கன்னட சினிமாவின் முன்னனி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கி இருக்கும் சினிமா 777 சார்லி. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நாய், குதிரை, மாடு போன்ற ஐந்தறிவு ஜீவராசிகளை கதாபாத்திரங்களாக வைத்து எத்தனையோ சினிமாக்கள் வெளியாகியிருக்கின்றன. அது போன்றதொரு சினிமா தான் 777 சார்லி என்றாலும் இந்த சினிமா எங்கு வேறுபடுகிறது என்கிற விசயமே இதனை மற்ற சினிமாக்களிலிருந்து தனித்து காட்டியிருக்கிறது.
நாய், குதிரை போன்றவற்றை வைத்து நிறைய வேடிக்கை காட்டும் சினிமாக்கள் உள்ளன., என்றாலும் சார்லி கொஞ்சம் எமோசனலாக ஆடியன்ஸை தொட்டு வெற்றி பெற்றிருக்கிறாள். சின்ன வயதில் விபத்தொன்றில் தன் குடும்பத்தை இழந்த தர்மா, கொண்டாட உறவுகள் என யாருமில்லாமல் தனித்தே வாழ்கிறார். கரடு முரடு பேர்வழியான இவரது வாழ்வில் வழித்துணையாக வந்திணைகிறது சார்லி எனும் பெண் நாய். துவக்கத்தில் தன்னிடம் கடுமை காட்டிய நாயகனின் மனதில் அன்பால் இடம் பிடிக்கிறது சார்லி. பிறகு நீளும் இவ்விருவரின் அன்புப் பயணமே மீதி கதை.
இரண்டாம் பாதியின் எமோசனல் காட்சிகளுக்காக முதல் பாதி முழுக்க ராவாக காத்திருக்க வைத்து கொஞ்சம் அசதியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் இரண்டாம் பாதியில் சார்லியின் கடைசி ஆசையை நிறைவேற்ற சார்லியுடன் வட இந்தியா நோக்கி பயணிக்கும் தர்மா வழியில் பாபி சிம்ஹா உள்பட சில சிறப்பு கதாபாத்திரங்களை சந்திக்கிறார். இப்படியாக வழியில் தோன்றும் சில கதாபாத்திரங்கள் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன. அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். நோபின் பவுலின் இசை கொஞ்சம் சுமார் தான். பாடல்கள் எதுவும் மனதில் ஒட்ட வில்லை.
சார்லியின் கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியா முழுக்க தனது புல்லட்டில் பயணிக்கும் ஹீரோ திரும்பிச் செல்லும் போது விமானத்தில் போகலாம் என்கிறார். அதனை வரும் போதே செய்திருந்தால் இரண்டாம் பாதி அவசியமே பட்டிருக்காது. நகைச்சுவைக்காக சில காட்சிகள் வந்து போகும் கால்நடை மருத்துவர் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். நாயகி சங்கீதா ஸ்ரிங்கிரி இக்கதையில் சம்பிரதாயமாக மட்டுமே வந்து போகிறார்.
பனிக்காட்டில் நாயும் நாயகனும் ஓடும் காட்சி, இருவருமாக க்ளைடரில் பறக்கும் காட்சி என சில காட்சிகள் மனதில் அழகான ஓவியங்களாக பதிகின்றன. கால் நடை பிரியர்களுக்கு., விலங்கு நல ஆர்வலர்களுக்கு, கொஞ்சம் பீல் குட் சினிமா பிரியர்களுக்கு 777 சார்லி நிச்சயம் பிடிக்கும்.