“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்

“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்
“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்
Published on

கடந்த இரண்டு நாட்களாக பகவான்தான் வைரல் கன்டென்ட். ஆசிரியர் அடித்து மாணவர்கள் அழுவார்கள். ஆனால் ஒரு ஆசிரியருக்காக மொத்த வகுப்பறையே அழுமா? அழுதது. அந்தளவுக்கு ‘நல்லாசிரியர்’ ஆக இருந்திருக்கிறார் இந்தப் பகவான். திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜிபேட்டையை சேர்ந்த இவருக்கு சிறுவது முதலே ஆசிரியராக வேண்டும் என்பது கனவு. வறுமை அவரை வதக்கி எடுத்தாலும் வாடாமல் நின்று வாழ்க்கையில் சாதித்திருக்கிறார். 2013 ஆண்டு பி.எட் முடித்த இவருக்கு பள்ளிப்பட்டு அடுத்து வெளியகரம் ஊரில் வேலை கிடைத்திருக்கிறது. அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலையை தொடங்கியிருக்கிறார் இவர்.  

இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சுமார் 280 மாணவர்களுக்கும் இவர்தான் ஆங்கில ஆசிரியர். மாணவர்களிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொண்ட இவர், மாணவர்களின் நண்பராக வாழ்ந்துள்ளார். ஆகவே அவரைச் சுற்றி எப்போதும் மாணவர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இந்த நிலையில் அரசின் ஆணையின்படி ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அடுத்த அருங்குளம் மேல்நிலைப்பள்ளியில் பணியிடமாறுதல் வந்துள்ளது. இந்தப் பணி மாறுதலை மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார். அதனை கேட்ட மாணவர்கள் இடிந்துப்போய் உட்கார்ந்து விட்டனர். அவரை போகவிடாமல் சூழ்ந்து கொண்டனர். கண்ணீர் விட்டுக் கதறினர். அந்த வீடியோதான் செய்திகளில் வெளியானது. அதுவரை தமிழகம் இப்படி ஒரு நெகிழ்வான சம்பவத்தை பார்த்ததில்லை. யார் இந்தப் பகவான்? அவருக்கும் மாணவர்களுக்கு அப்படி என்ன பாசப் போராட்டம்? அவரிடம் பேசினோம். 

இந்தப் பள்ளி மாணவர்களுக்கு அப்படி என்னதான் பண்ணீங்க ? 

“எனக்கே மாணவர்களின் இந்தச் செயல் ஆச்சர்யமாக இருக்கிறது. என் பணியைதான் நான் செய்தேன். எந்த மாணவர்களையும் நான் திட்டியது இல்லை. மாணவர்கள் அனைவரையும் ஒரு நண்பனாக நடத்தினேன். அதற்கு பிரதிபலனாக மாணவர்கள் இப்படி ஒரு அன்பை காட்டுவார்கள் என நான்நினைத்துக் கூட பார்த்ததில்லை. நான் இன்னும் அந்த வியப்பிலிருந்து வெளியே வரவே இல்லை.”

இந்தப் பணிமாற்றம் எப்படி நிகழ்ந்தது ? 

“தமிழக அரசின் ஆணையின்படி, மாணவர்களின் விகிதாச்சார அடிப்படையில் ஆண்டுதோறும் பணிமாறுதல் நடக்கும். அதுபோலதான் இந்தப் பணியிடமாற்றம் எனக்கு கிடைத்தது.”

இந்த நெகிழ்வான சம்பவம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 

“இந்தப் பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்கள். வசதி இல்லாத சுழலில் நல்ல கல்விக்காக வரும் மாணவர்களுக்கு ஒரு நல்ல ஆசிரியராக பணிபுரிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இவர்களை விட்டுச் செல்ல எனக்கும் விருப்பம் இல்லைதான். இருந்தாலும் அரசு ஆணையை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் இல்லையா? என்னை பிரிய மனம் இல்லாமல் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதது எனக்கு பெரிய ஆச்சர்யம். வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. 

இந்த நிகழ்வு புதிய தலைமுறை தொலைகாட்சியில் வெளியான போது எனக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். எனது பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்சியை தந்தது. என் தந்தை என்னிடம் நெகிழ்ச்சியில் அழுதார். அந்தச் சந்தோஷத்துடன் நான் இருக்கிறேன். எனது நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

எனது பொறுப்பும் கடைமையும் மேலும் அதிகரித்துள்ளது. இன்றையச் சுழலில் ஆங்கிலம் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக உள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கல்வியை மாணவர்களுக்கு சிறப்பாக கொடுத்துள்ளேன். அதை நினைத்து பெருமையாடைகிறேன்” என்கிறார் பகவான். ஆசிரியரான பகவான் அடிப்படையில் ஒரு கவிஞர். அவரது கவிதைகள் சில வார இதழில் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com