மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய பிரத்யேக செயலியை வடிவமைத்த மதுரை இளைஞர்!

மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய பிரத்யேக செயலியை வடிவமைத்த மதுரை இளைஞர்!
மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய பிரத்யேக செயலியை வடிவமைத்த மதுரை இளைஞர்!
Published on

மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலைவாழ் கர்ப்பிணி பெண்களுக்கு உயிர் காக்கும் செயலி ஒன்றை கண்டுபிடித்து பிரசவத்தின் போது தாய் சேய் உயிரிழப்பை தடுக்க உறுதுணை புரிந்து வருகிறார். எம்பிஏ பாடத்திட்டத்தில் இடம் பெற உள்ள இவரது செயல்பாடு குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

மதுரை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தினேஷ் குமார் அவரது நண்பர்கள் உதவியோடு "சேவ் மாம்" என்ற கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் விதமாக புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகள் இறப்பு சதவீத அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் கர்ப்பிணி பெண்கள் சுகாதார மையங்களின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாலும் மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் பணி என்பது தொய்வாகவே உள்ளது.

நீண்ட தூரம் நடந்து வந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டிய நிலையை சிரமமாக கருதி பெரும்பாலான மலைவாழ் கர்ப்பிணி பெண்கள் முறையாக பரிசோதனை செய்வதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. அதோடு கரடு முரடான பாதைகளை கடந்து வரும்போது சிலருக்கு கருக்கலையும் அபாயமும் உள்ளது. இந்த குறையை போக்கி ஒரே ஒரு சிறிய கருவியுடன் பிரத்யேக செயலியை உள்ளடக்கி கர்ப்பிணிகளுக்கான அனைத்து விதமான பரிசோதனைகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கர்ப்பிணி பெண்களுடைய உடல்நிலை, குழந்தையின் எடை உள்ளிட்டவைகளை வாரம் ஒரு முறை கண்காணித்து உரிய மருத்துவ அறிவுரைகளை வழங்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கான உடல் எடை, சர்க்கரை அளவு இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு, இசிஜி உள்ளிட்ட 10 வகையான பரிசோதனைகள் மேற்கொண்டு கண்காணிப்பது வழக்கம். இந்த பரிசோதனைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வராமலேயே கர்ப்பிணி பெண்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று எளிதாக மேற்கொள்ள இந்த செயலி பெரும் துணையாக உள்ளது.

மலை கிராமங்களில் மருத்துவ ஊழியர்கள் அல்லாத தன்னார்வலர்கள் சென்று எளிதாக பரிசோதனை செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த செயலியில் மேற்கொள்ளும் பரிசோதனை விவரங்களை பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி மருத்துவர்கள் கண்காணித்து தேவையான மருத்துவ அறிவுரைகளை வழங்கும் வகையிலும் வடிமைக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கேரளா, ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட மலைவாழ் மக்களிடம் இந்த ஆராய்ச்சியை தொடங்கியதாக கூறும் தினேஷ் பாண்டியன் தமிழகத்தைப் பொறுத்த வரை திருச்சி , தர்மபுரி , ராமநாதபுரம் , நாமக்கல் போன்ற மாவட்டங்களின் சில மலைகிராம கர்ப்பிணிகளுக்கு இந்தக் கருவியை வழங்கி கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இதுவரை 2 லட்சம் பேர் இதன் மூலம் கண்காணிக்கப்பட்டு இருப்பதாகவும் சுமார் 7,300 பேர் அவசர சிகிச்சைக்காக தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செயலி மூலம் ஆயிரம் நாட்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என கூறும் இவர் இதனை லாப நோக்குடன் அல்லாமல் சேவை நோக்குடன் செய்து வருவதாகவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஆவலில் உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இந்த சேவையை தொடர தமிழக அரசு வாய்ப்பு கொடுத்தால் சவால்கள் நிறைந்த அனைத்து கிராமங்களிளுக்கும் சென்று சேவையை தொடர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த செயலியின் மூலம் தாய்-சேய் மரணம் தடுத்து 100 சதவீதம் உயிரிழப்பு அல்லாத பிரசவத்தை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செயலி குறித்த தகவல் குறித்து உலக சுகாதார அமைப்பு தனது முகப்புரையில் குறிப்பிட்டுள்ளதுடன் இந்த செயலியின் ஆய்வுகளை கனடாவைச் சேர்ந்த அறிவியல் இதழான ஐவே (ivey) ல் வெளியிட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைகளின் எம்.பி.ஏ., மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டமாக கொண்டு வரப்பட உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு எளிய முறையில் பரிசோதனை செய்யும் செயலியை கண்டறிந்துள்ள மதுரையை சேர்ந்த பொறியாளரின் முயற்சி உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/LMvQzSuDZ-Q" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com