ஃபேஸ்புக் பக்கத்தில் வகுப்பறை உளவியல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுடன் பழகிய நினைவுகளையும் அவர்களிடம் இருந்து பெற்ற அனுபவத்தையும் அரசுப் பள்ளி ஆசிரியர் உமா தொடர்ந்து எழுதி வருகிறார். சமீபத்தில் அவர் எழுதியுள்ள பதிவு மாணவி ஒருவரின் சிரமமான குடும்பச் சூழலை விவரிக்கிறது. அது மனதைத் தொடுவதாக உள்ளது.
அது ஒரு செவ்வாய்க்கிழமையின் மதிய இடைவேளை. கணக்கு வகுப்பு. கணினியில் மாணவிகள் கணக்குப் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அஜிதா தனது இரட்டைப் பின்னலில் ஒன்றின் ரிப்பனை தனியே கையிலெடுத்து, ஏதோ செய்துகொண்டிருக்க, “அஜிதா ... என்ன பண்றேம்மா? கணக்குப்போடு” இது என் குரல்.
கேட்ட ஒரு கேள்விக்காக, என் அருகே ஓடிவந்த மாணவி, நான் கேட்காமலேயே மளமளவென்று சொற்களை இணைத்து உணர்வுகளோடு குழைத்துப் பட படவென்று பேச எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அந்த செவ்வாயின் சில நாட்களுக்கு முன்பு ஒருநாள் எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு. அஜிதா 6th என்று என் அலைபேசியில் சேமித்திருந்தேன். எப்போதும் பாட சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கும் பழக்கம் அவரிடம் உண்டு. “சொல்லு அஜிதா…” என்றேன்.
மறுமுனையிலிருந்து வேறு ஒரு குரல். “டீச்சர்… நான் அஜிதா அம்மா பேசறேன். என் அக்கா வீடு விசேஷம், போகணும். ஒரு நாள் லீவு வேணும். அஜிதாவைக் கூப்பிட்டா ... வரமாட்டேன்றா, லீவு போட மாட்டேன்றா ... எவ்வளவு கேட்டாலும் ஒத்துக்கமாட்டேன்றா. என்ன செய்யறதுன்னு தெரியல. எப்படியாச்சும் சொல்லுங்க” என்றார் .
விடுப்பு எடுக்க விருப்பமில்லாத குழந்தையை எப்படி கட்டாயப்படுத்துவது, “சரி தாத்தா, பாட்டி யாராச்சும்?“ என்று கேட்டேன். “இல்லை. நாங்க மட்டும்” என்றார்.
மாணவியிடம் பேசினேன். “என்னைக் கட்டாயப்படுத்தறாங்க மிஸ், நிறைய ஹோம்வொர்க் தருவாங்க செய்யமுடியாது. நான் போகவில்லை மிஸ். அவர்களையும் போக வேண்டாம் என்று கூறுங்கள்” என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியல. “சரி, எங்க வீட்டுக்கு வந்துவிடு” என்றேன் ம் … சரி என்று கூறி, அப்பாவின் அனுமதி கிடைக்கவில்லை உங்க வீட்ல தங்குவதற்கு என்றார்.
“எல்லா பாடப்புத்தகத்தையும் எடுத்துட்டுப் போம்மா. அங்கே நேரம் கிடைக்கும்போது படி, அம்மா திட்டமாட்டாங்க” என்று சமாதானப்படுத்தினேன், “லீவ் போடு பரவால்ல” எனக் கூறி அனுப்பிவைத்தேன். வெள்ளி, திங்கள் விடுமுறை எடுத்துவிட்டு செவ்வாயன்று பள்ளி வந்த மாணவிதான் என்னிடம் அவ்வளவு பேசினார்.
ஏன் ரிப்பன் கழன்றுவிட்டது? என்ற என் ஒரே கேள்விக்கு, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளின் சூழலை என்னருகே வந்து மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறார்.
ஆம். அவர் பேசியதை இங்கே அப்படியே தருகிறேன்…
மிஸ் ஊருக்குப் போயிட்டு நைட் ரெண்டு மணிக்குத்தான் வந்தோம். எங்க வீட்ல எல்லா வேலையும் நாங்கதான் செய்யணும். அம்மா டிபன் கடை வச்சு இருக்காங்க. தினம் 2 கிலோ வெங்காயம் வெட்டுவேன். நான் ஆச்சர்யமா பார்க்க, கட்டர் இருக்கு மிஸ். அதுல சீக்கிரம் வெட்டிடுவேன். பாத்திரம் வெளக்கணும் மற்ற வீட்டுவேலை செய்யணும். அதான் சிலநாள் ஹோம்வொர்க் செய்யாம வந்துடுவேன்.
அம்மா, நாங்க (பொண்ணுங்க) படிக்கமுடியாம வேலை செய்வது பார்த்து கஷ்டப்பட்டு அழுவாங்க மிஸ். அதுக்குத்தான் நான் ஸ்கூல்லயே முடிந்த வரைக்கும் படிக்கிற வேலை எல்லாம் முடிச்சுடுவேன். சில நாள் லேட்டா வருவதுகூட கஸ்டமர் வந்து நிப்பாங்க., டிபன் எடுத்துத்தருவதால கொஞ்சம் லேட் ஆனாலும் நாகல்கேணியிலிருந்து அப்பா கூட்டிவர லேட்டாகிடும் மிஸ்.
நேத்து நைட் 2 மணி நேரம் மட்டும்தான் தூங்கினேன். அதான் தலை சரியா பின்ன முடியல... இப்படி 5 நிமிடத்திற்கும் மேல் படபடவெனக் கூறுவதைக் கேட்டு, “பரவால்ல. லேட் ஆனா நீ கவலைப்படாதே. கிடைத்த நேரத்தில் படி “ என்ற என் மிகச் சில வார்த்தைகளில் முகம் முழுக்க சந்தோஷச் சிதறல்கள்.
அஜிதாவின் மன அழுத்தம் குறைந்துபோனதை என் கண் குளிரப் பார்த்தேன். இது போதும் அவரது சின்ன சிக்கல் தீர்ந்து வேகமாகக் கணக்குப்போட ஆரம்பித்து விட்டார். மிக அழகான கையெழுத்தும் மிக நல்ல குரல் வளமும் மிக அருமையாகப் படிக்கும் தன்மைகளும் பெற்ற மாணவி. ஆனாலும் இந்த சிக்கல்கள் அவரின் மனதிற்குள். குழந்தைகளின் மனம் ஆரோக்கியம் பெற எனக்கு எப்போதும் சிலபஸ் முடிப்பதைவிட இப்படியான அணுகுமுறையே முக்கியமாகத் தோன்றுகிறது.”எனத் தெரிவித்துள்ளார்.
(மாணவியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது)