1992 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட இசைக்கு புத்துயிர் தந்த ஆண்டு. ஆம், அந்தாண்டுதான் மணிரத்னம் இயக்கத்தில் "ரோஜா" திரைப்படம் வெளியானது. மணி ரத்னத்தின் ஆரம்பக்கால படமான "பல்லவி அனுபல்லவி" , "நாயகன்" போன்ற கிளாஸிக் திரைப்படங்களுக்கும் இசைஞானி இளையராஜா தான், அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர். ஆனால், 1992 இல், 25 வயதான ரகுமானை மணி ரத்னம், கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா மூலம் அறிமுகப்படுத்தினார்.
ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் வெளியான உடன் வித்தியாசமான ஒலிக்கோர்ப்பு மூலம் "யாருடா இந்தப் பையன்" என ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். "சின்னச் சின்ன ஆசை"யும், "காதல் ரோஜாவே", "தமிழா தமிழா" பாடல்கள் அந்தக் காலத்திலேயே வைரல் ஆனது. பின்பு,தன் முதல் படத்திற்கு தேசிய விருதையும் பெற்றார் ரகுமான். 1993 ஆம் ஆண்டு முதல் தேசிய விருதைப் பெற்றவர், 2018 ஆம் ஆண்டில் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கான திரைப்பட தேசிய விருதுகளை அறிவித்தது மத்திய அரசு. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, மணி ரத்னம் இயக்கிய "காற்று வெளியிடை"க்கும், "மாம்" திரைப்படத்துக்கு பிண்ணனி இசைக்கு என இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மொத்தமாக ரகுமான் இதுவரை சிறந்த இசையமைப்பாளருக்காக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
இந்திய திரையுலகத்துக்கு அறிமுகமாகி கடந்தாண்டுதான் வெள்ளி விழாவை நிறைவு செய்தார். மணி ரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 25 ஆண்டுகள் என "காற்று வெளியிடை" கடந்தாண்டு வைரல் ஆனது. தொடக்க காலத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான். அவரின் இசையில் சத்தம் அதிகம், சாமான்களை போட்டு உடைப்பது போல உள்ளது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. பாரதிராஜா, கிழக்கு சீமையிலே படத்தை தொடங்கியபோது, ரகுமான் இசை அமைக்க ஒப்பந்தமானார். அப்போதும் விமர்சனம், "சிட்டியில் வளர்ந்த பையனாலே எப்படி கிராமத்து படத்துக்கு இசையமைப்பார்"? ஆனால், கிழக்கு சீமையிலே படத்தின்போது பலரது கவனத்தை பெற்றது. அதன் பின், ராம்கோபால் வர்மா இயக்கத்தில் "ரங்கீலா" இந்தி திரைப்படம் மூலம் நேரடியாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதில் படமும் பாட்டும், இப்போது கேட்டாலும் மாஸ்டர் பீஸ். பின்பு, தமிழ் உள்பட இந்தி சினிமாவின் அறிமுகம் மற்றும் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களின் படங்களிலும் பணியாற்றி இந்திய சினிமாவின் அடையாளமானார் ரகுமான்.
பெஸ்ட் மற்றும் பிரம்மாண்ட கூட்டணி
டைம் பத்திரிகையின் எப்போதும் சிறந்த 10 ஒலிப்பதிவுகள் வரிசையில் ரோஜாவிற்கும் ஒரு இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் சிறந்தக் கூட்டணி என்று இந்த இருவரையும் தாரளாமாக சொல்லலாம். ரோஜா, இருவர், பம்பாய் ,அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி என்று இருவரும் பணிபுரிந்த எல்லாப் படங்களிலும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதில் பம்பாய் திரைப்படத்தின் ஒலிப்பதிவு 12 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் இணை இயக்குநகராக இருந்த இயக்குநர் ஷங்கர் தனது முதல் படமான ஜென்டில்மேனிற்கு, தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் சொல்லி ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் போட்டார். பின்பு, இந்த பிரம்மாண்ட ஜோடி வரிசையாக தாறுமாறு ஹிட் அடித்து. இந்தக் கூட்டணியின் மேஜிக் 2.0 வரை தொடர்வதுதான் ஹைலைட்.
சர்வதேச அங்கீகாரம் !
1997 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பொன் விழா ஆண்டு. இதனை சிறப்பிக்க "வந்தே மாதரம்" ஆல்பத்தை ரிலீஸ் செய்தார் ரகுமான். இந்த ஆல்பம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச கவனத்தை பெற்றது. இதன் பின்பு, லண்டனில் பிரபல மேடை இயக்குநரான ஆண்ட்ரூ லாயிட் வெப்பரின் "லண்டன் ட்ரீம்ஸ்"க்கு இசையமைத்தார். அடுத்து, சீனப் படமான "வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்டு எர்த்" திரைப்படத்துக்கு இசையமைத்தார், பின்பு "லார்டு ஆஃப் த ரிங்ஸ்" மேடை நாடகத்துக்கும் இசையமைத்தன் மூலம் ஹாலிவுட்டின் கவனம் பெற்றார். பின்பு, டானி பாயல் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். ஆஸ்கருக்கு முன்பாகவே "கோல்டன் குளோப்", மற்றும் கிராமி விருதுகளையும் பெற்று அசத்தினார் ரகுமான்
கஷ்டப்பட்டால் முன்னேறலாம் !
ஏ.ஆர். ரகுமானின் தந்தை சேகர் மலையாளத்தில் இசையமைப்பாளராக இருந்தவர். ஆனால் தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார் ரகுமான். ஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார்.
பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசைக் கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசைப் பயின்று பட்டமும் பெற்றார். இளம் வயதில் வறுமையை வென்று உலகளவில் சாதனைப் படைத்த ரகுமான், இளைஞர்களுக்கான இன்ஸ்பிரேஷனாக இன்றளவும் இருக்கிறார்.