33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்

33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்
33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்
Published on

செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கத்தில், 33 ஏக்கர் பரப்பளவில் 500 பாரம்பரிய மரவகைகள் கொண்ட இயற்கை தோட்டம் அமைக்கும் பணியை சில நாட்களுக்கு முன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கிவைத்தார். ஏற்கெனவே கூவம் நதிக்கரைகளில் சிறு காடுகளை வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது சென்னை மாநகராட்சி. பழமரங்கள் முதல் மூலிகைகள் வரை 23 ஆயிரம் சதுர அடியில் மியாவாக்கி முறையில் சிறு காடுகளை வளர்க்கவுள்ளார்கள்.

ஜப்பானிய தாவரவியல் அறிஞர் அகிரா மியாவாக்கி உருவாக்கிய காடு வளர்க்கும் முறை, அவரது பெயரில் அழைக்கப்படுகிறது. பயனற்ற நிலத்தைப் பதப்படுத்தி அந்த மண்ணுக்குரிய தாவரங்கள் வளர்ப்பதை அவர் ஊக்கப்படுத்தினார். 90களில் ஜப்பான் தொடங்கி உலகம் முழுவதும் மியாவாக்கி முறை பரவலாக வளர்ந்தது.

பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பிரபலமான மியாவாக்கி காடு வளர்க்கும் முறை தற்போது சென்னையில் அறிமுகமாகியுள்ளது. இந்த வகையிலான சிறு காடு கோட்டூர்புரத்தில் 20,724 சதுர அடியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 40 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில் ராயலா நகர் இரண்டாவது பிரதான சாலையில்
6 ஆயிரம் சதுர அடியில் ரூ. 8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு வனப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் 

தற்போது மாடம்பாக்கம் கிராமத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 33.30 ஏக்கர் இடத்தில் பாரம்பரிய வகை மரக்கன்றுகளைக் கொண்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த இடத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டுவருகிறது. அங்கு மீதமுள்ள இடத்தைப் பாதுகாப்புடன் பராமரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.

இங்கு பாரம்பரிய மர வகைகளான மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, மாதுளை, சீதா, நாவல், அத்தி, வில்வம், இலந்தை, கொடுக்காப்புளி, பப்பாளி, முருங்கை, தென்னை, பனை மரங்கள், அழகு தாவரங்கள் என சுமார் 10 ஆயிரம் மரங்கள் நடப்படுகின்றன. இந்த இயற்கைத்தோட்டம் ரூ. 40 லட்சம் செலவில் மாடம்பாக்கத்தில் அமைக்கப்படுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், "சென்னையில் நகர்ப்புறக் காடுகள் உருவாக்கப்படுவதால், சுற்றுப்புறச்சூழல் மாசு குறையும். இந்தக் காடுகளால் காற்றின் தூய்மையை மேம்படுத்தும் சூழ்நிலையும், நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவை மற்றும் பூச்சி இனங்கள் விருத்தியடையக்கூடிய நிலையும் உருவாக உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com