நீளமான முடி - யார் இந்த மனிதர்?
சவ்ரவ் கங்குலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த காலம். சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பிரச்னையாக அப்போது உருவெடுத்தது. பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் என சில வீரர்களை முயன்று பார்த்த போதிலும் யாரும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இதனால், ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். "இந்தியாவில் ஒரு ஆடம் கில்கிறிஸ்ட்டோ, மார்க் பவுச்சரோ இல்லை" என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார் கங்குலி. டிராவிட்டின் விக்கெட் கீப்பிங்கும் மெச்சும்படி இருக்கவில்லை.
இத்தகைய சூழலில் தான் 2004ஆம் ஆண்டு வங்கதேசம் சென்றது இந்திய அணி. வழக்கமாக சிறிய அணிகளுடன் விளையாடும் போது புதிய வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படுவதுண்டு. அதேபோன்று, அந்தத் தொடரிலும் சில புதுமுக வீரர்கள் வாய்ப்புப் பெற்றார்கள். அதில் ஒருவர்தான் மகேந்திர சிங் தோனி. வங்கதேச அணிக்கு எதிராக டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டிதான் தோனி விளயாடிய முதல் சர்வதேச போட்டியாகும்.
அதில், நீளமான முடி, யாருக்கும் இல்லாத கட்டுமஸ்தான உடல் என வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளித்த தோனியை வியப்பாகப் பார்த்தனர் அனைவரும். முதல் ஒரு நாள் போட்டியில் ரன் எடுக்காமலேயே அவுட்டானார். அடுத்த ஆட்டத்திலும் பெரிதாக ரன் எடுக்கவில்லை. பேட்டிங் ஸ்டைலும் ஈர்க்கும்படியாக இல்லை. அவர் தேறுவாரா? என்ற சந்தேகமும் எழுந்தது. அந்தத் தொடரில் தோனியின் 'பேட்டிங் சராசரி' மிகவும் 'சராசரி'தான்.
ஆனாலும், அதனைத் தொடர்ந்து வந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு தேர்வானார் தோனி. அப்போதைய கேப்டன் கங்குலியும், பயிற்சியாளர் கிரேக் சாப்பலும் இளம் வீரர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே அதற்குக் காரணம் இரண்டாவது போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கினார் தோனி. அதில் இந்திய கிரிக்கெட்டின் புதிய வரலாறு எழுதப்பட்டது என்றே சொல்லலாம். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி, 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார் தோனி. அதுவே இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் ஆனது. நாம் பார்த்துக் கொண்டிருப்பது தோனியையா? அல்லது விவியன் ரிச்சர்ட்ஸின் புயல் வேக ஆட்டத்தையா? என வியந்தனர் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள். அந்தப் போட்டியில் சதத்தை நிறைவு செய்தபோது அவரது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. இயல்பாகவே இருந்தார்.
தோனி எப்படி கிரிக்கெட் வீரர் ஆனார்?
கிரிக்கெட்டில் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டத் தொடங்கிய தோனிக்கு, இளம் பருவத்தில் கால்பந்து, இறகுப்பந்து போட்டிகளில்தான் ஈடுபாடு அதிகம். இந்த விளையாட்டுகளில் மாவட்ட மற்றும் கிளப் அளவிலான போட்டிகளுக்கு அவர் அதிக அளவில் தேர்வானார். தோனி, தனது கால்பந்து அணிக்கு கோல் கீப்பராக இருந்துள்ளார். தோனியை கிரிக்கெட் விளையாடுமாறு அனுப்பி வைத்தது அவரது கால்பந்து பயிற்சியாளர்தான். தோனி, அதற்கு முன் கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனாலும், விக்கெட் கீப்பராக நன்கு செயல்பட்டார். அதன் விளைவாக, கமாண்டோ கிரிக்கெட் கிளப்பிற்கு விக்கெட் கீப்பரானார்.
சிறப்பாக கீப்பிங் செய்ததால், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான வினு மன்காட் கோப்பைத் தொடருக்குத் தேர்வானார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கினார் தோனி.
தோனியின் ஆரம்ப காலம்
1998ல் பள்ளிப்படிப்பை முடிக்கும் காலம் வரை, பள்ளி மற்றும் கிளப் அளவிலான கிரிக்கெட்டில் மட்டுமே பங்கேற்றார். CCL எனப்படும் மத்திய நிலக்கரி சுரங்க அணிகளுக்காக விளையாடியபோது சதங்களை விளாசி பீகார் கிரிக்கெட் சங்கத்தின் கவனத்தை ஈர்த்தார் தோனி. அதன் விளைவாக, பீகாருக்கான ராஞ்சி அணி, ஜூனியர் பீகார் அணி ஆகியவற்றில் இடம்பிடித்தார்.
பீகார் அணி சார்பில் 1999- 2000ஆவது ஆண்டு தொடரில் ரஞ்சி கோப்பைத் தொடரில் பங்கேற்று, பெருமளவில் ரன்களைக் குவித்தார். அதனால் பாராட்டுகளும் குவிந்தன. பீகாருக்காக விளையாடிய தோனி, அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலம் உருவான பின்னர் அந்த அணிக்காக விளையாடத் தொடங்கினார். தோனியின் சொந்த ஊரான ராஞ்சி நகரம் தற்போது ஜார்கண்டில்தான் உள்ளது. அங்குதான் 1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி பிறந்தார் தோனி. அவருக்கு ஜெயந்தி என்ற சகோதரியும், நரேந்திர சிங் தோனி என்ற சகோதரரும் உண்டு.
ரயில்வே பணியில் தோனி
கிரிக்கெட்டில் பல சிகரங்களைத் தொட்ட தோனி, ரயில்வேயில் சிறிது காலம் பணிபுரிந்துள்ளார் என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆம். 2001 முதல் 2003 வரை மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதராக இருந்தார் தோனி. அது குறுகிய காலம் என்றபோதிலும், நேர்மையான ஊழியராக இருந்தவர் தோனி என்று புகழாரம் சூட்டுகின்றனர் அவருடன் பணிபுரிந்தவர்கள்.
குறும்புத்தனம் கொண்ட தோனி, ரயில்வே குடியிருப்பில் தங்கியிருந்தபோது நிகழ்ந்த ஒரு வேடிக்கையான சம்பவம் அடிக்கடி நினைவுகூரப்படுவதுண்டு. ஒரு முறை தோனியும் அவரது தோழர்கள் இருவரும் சேர்ந்து வெள்ளை நிற போர்வையைப் போர்த்திக்கொண்டு ரயில்வே குடியிருப்பை சுற்றி வந்துள்ளனர். அவர்களை பேய் என நினைத்து இரவு நேரக்காவலர்கள் பீதியில் உறைந்துவிட்டனர். உண்மை என்னவெனத் தெரியாததால், "ரயில்வே குடியிருப்புகளில் பேய்கள் உலா" என மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வந்தது.
தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?
கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறத் தொடங்கிய தோனி, ஜார்கண்ட் அணிக்காக ரஞ்சி மற்றும் துலீப் கோப்பைத் தொடரில் சிறப்பான பங்களிப்பை செலுத்தினார். அப்போது 'சிறு நகரங்களில் திறமையான வீரர்களை அடையாளம் காணுதல்' எனும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம். அதன் மூலமாக அடையாளம் காணப்பட்டார் தோனி.
ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் தோனியின் ஆட்டத்தைப் பார்த்த மேற்கு வங்க அணியின் முன்னாள் கேப்டன் பிரகாஷ் போடர், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதன் பயனாக, ஜிம்பாப்வே மற்றும் கென்யா சென்ற இந்திய A அணியில் இடம் பிடித்தார் தோனி. அந்தத் தொடர்களில் அவரது விக்கெட் கீப்பிங் முறையும், பேட்டிங்கும் அபாரமாக இருந்தது.
தொடங்கியது தோனியின் சாம்ராஜ்யம்
அதன் விளைவாக, இந்திய அணியின் கதவுகள் திறந்தன தோனிக்கு. 2004ல் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரில் தொடங்கியது தோனியின் சாம்ராஜ்யம். அதன் பின்னர் ஓராண்டு கழித்து, அதாவது 2005ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியே அவர் விளையாடிய முதல் டெஸ்ட்டாகும். அதில் தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக சேர்க்கப்பட்டார் தோனி. மழையால் பாதிக்கப்பட்ட அந்தப் போட்டியில் அவர் அடித்தது 30 ரன்கள். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் விரைவான அரை சதம் கண்டார். இதன் பயனாக, 'C' கிரேடு சம்பள வரிசையில் இருந்த தோனியை 2005 டிசம்பரில் B கிரேடு வீரர்களின் பட்டியலில் சேர்த்தது கிரிக்கெட் வாரியம்.
மறக்க முடியாத அந்த 183* ரன்
அதே தொடரில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி இன்றும் நினைவில் கொள்ளப்படுகிறது. அதற்குக் காரணம் தோனி. அதில் குமார் சங்ககராவின் சதத்தால் 299 ரன்கள் குவித்தது இலங்கை அணி. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு முதலில் இடி விழுந்தது. டெண்டுல்கர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் ரன் வேகத்தை அதிகரிக்க மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டார் தோனி. அந்த முடிவு சரியானது என்பதை நிரூபித்துக் காட்டினார். அதில் 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்ற தோனி, இந்திய அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.
இதன் மூலம் விக்கெட் கீப்பராக பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் எடுத்து தான் படைத்திருந்த சாதனையை முறியடித்தார் தோனி. மேலும் ஒரு நாள் போட்டியில் இரண்டாவதாக விளையாடிய அணியின் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்என்ற சாதனையாகயும் அது அமைந்தது.
அதன்பின் 2006ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஃபைசலாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் தோனி. இந்தியா நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இர்ஃபான் பதானுடன் இணைந்தார் தோனி. ஃபாலோ ஆனைத் தவிர்க்க 107 ரன்கள் தேவை என்ற நிலையில், அதிரடியாக விளையாடி 93 பந்துகளில் முதல் சதத்தை அடித்தார்.
கில்கிறிஸ்ட்டை பின்னுக்கு தள்ளிய தோனி
ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால், 2006 ஏப்ரலில் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட்டைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் தோனி. அதே ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மற்றும் DLF தொடர்களில் தோனியின் விளையாட்டுத் திறன் குறைந்தது. இந்தியாவும் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தொடரில் தோனி எடுத்தது 43 ரன்கள் மட்டுமே. இதுதவிர, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க சுற்றுய்பயணங்களிலும் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. தென்னாப்பிரிக்கத் தொடரை 4 பூஜ்யம் என்ற கணக்கில் இழந்தது இந்தியா. தோனியும் ஆட்டத்திறனை மீட்க முடியாமல் திணறினார்.
2006ல் மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றபோது, ஆன்டிகுவா டெஸ்ட்டில் அசுர வேகத்தில் 69 ரன்கள் எடுத்தார் தோனி. ஆனால் அடுத்த மூன்று டெஸ்ட்களில் ஆறு இன்னிங்களில் அவர் அடித்தது 99 ரன்கள் மட்டுமே. இருந்தபோதிலும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் மேம்பட்டிருந்தது. அந்தத்தொடரில் 13 கேட்சுகளைப் பிடித்தார். நான்கு வீரர்களை ஸ்டம்பிங் மூலம் அவுட்டாக்கினார்.
தோனியின் மோசமான காலம் அது
டெஸ்ட்டில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதிலும், 2007ல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் வளமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியும் வெற்றியை ருசித்தது. அந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு அணி சரியான முறையில் தயாராகிவிட்டதாக அனைவரும் நம்பினர். ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்தது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியது இந்திய அணி. வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டங்களில் ரன் எடுக்காமலேயே அவுட்டானார் தோனி. அந்த உலகக் கோப்பையில் அவர் எடுத்தது வெறும் 29 ரன்கள் தான். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோற்றபோது, ராஞ்சியில் தோனி கட்டிவந்த வீட்டை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் சூறையாடினர். அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த கசப்பான அனுபவத்திலிருந்து விடுபட, உலகக் கோப்பைக்கு பின்னர் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரையே பயன்படுத்திக் கொண்டார் தோனி. குவித்த ரன்கள், கிடைத்த ஆட்ட நாயகன் விருதுகள் போன்றவற்றால் தோல்வி முகத்தை துடைத்துக் கொண்டார். இதன்பின்னர் ஆப்ரோ -ஆசிய கோப்பைத் தொடரிலும் தோனியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மூன்று போட்டிகளில் 174 ரன்களைக் குவித்தார். மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.
கேப்டன் ஆனார் தோனி
அதன் தொடர்ச்சியாக அயர்லாந்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் போட்டித் தொடருக்கும், இங்கிலாந்து உடனான ஒரு நாள் போட்டித் தொடருக்கும் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி.
இதில் இங்கிலாந்து தொடரில் ஜொலித்ததால், B கிரேடு வீரர்களின் சம்பள வரிசையிலிருந்து ஏ கிரேடு வரிசைக்கு தரம் உயர்த்தப்பட்டார் தோனி. ஒரு பேட்ஸ்மேனாக, தோனி பெரும்பாலும் அடிப்பகுதி கை கிரிப்பை வைத்து பின்கால் பாணியில் ஆடக்கூடியவர். பந்தை நோக்கி அவருடைய கை வேகமாக செயல்படுவது வழக்கம். அதனால் அவர் அடிக்கும் ஷாட்டுகள் மைதானத்திற்கு வெளியே சென்று விடுவதுண்டு.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இருபது ஓவர் போட்டிகளில் அறிமுகமானார் தோனி. அதன் தொடர்ச்சியாக, 2007ல் முதன் முறையாக நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனானார். அந்தத் தொடரில், ஒரே இன்னிங்சில் அதிக வீரர்களை அவுட்டாக்கி, ஆடம் கில்கிறிஸ்ட் முன்பு படைத்திருந்த சாதனையை சமன் செய்தார் தோனி. இங்கிலாந்து வீரர்கள் ஐவரை ஆட்டமிழக்கச் செய்ததுடன், ஒருவரை ஸ்டம்ப்பிங் செய்ததும் இதில் அடங்கும். இந்தத் தொடரில், விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய அணி. அதன் விளைவாக அதே ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி.
பின்னர் 2008ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக இருந்தவர் அனில் கும்ப்ளே. நான்கு போட்டிகளைக் கொண்ட அந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டில், கும்ப்ளேவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் கடைசி டெஸ்ட்டிற்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி. அதுவரை அவர் துணைக் கேப்டனாக இருந்தார். காயமடைந்த கும்ப்ளே ஓய்வு பெறுவதாக அறிவி்த்தார்.
பந்துவீசி விக்கெட் எடுத்த தோனி
2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் வீரர் டிராவிஸ் டவ்லினுக்கு பந்து வீசி அவரது விக்கெட்டை சாய்த்தார் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எடுத்த ஒரே விக்கெட் இதுவாகும்.
அந்த ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் பல மாதங்களாக முதலிடத்தில் இருந்தார் தோனி. 2009ஆம் ஆண்டைப் பொறுத்த வரை தோனிக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த வருடம் 24 இன்னிங்ஸ்களில் ஆயிரத்து 198 ரன்களைக் குவித்தார். அப்போது அவரது சராசரி 70 புள்ளி 43 ஆகும். அவ்வாண்டு தரவரிசையில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர் தோனியும், ரிக்கி பாண்டிங்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம்
2009ஆம் ஆண்டில் இந்தியா வந்திருந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு சதம் அடித்தார் தோனி. அந்தத் தொடரை 2 -0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. மூன்றாவது டெஸ்ட்டில் 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது இந்திய அணி. இந்தத் தொடரில் வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக முதல் இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. தோனியின் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மணிமகுடமாக அமைந்தது.
உலகக் கோப்பையை வென்று உச்சம் தொட்டார் தோனி
அதனைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தோனியின் வாழ்க்கையில் உச்சமாகும். முதல் போட்டியில் வங்கதேசத்தை வென்று வெற்றிக்கணக்குடன் தொடங்கியது இந்திய அணி. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இலங்கையை வென்று பட்டத்தை வசப்படுத்தியது இந்திய அணி. ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 91 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார் கேப்டன் தோனி.
இந்த வெற்றிக்கு மூல காரணமே தோனி தான் என்று புகழாரம் சூட்டினார் சச்சின் டென்டுகல்கர். தோனியைப் போன்ற ஒரு சிறந்த கேப்டனுக்குக் கீழ் தான் இதுவரை விளையாடியதில்லை என்றும் பாராட்டினார் சச்சின். எந்தவொரு நெருக்கடியையும் அமைதியாக சமாளிக்கும் தோனியின் தன்மை நம்ப முடியாதது எனவும் புகழ்ந்தார் சச்சின்.
2013 மார்ச்சில், இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் என்ற சாதனை தோனி வசமானது. 49 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 21ல் வென்று கங்குலி படைத்திருந்த சாதனையை முந்தினார் தோனி. அவர் தலைமையில், இந்திய அணி 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அப்போது, இந்திய கிரிக்கெட் அணி பார்த்த கேப்டன்களிலேயே மகேந்திர சிங் தோனியே மிகச்சிறந்தவர் என்று புகழாரம் சூட்டினார் சவ்ரவ் கங்குலி.
திடீர் ஓய்வு அறிவிப்பு
2014 - 15ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் தோனிக்கு மிகவும் முக்கியமானதாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்களுக்கு அவர் தலைமை தாங்கினார். இரண்டாவதில் தோல்வி கண்டது இந்திய அணி. மூன்றாவது போட்டி சமனானது. அந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார் தோனி. இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது அவரது முடிவு. ஆனாலும் கடைசி டெஸ்ட்டில் ஒன்பது வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். அதில் எட்டு விக்கெட்களை கேட்ச் செய்து அவுட்டாக்கினார். ஒருவரை ஸ்டம்ப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார் தோனி. இதன் வாயிலாக, 134 வீரர்களை ஸ்டம்ப்பிங் மூலம் அவுட்டாக்கி இலங்கை விக்கெட் கீப்பர் குமார் சங்ககரா படைத்திருந்த சாதனையை முறியடித்தார் தோனி. டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் இருபது ஓவர் போட்டி ஆகிய மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து இந்த சாதனை அடங்கும்.
தனது கடைசி டெஸ்ட்டில், ஒரே போட்டியில் அதிக வீரர்களை அவுட்டாக்கிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார் தோனி. பின்னர் இந்த சாதனையை 2018ல் முறியடித்தார் விருத்திமான் சஹா. மொத்தம் 90 டெஸ்ட்டில் விளையாடியிருக்கும் தோனி, 4 ஆயிரத்து 876 ரன்களை எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் பதினொரு விக்கெட் கீப்பர்கள் மட்டுமே, பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளனர். ஆனால், 60 டெஸ்ட்டுகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார் தோனி. அவருக்கு அடுத்த இடத்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் 35 டெஸ்ட்டுகளில் கேப்டன் பொறுப்பைக் கவனித்துள்ளார்.
உலகக் கோப்பையில் ஏமாற்றிய தோனி
2011ஐத் தொடர்ந்து 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் தோனி தலைமையிலேயே இந்திய அணி களமிறங்கியது. அடுத்தடுத்து எளிதில் வெற்றிகளைப் பெற்ற அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. இந்தத் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்றிருந்தது.
அந்த உலகக் கோப்பைத் தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், நூறு ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா அல்லாத ஒரு அணியின் கேப்டன் என்ற பெருமை கிடைத்தது தோனிக்கு. இந்த சாதனையைப் படைத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெயருக்கும் சொந்தக்காரரானார் தோனி.
2016 ஆகஸ்டில் அமெரிக்காவிற்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் சென்ற இ்ந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் தோனி. அங்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியது இந்திய அணி. முதல் ஆட்டத்தில் தோற்றபோதிலும், அதில் ஒரு சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து ரிக்கி பாண்டிங் படைத்திருந்த சாதனையை முறியடித்தார் தோனி.
கேப்டன் பொறுப்புகளை துறந்தார் தோனி
ஒரு நாள் போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ள தோனி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அணியின் தலைவராக இருந்தபோது, ஒரு சில தருணங்களில் தண்டனைக்கு ஆளாகியுள்ளார் தோனி. 2009 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மூன்று ஓவர்களைக் குறைவாக வீசியதாக புகார் எழுந்தது. அப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடுவராக இருந்த ஜெஃப் குரோவ், தோனிக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்தார்.
இதுபோன்ற சில இடையூறுகள் வந்தபோதிலும், கிரிக்கெட்டில் சாதிப்பதில் எந்த சறுக்கலும் ஏற்படவில்லை தோனிக்கு. அறிமுகமான காலத்தில் பின்கள அதிரடி ஆட்டக்காரராகவே அவர் அறியப்பட்டிருந்தார். பின்னர் படிப்படியாக ஆடும் விதத்தை மாற்றிக் கொண்ட அவர், எந்த நெருக்கடியையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தன்னை கட்டமைத்துக் கொண்டார். எதற்கும் பதற்றமோ அல்லது கோபமா கொள்ளாத மனநிலையே அவரது வெற்றிகளுக்கு காரணம் என்று கூறுகின்றனர் சக வீரர்களும், கிரிக்கெட் வர்ணனையாளர்களும்.
ஸ்டம்பிங் ஸ்பெஷல் தோனி
தோனியின் பேட்டிங் மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங் முறையும் பெரிதும் பாராட்டப்படுகிறது. ஸ்டம்ப்பிங் என வரும்போது தோனி மிகவும் துரிதமாக செயல்படுவார் எனப் புகழ்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள். ஸ்டம்ப்பிங் மூலம் அதிக வீரர்களை அவுட்டாக்கிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை தோனி வசம் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள். அதேபோன்று விக்கெட்டுகளுக்கு இடையில் மிக விரைவாக ஓடுவதிலும் வல்லவராக அறியப்படுகிறார் தோனி.
பெயரும், புகழும் வரத் தொடங்கியதால், அதன் வாயிலாக விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் பெருமளவில் வந்தன. அதில் கோடிக்கணக்கில் பணமும் வந்து கொட்டியது. உலக அளவில் விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார் தோனி.
தோனியும், ஐபிஎல் போட்டியும்
இதுபோன்ற சூழலில் தான் 2008ஆம் ஆண்டு அறிமுகமானது ஐபிஎல் எனும் பணம் கொழிக்கும் போட்டி. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவ்வணிக்குத் தலைமை தாங்கி, 2010 மற்றும் 11 ஆண்டுகளில் சாம்பியன் கோப்பையை வென்றெடுத்தார் தோனி. பிறகு சூதாட்டப்புகாரில் சிக்கியதால் இரண்டாண்டு காலத் தடையைச் சந்தித்தது சென்னை அணி. அந்தக்காலக்கட்டத்தில் அவரை புனே சூப்பர் ஜெயண்ட் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த அணி 2016ல் அவருக்கு வழங்கிய ஊதியம் ஒன்று புள்ளி ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஆனாலும், அந்தத் தொடரில் தோனி தலைமையிலான புனே அணியால் ஏழாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
இரண்டாண்டு தடை முடிந்ததை அடுத்து, அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் சேர்க்கப்பட்டது சென்னை அணி. தோனி பழைய அணிக்கே திரும்பி மறுபடியும் கேப்டனானார். இந்தத் தொடரில் 455 ரன்களை எடுத்ததுடன், அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் உதவினார் தோனி.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக ஆட்டத்தை அதிரடியாக முடித்து வைப்பதில் கைதேர்ந்தவர் தோனி என்பதை ரசிகர்கள் அறிவர். அதனால்தான் அவருக்கு ஒரு புனைப் பெயர் வந்து சேர்ந்தது. அது "THE FINISHER" .
தகவல்கள்: ஜாகிர் உசேன்