதியால் 2022-ல் யார் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தாலும் இலவச மின்சாரம் வழங்குவது முக்கியமான பணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின்படி, உத்தரப் பிரதேசத்தில் 27.5 மில்லியன் மின்சார இணைப்புகள் உள்ளன. இதில், 24.3 மில்லியன் மின் இணைப்புகள் மாதம் 300 யூனிட் அளவுக்கே மின்சார பயன்பாடு கொண்டவர்கள். 2021-22ல் மட்டும் இந்த 24.3 மில்லியன் மின் இணைப்புகள் மூலம் ரூ.21,186 கோடி வருவாய் கிடைத்துள்ளது. என்றாலும் வருவாய் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மாநில மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. போதாக்குறைக்கு மின்சாரத் திருட்டு போன்றவை மாநில அரசுக்கு குடைச்சலை கொடுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இலவச மின்சார வாக்குறுதிகளை வெளியிட்டு பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் இலவச மின்சார பிரசாரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாநிலத்தில் பலரின் தேர்தல் பேச்சுகளிலும் இதன் தாக்கம் காண முடிகிறது. எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஆளும் பாஜக தேர்தலுக்கு முன்பே இலவச மின்சார அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 300 யூனிட் மின்சாரம் இலவசம் இல்லாவிட்டாலும், முதல்கட்டமாக வேறு சில மாநிலங்களைப் போலவே விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் குறிப்பிட்ட வர்க்க குடும்பங்களுக்கு இலவச மின்சார அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக கடந்த காலங்களில் மேற்கு வங்க தேர்தலில் 200 யூனிட் வரையும் மற்றும் உத்தராகண்ட் தேர்தலில் 100 யூனிட்கள் வரையும் இலவச மின்சாரம் வழங்குவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதனைப் பின்பற்றி, உத்தரப் பிரதேசத்திலும் அதுபோன்ற அறிவிப்பை வெளியிடலாம். எது எப்படியோ, இலவச மின்சாரம் குறித்து அறிவித்து, ஆம் ஆத்மி மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்ய, பாஜக இப்போது நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது என்பது மட்டும் தற்போதைய நிதர்சனம்!
- மலையரசு