கேள்வி குறியாக்கப்படுகிறதா பொன் மாணிக்கவேலின் நேர்மை ?

கேள்வி குறியாக்கப்படுகிறதா பொன் மாணிக்கவேலின் நேர்மை ?
கேள்வி குறியாக்கப்படுகிறதா பொன் மாணிக்கவேலின் நேர்மை ?
Published on

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு புதிய விவாதத்தை தொடங்கி இருக்கிறார். அது தமிழக சிலைத் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேலின் நேர்மையை கேள்வி கேட்டு இருக்கிறார் அவர். கடந்த சில நாள்களாகவே பொன். மாணிக்கவேலின் நேர்மை விவாதத்துக்குறிய பொருளாக மாறி வந்தாலும், ஒரு அமைச்சரே முதல் முறையாக அவரின் நேர்மை குறித்து சந்தேகம் எழுப்பியது பேசு பொருளாக மாறியுள்ளது.

"பொன். மாணிக்கவேலை நேர்மையான அதிகாரி என்று யார் கூறியது. நேர்மையான அதிகாரி என்றால் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.குற்றச்சாட்டுகளை மேற்பார்வை செய்ய மட்டுமே பொன். மாணிக்கவேலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றச்சாட்டுகளை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அதிகாரம் இல்லை. அவரால் குற்றச்சாட்டுகளை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று ஆணையிட முடியாது" என அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

மேலும் "பொன். மாணிக்கவேல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும். யாராக இருந்தாலும் மனித உரிமை மீறல் என்றால் மனித உரிமை மீறல்தான். பொன். மாணிக்கவேல் தமது கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். அதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். எத்தனை சிலைகளை இதுவரை பொன். மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். அவர் எத்தனை வழக்கு இதுவரை பதிவு செய்துள்ளார். அதைத்தான் அவர் முதலில் விளக்க வேண்டும். பொன். மாணிக்கவேல் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளது" என சீறியுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

அதேபோல பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவலர்கள் நேற்றும், அதற்கு முந்தைய தினமும் புகார் மனுக்களை அளித்தனர். அப்போது பேசிய சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவன், “பணியின் போது பொன்.மாணிக்கவேல் எங்களை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. இதுவரை விசாரிக்கபட்ட 333 சிலை கடத்தல் வழக்குகளில் எந்தக் குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. அத்துடன் எந்த சிலைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 மாதத்திற்கு முன்னர் ஒரு சிலையை கண்டுபிடித்தனர். வேறு எதுவும் பிடிக்கப்படவில்லை. நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளை யாரையும் விசாரிக்க விடவில்லை. அவர்கள் கூறும் வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒரு குற்றவாளியை கொடுத்து, அவரை ரிமாண்ட் செய்து என்ன செய்ய வேண்டும் எனக் கூறுவார். மற்றபடி அந்தக் குற்றவாளி யார்? எங்கிருந்து பிடிக்கப்பட்டார்? என எதையும் கூறமாட்டார். உண்மையான குற்றவாளிகளை அவர் பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொன் மாணிக்கவேல் நேற்றைய தினமே பதிலளித்தார் அதில் "  “என் மீது புகார் அளித்த 21 பேரும் ஒரு எஃப்ஐஆரை கூட பதிவு செய்ததில்லை.  புகார் அளித்த அதிகாரிகளை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். குற்றச்சாட்டுகளை கூறிய காவல் அதிகாரிகள் இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. எஃப்ஐஆர் பதியாத போது, பணிச்சுமை என அதிகாரிகள் எப்படி கூற முடியும்? அயல் பணி காவலர்களை பிற உதவிக்காகத்தான் பயன்படுத்தினோம். 47 குற்றவாளிகளைப் பிடித்ததில், அந்தந்த மாவட்ட ரிசர்வ் காவலர்களே பங்காற்றினர்” என்று விளக்கமளித்திருந்தார்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது தமிழக அரசு பொன் மாணிக்கவேல் பணியில் தொடர்வது பிடிக்கவில்லை என்ரே தெரிகிறது. தமிழக அரசு செயல்பாடுகளும் கடந்தக் காலங்களில் அவ்வாறே இருந்திருக்கிறது.தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இதில் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தொழிலதிபர்கள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் இந்த வழக்கை திடீரென்று சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறிப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அதோடு வழக்கு விசாரணைக்கு வந்த அன்றே ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐஜி, பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் வழக்கில் ஒரு வருடத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மேலும் பொன் மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பொன் மாணிக்கவேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவனும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை ஊழல் நிறைந்த துறையாக காட்டி, அந்த்த துறையை ஒழித்துக்கட்டுவதே பொன் மாணிக்கவேலின் நோக்கமாக இருக்கிறது என்று தமிழக அரசு உள்ளிட்ட தமிழக கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. ஒரு சில பேரை பொன் மாணிக்கவேல் தப்பிக்க வைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் யார் அந்த ஒரு சில பேர் என்பதற்கான விடை குற்றஞ்சாட்டுபவர்களிடம் இல்லை. அதனால்தான் பொன்.மாணிக்கவேலின் நேர்மை இப்போது குறி வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆகையால் பொன் மாணிக்கவேல் நேர்மையானவரா இல்லையா என்பது எதிர்காலத்தில்தான் தெரிய வரும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com