”சமயங்கள் அற்ற ஆன்மநேய ஒருமைப்பாடு..” - தமிழ்சமூகம் என்றைக்கும் கொண்டாட வேண்டியவர் ’வள்ளலார்’ - ஏன்?

பிளவுபட்டுக்கிடந்த இந்திய சமூகத்தை தத்தமது பாணியில் ஒன்றுபடுத்த விரும்பியவர்கள். இதிலே மிக முக்கியமானவர் சன்மார்க்க நெறி கண்ட வடலூர் வள்ளல் இராமலிங்கனார்.
வள்ளலார்
வள்ளலார்எக்ஸ் தளம்
Published on

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டு.. இந்தியா எங்கிலும் போர் மேகங்கள் சூழ்ந்தே காட்சி அளித்தன. இந்தியாவிற்கு வாணிபம் செய்ய வந்த பல வெளிநாட்டவர்கள் தங்களுக்குள்ளேயே நிகழ்த்திய போர்கள் ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலேயர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடிய இந்தியர்களுக்கும் என்றானது. இதன்காரணமாக, தேசம் முழுதும் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல், ஆங்காங்கு சிறிதும் பெரிதுமாக சண்டை நடந்துகொண்டே இருந்தது. மக்கள் நம்பிக்கை இழந்து துக்கத்திலும் சோர்விலும் மூழ்கிக் கிடந்த காலம். இது ஒருபுறமென்றால், சாதிகளாகவும், சமயங்களாகவும் இந்தியா பல்வேறு சிறுசிறு குழுக்களாக பிளந்து கிடந்தது.

இத்தகைய சூழலில்தான், மக்களிடையே இருக்கும் பிளவுகளையும், அதனால் அவர்கள்படும் அல்லல்களையும் போக்க தேசம் முழுவதும் பல சான்றோர்கள் தொடர்ச்சியாக தோன்றினர். பிரம்ம சமாஜத்தை உருவாக்கிய இராசாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் வங்காளத்திலும், ஆரிய சமாஜத்தை உருவாக்கிய தயானந்த சரஸ்வதி குஜராத்திலும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்த வள்ளலார் தமிழ்நாட்டிலும் தோன்றினர். இன்னும் விவேகானந்தர், நாராயணகுரு போன்றோர் இருப்பினும் மிக முக்கியமானவர்களாக மேற்கண்ட நால்வர்களைச் சொல்லலாம். இவர்களுக்கு இடையே சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இவர்களுடைய கொள்கை ஒன்றுதான். பிளவுபட்டுக்கிடந்த இந்திய சமூகத்தை தத்தமது பாணியில் சீர்திருத்தம் செய்து ஒன்றுபடுத்த விரும்பியவர்கள். இதிலே மிக முக்கியமானவர் சன்மார்க்க நெறி கண்ட வடலூர் வள்ளல் இராமலிங்கனார்.

இதையும் படிக்க: தெ.ஆ. | பண்ணைக்குள் நுழைந்த கறுப்பின பெண்கள்.. சுட்டுக் கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய உரிமையாளர்!

வள்ளலார்
“பசி தீர்க்கும் தருமசாலை” - வள்ளலார் பற்ற வைத்த அணையா நெருப்பு 

ஏன்?

இராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்சர் மூவரும், அனைத்து விதமான சமயத்தினரிடமும் சமரசம் ஏற்படுத்த பாடுபட்டனர். இதற்கு தாயுமானவரைக் கூட உதாரணமாகச் சொல்லலாம். தாயுமானவர் மதங்களிடையே இருக்கும் பகையை வெறுத்தவர். சமயங்களுக்கு இடையே ஒற்றுமை காண முற்பட்டவர். ஆனால், வள்ளலார் சமயங்கள் அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை உடைய 'ஒரே உலகம்' காண்பதை தனது இறுதி லட்சியமாக கொண்டிருந்தார் என ம.பொ.சி தனது 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' எனும் நூலில் தெரிவித்துள்ளார்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம் கூட சமயங்களைக் கடந்த சமுதாய அமைப்பாகவே இயங்கியது. மபொசி தனது நூலில், சன்மார்க்க சங்கத்தின் கொள்கைககளாக, வள்ளலாரின் பாடல்கள், கடிதங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து சிலவற்றை மேற்கோள் காட்டுகிறார். அதில், "உயிர்குலம் அனைத்திற்கும் தெய்வம் ஒன்றே என்று நம்புதல்" என்ற வரியும் இருக்கின்றது.

"இச்சாதி சமயவிகற் பங்களெலாந் தவிர்ந்தே

எவ்வுலகுஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்"

என வள்ளலாரே தமது பாடலில் தெரிவிக்கின்றார்.

கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக சாதியை முழுமுற்றாக நிராகரிக்கும் வள்ளலார், "சாதியும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தவிர்த்தேன்" என்கிறார். மேலும், சாதியும் மதமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருத்பெருஞ் சோதீ" என முழங்குகிறார்.

வருணாசிரமம், சாதியாசாரம் முதலியவை பிள்ளை விளையாட்டு என்றவர். சாதி சமயங்கள் எல்லாம் தயை என்னும் கருணையை தடையாய் இருப்பவை என்பது வள்ளலார் கருத்து. எனவே இதையெல்லாம் ஒழித்து சன்மார்க்க வழி நின்றால் மட்டுமே கடவுளை அடைய முடியுமென்றும் ஆணித்தரமாக கூறுகிறார் வள்ளலார்.

இதையும் படிக்க: ”இரத்தம் சிந்தும் லெபனான் மக்களுக்காக நிற்போம்; இஸ்ரேல் வெற்றிபெறாது” - ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி!

வள்ளலார்
52 வாரங்களுக்கு வள்ளலார் முப்பெரும் விழா - சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

வேதம், ஆகமம், புராணங்களைப் பற்றியும், இதிகாசங்களைப் பற்றியும் வள்ளலார் தெளிவான வரையறைகளை வைத்திருந்தார்.

"பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறில்லை" என்றார். புராணம், இதிகாசம் ஒவ்வொன்றும் தத்துவங்களே எனத் தெரிவித்தார். அவர் எழுதிய திருவருட்பாவில் முதல் ஐந்து திருமுறைகளில் கடவுள் பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆறாம் திருமுறையில், சைவம் ஆகமம் வேதங்கள் என அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தினார். "கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக.." என்றார்.

அன்பு செலுத்துவதே இறைவனை அடைவதற்கான வழி

வெள்ளையர்களின் கொடுங்கோன்மையான ஆட்சியால் தேசம் முழவதும் பஞ்சமும், பட்டினியும் சூழ்ந்திருந்த காலக்கட்டம். எளிய மக்கள் பசியால் வாடிய நேரம்.. மக்களிடையே வாழ்ந்து அவர்களது இன்ப துன்பங்களை அறிந்திருந்த வள்ளலார், பசியால் அவர்கள்படும் இன்னல்களையும் அறிந்திருந்தார். உணவுக்காக ஒருவன் துயருரும் போது, அது அவர்களது பூர்வ ஜென்ம பாவம், எல்லாம் அவன் செயல் என வள்ளலார் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த மற்ற துறவிகள் எல்லாம் பேச, தன்னால் முடிந்த அளவு மக்களது பசியினைப் போக்கும் பணியில் ஈடுபட்டார் வள்ளலார். இதற்காக 1867 ஆம் ஆண்டு வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார்.

ஜீவகாருண்யம் என்பதற்கு விளக்கம் கொடுத்த வள்ளலார், "பசியென்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது, ஆகாரத்தால் அவிகின்றதுதான் ஜீவகாருண்யம்" என தெரிவித்துள்ளார். இதைத்தாண்டி ஏழைகளின் பசியைநீக்க பொதுமக்களுக்கும் அறிவுறுத்திய அவர், "தமது குடும்பச்செலவை கூடிய மத்தில் சிக்கனம் செய்து, ஏழைகளின் பசியை நீக்குதல் வேண்டும்" என தெரிவித்துள்ளார். 1867 ஆம் ஆண்டு அவர் மூட்டிய அடுப்பு இன்று வரை ஏழைகளின் பசியை போக்கி வருகிறது..

இதையும் படிக்க: பில்லினியர் பட்டியல்|2வது இடத்துக்கு முன்னேறிய மார்க் ஜூக்கர்பர்க்.. அம்பானி, அதானிக்கு எத்தகையஇடம்?

வள்ளலார்
56-வது அருட்பிரகாச வள்ளலார்-மகாத்மா காந்தி விழா! சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது அறிவிப்பு!

துறவிகளில் பெரும்பாலோனோர் இறைவனிடம் சரணாகதி அடைதலே அவனை அடைவதற்கான வழி என்றும் அவன் அருளைப் பெறுவதற்கான வழி என்றும் கூறுவர். ஆனால், வள்ளாலார் அனைத்து உயிர்களையும் தன் உயிர்போல பாவித்தலே இறைவனை அடைவதற்கான வழி என்கிறார்.

சன்மார்க்கம் என்பதற்குப் பொருளே எல்லா உயிர்களையும் தன் உயிர்போல பாவித்தல் என்பதுதான். இந்த ஒழுக்கத்தின் மூலம் மட்டுமே இறைவனை அடைய முடியுமேயன்றி வேறு எந்த வழிகளாலும் இறைவனை அடைய முடியாது என்பது அவர் கொள்கை.

அவரது வார்த்தையிலேயே அறியலாமே, "யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ, அவர்களிடத்தில் கடவுள் இருக்கின்றார். அந்தத் தயை இல்லாதவர்களிடத்து கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கின்றார்" எனக் கூறுகிறார். தயை என்பதற்கு கருணை என்பது பொருள். "எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுவர பக்தியாம்" என்றும் கூறி, அனைத்து உயிர்களிடத்திலும் அன்புசெலுத்துவதற்குண்டான முக்கியத்துவத்தை விளக்குகிறார்.

பெண்ணுரிமை

இன்றும் கூட பெண்ணுரிமை என்பது போராடிப் போராடி செயல்படுத்த வேண்டிய ஒன்றாகத்தான் உள்ளது. அதிலும், கடவுள் வழிபாட்டுகளில் இன்னும் மோசம். ஆனால், "பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும், பேதமற்று அபேதமாய் படிப்பு முதலியவையும் சொல்லிக்கொடுக்க வேண்டியது. தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரமகாலத்தில் ஒத்திருப்பார்கள்" என தெரிவிக்கிறார். ஆண் பெண் சமத்துவமே சுத்த சன்மார்க்கத்தின் குறிக்கோள்.

எல்லா உயிர்களிலும் கடவுளைக் காணும் வழியைச் செய்கிறார் வள்ளலார். வள்ளலாரின் கொள்கை முழு செயல்வடிவம் பெறாதது தமிழகத்துக்குப் பெரிய நட்டம் என்கிறார் எழுத்தாளர் பொன்னீலன். என்றாலும் கூட அதன் தாக்கம் தமிழகத்தில் இன்றும் பரவலாக மக்களை இயக்கிக்கொண்டுதான் இருக்கிறது எனத்ஹ தெரிவிக்கிறார். வள்ளலாரின் சமகாலத்தில் இருந்த ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் அவர்களது காலத்திலேயே மக்களால் கொண்டாடப்பட்டவர்கள். ஆனால், வள்ளலார் அவரது காலத்தில் கொண்டாடப்பட்டாலும் கூட, அவருக்கு இருந்த எதிர்ப்பு அத்தனை எளிதானதல்ல. சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அப்போது இருந்ததைப் போல இப்போதும் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால், வள்ளலாரைக் கொண்டாட வேண்டியது காலத்தின் தேவை.

இதையும் படிக்க: WT20 WC | அவுட்டானதை ஏற்று வெளியேறிய வீராங்கனை.. திரும்ப அழைத்த நடுவர்கள்.. வாக்குவாதம் செய்த கவுர்!

வள்ளலார்
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com