அடுத்த வருடம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி போட்டி என்று சொல்லப்படும் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திங்கட்கிழமையன்று (நவம்பர் 12) சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த ஐந்து மாநில தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்? பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி மத்தியிலே நாலரை ஆண்டுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையிலே, அடுத்த பொதுத் தேர்தலில் காற்று யார் பக்கம் வீசும் என்பதை ஓரளவுக்கு கோடிட்டு காட்டக்கூடியதாக இந்த சட்டசபைத் தேர்தல்கள் இருக்கும் என முக்கிய அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை 2014ஆம் வருட பொதுதேர்தல் வெற்றிக்கு பிறகு மிகவும் முக்கியமான மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா அரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இதைத்தவிர பாரதிய ஜனதா கட்சி குஜராத் மாநிலத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது.
மேலும் காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி விழுந்து அங்கே பாரதிய ஜனதா அல்லது தோழமைக் கட்சிகள் ஆட்சிக்கு வரும் சூழ்நிலை உருவாகும் என்று வலியுறுத்தி கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்று 2019 ஆம் வருட மக்களவை தேர்தலுக்கு முழு தன்னம்பிக்கையுடன் பாரதிய ஜனதா கட்சி களம் இறங்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
ஆனால் 2014ம் வருடத்தில் இருந்தது போன்ற சூழ்நிலை 2019 இருக்காது என அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, கருப்பு பணத்தை ஒழிக்க போவதாக தொடர்ந்து வலியுறுத்திய போதிலும் அது தொடர்பான பெரிய வெற்றி எதுவும் அரசுக்கு இதுவரை கிடைக்கவில்லை. மாறாக, விஜய் மல்லயா மற்றும் நீரவ் மோடி போன்றோர் பெரிய மோசடிகளை செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பி சென்றுள்ளார்கள்.
அதே சமயத்திலே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பெருமளவுக்கு அரசுக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கியது. இதைத்தவிர பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தது அதனால் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்பட்ட சிக்கல்கள், அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது காரணமாக மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டது என்று ஒவ்வொன்றாக அரசுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கக்கூடிய விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்கிற நிலைதான் ஏற்படுகிறது.
ஊழலை ஒழிப்போம் என்று பஜக சொல்லி வந்த நிலையில், ரபால் போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் என பெரிய சர்ச்சை நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் அணில் அம்பானிக்கு இதில் பங்கு உண்டு என விவாதங்கள் உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என நீண்டு கொண்டே போகின்றன.
ஒருபக்கம் நாங்கள் வளர்ச்சிக்கு வித்திடுவோம், வளர்ச்சியே முக்கியம் என பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினாலும், இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒரு சாரார் மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் போன்ற இந்துத்துவ அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும், பசுவதையை ஒழிக்க வேண்டும், ஹிந்து மதத்துக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு விதமான வகைகளில் மத ரீதியான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில்தான் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பிரச்சினை அதிகம் இருப்பதால் வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக திங்கட்கிழமையன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நவம்பர் 20ஆம் தேதியன்று மீதமுள்ள 72 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கு அடுத்தகட்டமாக மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே போலவே சிறிய வடகிழக்கு மாநிலமான மிசோராமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இறுதியாக ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே நாளில், ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் அனைத்தும் நடைபெற்று, டிசம்பர் 11ஆம் தேதியன்று முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இப்போதுள்ள சூழ்நிலையை பார்த்தோமென்றால், ரமன் சிங் தலைமையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து வரும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று அதிகாரத்தை தக்கவைத்து கொள்வது சுலபமாக இருக்கும் என கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பல்வேறு குழப்பங்கள், பகுஜன் சமாஜ் கட்சி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் அஜித் ஜோகியுடன் கூட்டணி வைத்து இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் ரமன் சிங்குக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை சிவராஜ் சிங் தலைமையில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. வியாபம் ஊழல் போன்ற பிரச்சினைகள் பெரிதாக வெடித்திருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தொடர்ந்து நீடித்து வரும் உட்கட்சி பூசல் காரணமாக பாரதிய ஜனதா மக்கள் அதிருப்தியையும் மீறி இந்த மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஜோதிர்ஆதித்யா சிந்தியா, கமல் நாத், திக்விஜய் சிங் என்று பல்வேறு தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருவதால் காங்கிரஸ் வெற்றிக்கனியை தவறவிடும் நிலைக்கு தள்ளப்படும் என அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அச்சப்படுகிறார்கள்.
முக்கியமான வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. ராஜஸ்தானை பொறுத்தவரை 5 வருடம் பாரதிய ஜனதா ஆட்சி அடுத்த ஐந்து வருடம் காங்கிரஸ் ஆட்சி என்று தொடர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலை தொடர்ந்தால் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும்.
வடகிழக்கு மாநிலமான மிசோரம், 40 சட்டசபை தொகுதிகளை மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். வடகிழக்கு இந்தியாவில் அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், மிசோரம் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தனியாக அல்லாமல் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை மிசோரமில் வீழ்த்துவதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளது.
தற்போது தேர்தல் நடக்க உள்ள ஒரே தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் கே சந்திரசேகர் ராவ் தலைமையில் நடந்து நடந்து வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி பொதுமக்களுக்கு திருப்திகரமாக இல்லை என்றாலும், அதிரடியாக சட்டசபையை முன்கூட்டியே கலைத்து தேர்தல் தேர்தல் நடத்துவதன் மூலமாக மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க அந்த கட்சி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதே சமயத்தில் சந்திரசேகர் ராவை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கியிருக்கின்றன. இருந்த பொதியுலும் ஜெகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் பலமான போட்டியாளராக திகழ்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு மறைமுகமாக கே சந்திரசேகர் ராவ் ஆதரவளித்து வந்தாலும், தெலங்கானா சட்டசபை தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதாவுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகிறது.
இந்த சட்டசபை தேர்தல்களில் எப்படி முடிவுகள் அமைகிறது என்பது அடுத்த வருடம் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி எவ்வளவு தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கும் என்பதை முடிவு செய்யக் கூடியதாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆகவேதான் இந்த சட்டசபை தேர்தல்கள் அடுத்த வருட மக்களவை தேர்தலுக்கு அரைஇறுதி போட்டி என உன்னிப்பாக அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்தே வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எவ்வளவு வலிமையான புயல் வீசும் என்பது தீர்மானிக்கப்படும்.