கருப்பட்டி, கடுக்கா, பால், தயிர், இளநீர், கற்றாழை... என்னடா வீட்டை பத்தி சொன்றேன்னு சொல்லிட்டு சமையல் நிகழ்ச்சிபோல ஆரம்பிக்கிறேன்னு நெனைக்காதீங்க. மேற்சொன்ன பொருட்களை வெச்சுதான் ஒருத்தர் வீடு கட்டியிருக்காரு அதத்தான் இப்ப நாம பாக்கப்போறோம்.
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலை பள்ளங்கியில் அடர்ந்த காடு, அழகிய அருவிகள் சறுசறுக்கும் சறுகுகள் சலகலக்கும் நீரோடையைகள் என இயற்கையோடு இணைந்து கட்டப்பட்டுள்ளது சுண்ணாம்பு வீடு, 1200 சதுரடியில் கட்டப்பட்டுள்ள சுண்ணாம்பு வீட்டின் சிறப்பம்சங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
காடுகளுக்கு மத்தியில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த வீட்டை அந்த பகுதியில் கிடைக்கும் மஞ்சள் மற்றும் கருப்பு நிற மண்ணைக் கொண்டு கட்டியுள்ளார்கள். இதில் என்ன பிரச்னை என்றால், இந்த மண் விவசாயத்திற்கு உகந்ததாக இருந்தாலும் இதில் கரையான் அதிகம் வரும் என்பதால் கட்டடம் கட்ட பயன்படுத்த பார்த்துதான் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள்.
நீரூற்றை எப்படி சமாளிப்பது?
இந்த வீட்டை கட்டியுள்ள பகுதி மலைப் பிரதேசம் என்பதால் இந்த பகுதியில் நீரூற்று அதிகமாக காணப்படும். அதை சமாளிக்கும் வகையில் கற்களால் 7 அடிக்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 5 அடி பூமியின் உட்பகுதியிலும், அடுத்த 2 அடி பூமிக்கு மேலேயும் போட்டிருக்காங்க. ஆனால், பூமிக்கு அடியில் போட்டப்பட்ட 5 அடியில் 3 அடிக்கு வெறுமனே கல்லை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இதை வெற்றுக்கல் அடுக்கு என்று சொல்வார்கள். இது எதற்கு பயன்படும் என்றால், நீரூற்று அந்த பகுதியின் வழியாகச் சென்றால் அது அந்த பகுதியை எளிதாக கடந்து சென்றுவிடும், இதனால் கட்டடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 3 அடிக்கு மேலே உள்ள பகுதியில் கற்களைக் கொண்டு சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தியே அஸ்திவாரத்தை அமைத்திருக்கிறார்கள்.
கான்கிரீட் பெல்ட் இல்லை.. ஆணி கல் பீம்
பொதுவாக அஸ்திவாரத்துக்கு மேல கான்கிரீட் பெல்ட் ஒன்று போடுவாங்க. ஆனா. இந்த வீட்டை பொருத்தவரை சிமெண்ட் பயன்படுத்ததால், அரண்மனைகளில் பயன்படுத்தப்படும் ஆணி கல் கொண்டு பீம் அமைத்திருக்கிறார்கள். வராண்டாவை கடந்து தேக்கால் செய்யப்பட்ட அழகிய கதவை திறந்து உள்ளே சென்றால், பெரிய ஹால் உள்ளது. ஹாலின் தரைத்தளத்தில் சுண்ணாம்பு டைல்ஸ் போட்டு மேற்பகுதியில் பாலீஸ் செய்யப்பட்டிருக்கு. தரைப் பகுதிகளில் உள்ள மண் வீடுகளுக்குச் சென்றால் வெளியே சூடாகவும் வீட்டினுள் ஜில்லென்றும் இருக்கும். ஆனால் மலைப்பகுதியில் இந்த வீடு இருப்பதால் வெளியே குளிராகவும், உள்ளே வந்தால் கதகதப்பாகவும் இருக்கு. வீட்டின் வெளியே சூடாக இருந்தால் உள்ளே குளிராகவும், வெளியே குளிராக இருந்தால் உள்ளே சூடாகவும் சீதோசன நிலையை மண்சார்ந்த வீடுகள் சமன் செய்யும்.
தண்ணீருக்கு பதில் மூலிகை சாறுகள்!
கல் சுண்ணாம்பு, கிளிஞ்சல் என்ற சங்கு சுண்ணாம்பு என இரண்டு வகையான சுண்ணாம்புகள் உண்டு. சுண்ணாம்பு பாறையில் இருந்து எடுக்கப்படும் கல் சுண்ணாம்பு சிமெண்ட் தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது. சாதாரணமாக வீட்டை கட்டும் போது, சிமெணட், மணல், தண்ணீர் கலந்த கலவையைக் கொண்டு கட்டுவாங்க. ஆனால், இந்த வீட்டை கட்டுவற்கு சில இடங்களில் மணலும், சில இடங்களில் மண் மற்றும் கல் சுண்ணாம்பும் பயன்படுத்தியிருக்காங்க. இதோடு கலவைக்கு தண்ணீர் பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக மூலிகை சாறுகளை பயன்படுத்தி இருக்காங்க.
வேப்பம்பட்டை, ஈஞ்சம்பட்டை, கடுக்காய், கத்தாழை, தயிர் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் சாறுகளை பயன்படுத்தி சுவரின் உள் மற்றும் வெளிப்புற பூச்சுக்கு பயன்படுத்தி இந்த வீட்டை கட்டியிருக்காங்க. தனித்தனியாக இருக்கும் மூலிகை நீரை கட்டடத்தின் தேவைக்கேற்ப கலந்து பயன்படுத்துவார்கள். இந்த மூலிகை கலவையில் முக்கியமாக பயன்படுத்திய மூலிகை, நீல ஆவாரம்பூ மற்றும் கடுக்காய். இந்த வீட்டில் இரண்டு வகையான சுவர்கள் இருக்கிறது. வெளிப்புற சுவர்கள் அனைத்தும் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
கல் சுவரை எப்படி எழுப்புவார்கள் தெரியுமா?
செங்கல் சுவர் வைக்கும் போது ஒரு செங்கலுக்கும் மற்றொரு செங்கலுக்கும் தொடர்பே இருக்காது. ஆனால், கருங்கல்லால் சுவர் வைக்கும் போது ஏதாவது ஒரு இடத்தில் ஒரு கல்லுக்கும் மற்றொரு கல்லுக்கும் தொடர்பு இருக்கும். இரண்டு கல்லுக்கும் இடையே கலவை வைத்து பின்னர் சுத்தியால் தட்டும்போது ஒலி வித்தியாசம் உணரப்படும். அதன் பிறகுதான் அடுத்த அடுக்கு கல்லை வைத்து கட்டுவார்கள். கல் சுவரை இப்படி எழுப்பினால்தான் அது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும்.
வீட்டோட மாஸ்டர் பெட்ரூம் தரைத்தளம், பஞ்சகாவ்ய தரைத்தளம்!
அடுத்து இந்த வீட்டோட மாஸ்டர் பெட்ரூம் தரைத்தளம், பஞ்சகாவ்ய தரைத்தளம் என்று சொன்னார்கள். மாட்டு சாணம், மாட்டு கோமியம், பால், தயிர், பன்னீர், இளநீர், முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றுடன் 100 சதுர அடிக்கு ஒரு கிலோ சங்கு சுண்ணாம்பு சேர்த்து கலந்து சாணி மொழுவதுபோல் மேற்கண்ட கலவையை மொழுகிதான் தரைத்தளத்தை அமைத்துள்ளார்கள். வீட்டின் உட்புற சுவர் அனைத்தும் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இரும்புக் கம்பியை பயன்படுத்தாமல், பாக்கு மரம் மற்றும் மூங்கில் மரத்தை 10 எம்.எம் குச்சிகளாக வெட்டியெடுத்து அதை கட்டுக்கம்பியால் கட்டி அதன் மேல் மண் கலவையை வைத்து கை மற்றும் கால்களால் அமுக்கி சுவரை எழுப்பியிருக்காங்க.
வேங்கை மரத்தால் தரைத்தளம்; இயற்கையான வர்ணங்கள்
சமையல் கட்டின் மேற்கூரை செங்கல்களை அடுக்கி அதன் மேல் பூசி இருக்காங்க. சமையல் அறை ஸ்லாப் மார்ப்பிள், கிரானைட் மற்றும் கடப்பா கல்லில் பார்த்திருப்போம். ஆனால் இங்கு, கல்லை வைத்து சுண்ணாம்பு கலவையால் மொழுகி மேற்பூச்சுக்கு தேங்காய் செரட்டையின் கரி மற்றும் கத்தாழையை பயன்படுத்தியிருக்காங்க. காட்டு நெல்லி மரத்தால் அமைந்துள்ள மாடிப்படியின் கைப்பிடி, அதிக எடையை தாங்கும் தன்மையுள்ள கருமருது மற்றும் இளமருது மரத்தால் ஆன படிகளை அமைத்துள்ளார்கள்.
வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனி, இங்குள்ள சுவர் சரிசமமின்றி கரடு முரடாக காட்சியளிக்கிறது. இது முன்னர் உள்ள இயற்கையான சுவர்போல் காணப்படுகிறது. இந்த வீடு; மற்ற வீடுகளைவிட மிகவும் தனித்துவமாகத் தெரிகிறது. அடுத்து முதல் தளத்தில் உள்ள பெட்ரூம் வேங்கை மரத்தால் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பாத்ரூமில் உள்ள சுவர்களுக்கு இயற்கையான வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது.
5 ஆயிரம் வருசம் ஆனாலும் நிலைத்து இருக்கும்
இந்த வீட்டின் சிறப்பு குறித்து கட்டிட வடிவமைப்பாளர் குமார் கூறியபோது... ”இந்த சுண்ணாம்பு பில்டிங் வேல எங்க தாத்தாக்கு தெரியும். அவருகிட்ட இருந்து கத்துக்கிட்டேன், பிறகு ஹைதராபாத்துல எங்க தாத்தாவோட நண்பர் இருந்தாரு அவருகிட்ட இருந்து அப்புறம் கொல்லத்துல இருந்து ஒருத்தர்கிட்ட படிச்சேன். அதன்பிறகு இந்த சுண்ணாம்பு வீடு வேல செஞ்சுக்கிட்டு இருக்கேன். சிமெண்ட்ல வீடு கட்டுனா 50, 60 வருசம்தான் நல்லா இருக்கும். ஆனா இந்த வீடு 500 வருசமில்ல 5 ஆயிரம் வருசம் ஆனாலும் என்ன டேமேஜ் வருதோ சரி செய்தால் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து இருக்கும்.
மலைப் பிரதேசத்துல சுண்ணாம்பு வீடு கட்டும்போது யாரும் நம்மை நக்கல் பண்ணமாட்டாங்க. இதையே கீழ கொண்டு போய் கட்டுனா, இந்த காலத்துல போயி இவன் கருப்பட்டியை கலக்கிக்கிட்டு கெடக்கான், இப்பபோயி புளிய கலக்கிட்டு கெடக்கான் அப்படீன்னு சொல்லுவாங்க. இந்த பில்டிங்ல ரெகுலரா ஒருவருசம் உறங்கி எழுத்திருக்கும் ஆட்கள பாத்தாலே பிரஷ்ஸா இருப்பாங்க. நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். இடி முழக்கம் வந்தால் இந்த வீட்டில் விரிசல விழாது. இந்த கட்டடத்தின் லைப்பும் கூடுதல். இங்கு வசிக்கிறவங்க உடம்புக்கும் நல்லது.
சுண்ணாம்பு வீட்டை கட்டிட்டு ஒரு 500 வருசத்துக்குப் பிறகு இந்த பில்டிங் இங்க வேண்டாம் இன்னொரு இடத்துல அமைக்கணும்னா, இந்த வீட்ல இருக்குற பொருள் அனைத்தையும் எடுத்து இன்னொரு இடத்துல செட்டப் பண்ணலாம். இதுல இருக்குற எந்த பொருளும் அழிந்து போகுற பொருள் இல்ல என்று கூறினார்.
1200 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு இவங்களுக்கு கொஞ்சம் அதிகமாகதான் ஆகியிருக்கும். அதுக்கு காரணம் என்னன்னா? மலைப் பிரதேசம் என்பதால் போக்குவரத்துச் செலவே அதிகமாகியிருக்கும். இதையே நீங்க ஒரு சம நிலப்பரப்பில் கட்டினால் ரூ.40 முதல் 50 லட்சம் வரை செலவாகும்.
இந்த வீடு கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும் மீண்டும் அடுத்த வீட்டின் தகவலுடன் சந்திப்போம்.