கஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை !

கஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை !
கஜா சீரழித்தது வாழ்விடத்தை அல்ல வாழ்வாதாரத்தை !
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருப்பது டெல்டாவின் வாழ்வாதாரம். தலைமுறைகள் தாண்டிய விவசாயத்தை, வருடங்கள் கடந்த உழைப்பை ஒற்றை இரவில் சுருட்டிக்கொண்டு போய் இருக்கிறது இந்த கஜா. புயலால் பாதிக்கப்பட்ட வீட்டை இரண்டு மாதத்துக்குள் சரிசெய்துவிட்டு மீண்டும் பழைய வாழ்க்கை பாதையை ஓடிச்சேர்ந்துவிட முடியுமா என்பது தான் இங்கு கேள்விக்குறி. ஏனென்றால் கஜா சீரழித்திருப்பது வாழ்விடத்தை அல்ல. வாழ்வாதாரத்தை.

டெல்டா மாவட்டத்தின் பிரதான தொழிலே விவசாயம். தென்னை, வாழை, முந்திரி, நெல், சோளம், மல்லிகை என இயற்கையை நம்பிய வாழ்க்கை முறை. தமிழகத்திலிருந்து வெளிநாடு செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் டெல்டாவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக வேதாரண்யம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் வெளிநாட்டில் இருக்கிறார்கள். வீட்டில் விவசாயம், முதலுக்கு வெளிநாடு என்பது தான் இவர்களின் வாழ்க்கை சூத்திரம். எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்தாலும் அந்த பணத்தை அவர்கள் முதலீடு செய்வது விவசாயத்தில் தான்.

தங்களது விவசாயத்தின் தரத்தை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்வார்களே தவிர விவசாயத்தை விட்டு விலகிச்செல்வதில்லை. அல்லது விவசாயம் சார்ந்த தொழிலாகவே அவர்கள் அடுத்தப்பயணத்தை தொடங்குகிறார்கள். விவசாயத்தில் லாபம் பார்க்க பொறுமை தேவைப்படுகிறது. இன்று விதைத்து நாளை அறுத்து பணம் பார்த்துவிட முடியாது. விவசாயத்தில் நாம் காலத்தோடு பயணிக்க வேண்டும். கடைசி வரை உழைக்க வேண்டும். இன்று அவர்கள் கஜா அழித்திருப்பது வெறும் மரங்களை மட்டுமல்ல. டெல்டா இளைஞர்களின் பல ஆண்டு வெளிநாட்டு உழைப்பை. பரமபதம் விளையாட்டின் கீழிறக்கம் போல கஜாவால் ஒரே இரவில் அடிமட்டத்தில் நிற்கிறார்கள் அவர்கள். மீண்டும் முதலில் இருந்து தொடங்கப்பட வேண்டும். 

கஜா அழித்திருக்கும் விவசாயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை வாழை, தென்னை, முந்திரி. குறிப்பாக தென்னை. புயலின் தாக்கத்தால் 70 முதல் 80 சதவிகித மரங்கள் அடியோடு வீழ்ந்துவிட்டன. ஒரு ஏக்கர் வைத்துள்ள தென்னை விவசாயி, தென்னைக்கு செய்த செலவு விவரங்களை பார்த்தால் அவரது இழப்பின் வலி புரியும். ஒரு ஏக்கருக்கு 80 முதல் 100 தென்னை மரங்களை வளர்க்கலாம். ஒரு தென்னங்கன்று 250 ரூபாய் வரை ஆகும். தென்னங்கன்று வைத்த முதல் 7 வருடங்களுக்கு செலவு மட்டுமே செய்ய வேண்டியிருக்கும். உரம் வைப்பது, பராமரிப்பது என ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும். 7‌ ஆண்டுகளில் 7 லட்சம் வரை செலவழித்த பிறகுதான் காய்ப்புத் தொடங்கும். 7 முதல் 12 ஆண்டுகள் வரை தென்னை மரங்களில் 50% மட்டுமே காய்ப்பு இருக்கும். 12 ஆவது ஆண்டு முதல் தென்னை மரங்கள் முழுமையாக காய்க்கத் தொடங்கும். ஒரு மரம் ஒரு ஆண்டில் 300 முதல் 400 காய்களைத் தரும். ஒரு தென்னையின் ஆயுட்காலம் சுமார் 60 ஆண்டுகள். ஒரு ஏக்கரில் தென்னை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிக்கு ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் வருவாய் ஈட்டித்தந்த மரங்களை ஒரே புயலில் ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர் விவசாயிகள்.

தங்களுக்கு தெரிந்ததே தென்னை விவசாயம் என்ற நிலையில், மீண்டும் தென்னை வளர்ப்பை முதலில் இருந்து தொடங்கி லாபம் பார்க்க வேண்டுமென்றால் இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை தென்னை வளர்ப்புக்கு நாம் செலவு செய்ய வேண்டி வரும். மாத வருமானம் ஏதுமின்றி குடும்பத்தையும் ஓட்ட வேண்டும், எதிர்கால விவசாயத்துக்கும் செலவு செய்ய வேண்டுமென்பதே தற்போதைய தென்னை விவசாயிகளின் நிலை. இது போக தென்னையை நம்பி முன்பணமாகவோ அல்லது கடனாகவோ பணம் வாங்கி இருக்கும் விவசாயிகளின் நிலமை இன்னும் பரிதாபம். கடன் என்ற மேலும் ஒருசுமை அவர்களின் தலையில் இருக்கும்.

வரும் பொங்கலை கணக்கிட்டு வெட்டப்படாத வாழைத்தார்களும், கொலைகொலையான தேங்காய்களும் தான் இன்று மண்ணில் சிதறி கிடக்கின்றன. பொங்கல் வந்தால் கடந்த ஒரு வருடத்திற்கான காத்திருப்பு முடிவுக்கு வந்து மொத்த உழைப்புக்கான பணம் கையில் கிடைக்கும் என்ற நிலையில் கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துள்ளது கஜா.

மீண்டும் நிலங்களை சீர்படுத்த வேண்டும், விவசாயத்தை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என அடுத்தடுத்த வேலைகளும் பணத்தை ஆதாரமாக கொண்டு இருக்கிறது. அதனால் அரசு உரிய நிவாரணம் வழங்கி தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

இந்த ஓரிரவு கஜாவால் எத்தனையோ வருடங்களின் திட்டங்கள் தடம் மாறும். எத்தனையோ இளைஞர்களின் திட்டங்கள் தள்ளிப்போகும். செடி மீண்டும் முளைத்து வந்து பூப்பூத்து காய்க்காய்க்க வேண்டும். அதுவரை காலத்தோடு நாம் பயணிக்க வேண்டும். ஏனென்றால் கஜா சீரழித்திருப்பது வாழ்விடத்தை அல்ல. வாழ்வாதாரத்தை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com