வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் தளத்தில் பல முக்கிய அப்டேட்களை வரும் நாட்களில் அமல்படுத்த உள்ளது. அந்த அம்சங்கள் என்னென்ன? அவை உண்மையிலேயே பயனர்களுக்கு பயன் தருமா? என்பதை இத்தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
1. இனி ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் 1024 பேர் இருக்கலாம்!
நண்பர்கள், குடும்பத்தினர் எனப் பலர் இணைந்து குழுவாக கலந்துரையாடும் அனுபவத்தை நமக்கு தரும் இந்த “வாட்ஸ்அப் குழுக்களில்” ஒரு குழுவில் தற்போது அதிகபட்சமாக 512 பயனர்களை மட்டுமே சேர்க்க இயலும் நிலை உள்ளது. அடுத்து வரவுள்ள அப்டேட் மூலம் இனி ஒரு வாட்ஸ்அப் குழுவில் அதிகபட்சமாக 1024 பேர் வரை சேர்க்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்கான பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் வாட்ஸ்அப்பின் போட்டியாளராக கருதப்படும் டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் அதிகபட்சமாக 2 லட்சம் பேர் வரை பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. தவறான செய்திகளை திருத்தும் “எடிட் வசதி”:
வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய மெசேஜ்களை தவறுதலாக அனுப்பிவிட்டால் அதை திருத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த வசதி வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. எனவே இனி பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் உள்ள தட்டச்சுப் பிழைகளை நீக்க இனி அந்த மெசேஜை முழுமையாக டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். ஆனால் வாட்ஸ்அப்பில் வழங்கப்படும் இந்த எடிட் வசதியில் இரு சிக்கல்கள் இருக்கின்றன. அனுப்பிய மெசேஜை எடிட் செய்த பின் அந்த மெசேஜில் “Edited" என்ற லேபிள் தோன்றும். இதை அந்த மெசேஜைப் பெறும் பயனரும் பார்க்க முடியும். அதே வேளையில் மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் மட்டுமே அதை எடிட் செய்ய இயலும். அதன்பின்னர் அதை எடிட் செய்ய வாய்ப்பில்லை என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
3. ஒருமுறை பார்க்க அனுப்பப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்கத் தடை:
வாட்ஸ்அப் தளம் இறுதியாக பயனர்களுக்கு மிகவும் தேவையான அம்சத்தை வெளியிடுகிறது. பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பயனரின் தனியுரிமையை மேம்படுத்த, தளமானது இப்போது ஒருமுறை பார்க்கும் அம்சத்துடன் (One Time View) அனுப்பப்படும் அனைத்து மீடியாக்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதை கட்டுப்படுத்தும் வசதியை வெளியிட உள்ளது. இந்த அம்சம் தற்போது சில ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பயனருக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. அதிக வசதிகளுக்கு வாட்ஸ்அப் பிரீமியம் சந்தா:
டெலிகிராம் செயலியில் அறிமுகமானது போலவே அதிக வசதிகளை பெறுவதற்கு சந்தா வசூலிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் தளம் முடிவு செய்துள்ளது. ஆனால், அறிமுகமாகும் இந்த வாட்ஸ்அப் ப்ரீமியம் சந்தா வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படாது என்றும் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்தாவை செலுத்துவதன் மூலம் பிசினஸ் கணக்கு பயனர்கள் தங்கள் வணிகப் பக்கத்தை தங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்க முடியும்.
மொபைல் எண் இல்லாமல் தங்கள் வணிகப் பெயர் கொண்டு இயங்கும் வசதியும் இச்சந்தாவில் வழங்கப்பட உள்ளது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் ஒரு கணக்கை 4 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் 10 வெவ்வேறு சாதனங்களில் தங்கள் கணக்கை ஒரே நேரத்தில் பார்வையிட பயன்படுத்தும் வசதி வழங்கப்பட உள்ளது. மேலும் பிரீமியம் சந்தா செலுத்துவதால் 32 பங்கேற்பாளர்களுடன் வீடியோ காலில் பேசவும் முடியும். இந்த சந்தா வசதி கட்டாயமானதல்ல என்றும் அனைத்து பயனர்களும் கூடுதல் வசதிகள் இல்லாமல் பிற வசதிகளை வழக்கம்போல பயன்படுத்தலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த சந்தா வசதி வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய் மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் பீட்டா வெர்ஷன்களில் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த சந்தா வசதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்தாவின் விலை விவரங்கள் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் இதன் விலை என்ன என்பது அந்நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. தலைப்புடன் ஆவணப் பகிர்வு:
வாட்ஸ்அப் அதன் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFகளை தலைப்புகளுடன் அனுப்ப அனுமதிக்கிறது. ஆனால், விரைவில் இயங்குதளம் ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிட உள்ளது. இது பயனர்கள் தங்கள் ஆவணங்களை தலைப்புகளுடன் அனுப்ப அனுமதிக்கிறது. தேடல் விருப்பத்தைப் பயன்படுத்தி (Using Search Option) அரட்டையில் பெறப்பட்ட அல்லது அனுப்பப்பட்ட எந்த ஆவணங்களையும் பயனர்கள் தேட இந்த அம்சம் உதவும். இந்த அம்சம் விரைவில் பீட்டா சோதனைக்காக வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.