ஐ.பி.எல். என்பது இந்தியர்களுக்கு வெறும் டி20 கிரிக்கெட் போட்டி கிடையாது. அது நம்மூரில் ஒரு கோடைக்கால கொண்டாட்டமாகவே
கடந்த 10 ஆண்டுகளாக பார்க்கப்பட்டு வருகிறது. பல வெளிநாட்டு, நம்மூர் இளம் வீரர்களையும் ஒருசேர போட்டிப்போடுவதை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கண்டு ரசிக்கலாம். அதேவேளையில் 20 ப்ளஸ் வீரர்களுக்கு சமமாக, செம்ம "டஃப்" கொடுக்கும் 35 ப்ளஸ், வயதுடைய வீரர்களும் களம் காண்கிறார்கள். கடந்தாண்டு, ஐ.பி.எல். வரலாற்றுகளில் இளம் வீரர்களை விட, அனுபவ வீரர்கள் அடித்து தூள் கிளப்பியுள்ளனர். அதேபோல இந்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளில் முக்கியமான ஐந்து அனுபவ வீரர்கள், 35 ப்ளஸ் வயதுடையவர்களை பார்க்கலாம்.
கிறிஸ் கெயில்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அசரடிக்கும் அதிரடி ஆட்டக்காரர் 38 வயதான கிறிஸ் கெயில். சர்வதேச போட்டிகளை விட ஐ.பி.எல்.
டி20-யில் இவர் ஆடிய ருத்ரதாண்டவம் பல. முதலில் கொல்கத்தா லைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட கெயில் அவ்வளவு சிறப்பாக
ஆடவில்லை. ஆனால், 2011 ஆம் ஆண்டு முதல் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பின்புதான் பலரது கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு 30 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் பெங்களூர் அணியில் தவறாமல் இடம் பிடித்தார் கெயில்.அதன் பின்பு, கெயில் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐ.பி.எல்.-ல் 101 போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், 3626 ரன்களை எடுத்துள்ளார், அதிகபட்ச ஸ்கோராக 175 ரன்கள் எடுத்துள்ளார். இந்தாண்டும் கிறிஸ் கெயிலின் அதிரடியை எதிர்பார்த்துகாத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
கவுதம் காம்பீர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தவர் கவுதம் காம்பீர். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக் கோப்பையை வென்றதற்கு, முக்கியப் பங்காற்றியவர் காம்பீர். இப்போது அவருக்கு வயது 36. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக பெர்பாஃம் பண்ண முடியாத காரணத்தினால் தேசிய அணிக்கு திரும்ப முடியாத கவுதம் காம்பீருக்கு ஐ.பி.எல். போட்டிகள்தான் ஒரே ஆறுதல். ஐபிஎல்-இன் முதல் மூன்று ஆண்டுகளுக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக விளையாடினார் காம்பீர். அதன், பின்பு 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ஏலத்துக்கு எடுத்து அணியின் கேப்டனாக நியமித்தது. ஐ.பி.எல்-இல் 148 போட்டிகளில் விளையாடி 4133 ரன்களை எடுத்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 93. இதே காம்பீரின் தலைமையில் 2012, 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இந்தாண்டும் அந்த மேஜிக் தொடரும் என கொல்கத்தா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஹர்பஜன் சிங்
கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சிற்பபாக பங்காற்றிய ஹர்பஜன் சிங், இந்தாண்டு தனது 37 ஆம் வயதில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடவுள்ளார். மும்பை அணியின் பல்வேறு ஐபிஎல் வெற்றிகளுக்கு ஹர்பஜனின் பங்கு அலப்பறியது சுழற்பந்து வீச்சு மட்டுமல்லாமல், அவ்வப்போது பேட்டீங்கிலும் ஆக்ரோஷம் காட்டும், இந்த சிங் எந்த அணியில் இருந்தாலும் பலமே. ஐ.பி.எல் டி20-இல் 136 போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன், 127 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தாண்டு சி.எஸ்.கே. அணிக்காக விளையாட ஆர்வமுடன் தமிழ் கற்று, அதில் ட்வீட் போட்டு வரும் ஹர்பஜன், விக்கெட்டுகளை எடுத்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை யாரும் யுவராஜ் சிங் போல கம்பேக் கொடுத்ததில்லை. அதிரடி, அதே சமயம் கிளாஸ் இரண்டிலும்
கைத்தேர்ந்வர் இந்த பஞ்சாப் சிங்கம். 2011 உலகக் கோப்பையின் தொடர் நாயகனாக வளம் வந்தவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தேசிய
அணிக்கு மீண்டும் திரும்பினார் யுவராஜ். ஆனால், 10 ஆண்டு ஐ.பி.எல். வரலாற்றில் 5 அணிக்காக விளையாடியுள்ளார் யுவராஜ். டெல்லி
டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்தாண்டு மீண்டும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். இதுவரை 120 போட்டிகளில் 2587 ரன்கள் எடுத்துள்ள யுவராஜுக்கு வயது, 36.
மகேந்திர சிங் தோனி
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ஆணிவேர் தோனி. இவர் தலைமையிலான அணி, தொடர்ச்சியாக 2010, 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைத்தது. முக்கியமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே, ஒரு முறைக் கூட லீக் சுற்றிலேயே வெளியேறியது இல்லை. சூதாட்டப் புகார் காரணமாக சிஎஸ்கே அணி, கடந்த இரண்டு சீசன்களிலும் விளையாடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, இந்தாண்டு களமிறங்குகிறது சி.எஸ்.கே. தடைக்காலத்தில் ரைசிங் புனே ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார் தோனி. இதுவரை 159 போட்டிகளில் 3561 ரன்களை குவித்துள்ள தோனிக்கு, இப்போது வயது 36. இந்தாண்டு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழைய சிங்கமாக போட்டிகளில் கர்ஜிக்குமா அல்ல பூனை போல மியாவ் ஆகுமா என்ற விடை விரைவில் தெரிந்துவிடும்.