“பொய்யான பாலியல் புகாரால் வாழ்க்கையே போச்சு”- ஹரியானா இளைஞர்கள் கதறல்

“பொய்யான பாலியல் புகாரால் வாழ்க்கையே போச்சு”- ஹரியானா இளைஞர்கள் கதறல்
“பொய்யான பாலியல் புகாரால் வாழ்க்கையே போச்சு”- ஹரியானா இளைஞர்கள் கதறல்
Published on

மீ டூ புகாருக்கு தமிழகத்தில் ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. பெண்கள் சொல்வதால் அனைத்தையும் உடனே நம்பிவிட முடியாது என்றும் உரிய விசாரணை செய்யப்பட்ட பிறகே உண்மை வெளிப்படும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர் மீது பழி சுமத்த ஒருவர் தங்களை தாழ்த்திக்கொண்டு புகார் செய்வார்களா என்ற  கேள்வியும் மேலோங்கும் நிலையில் இரண்டு பெண்களின் பொய்யான பாலியல் புகாரால் 3 இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைத்திருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெறுள்ளது.

2014ம் ஆண்டு ஹரியானாவில் ஓடும் பேருந்தில் 3 இளைஞர்களை இரண்டு பெண்கள் அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியதை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. ஹரியானா மாநிலம் ரோத்தக் என்னுமிடத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஆர்த்தி மற்றும் பூஜா ஆகியோரே இளைஞர்களை அடித்து உதைத்தவர்கள். 

பாலியல் தொந்தரவு கொடுத்ததால் இளைஞர்களை அடித்து உதைத்ததாக கூறிய இரண்டு பெண்களுக்கும் பாராட்டுகள் குவிந்தன. வீர மங்கைகள் என இருவருக்கும் ஊடகங்கள் பட்டம் கொடுத்தன. ஹரியானா அரசு தன் பங்குக்கு இரண்டு பெண்களுக்கும் தலா ரூ.31 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கி அவர்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றுவர பாதுகாப்பும் வழங்கியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரோத்தக் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் நடத்திய  விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பேருந்து பயணத்தின் போது மூதாட்டி ஒருவரின் இருக்கையை ஆர்த்தியும், பூஜாவும் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களின் செயலை பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் தீபக், மோஹித் மற்றும் குல்தீப் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தியும் பூஜாவும் 3 மாணவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதை செல்போனில் படம் பிடிக்குமாறு தங்கள் தோழியிடம் கூறி பின்னர் அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

பேருந்தில் சென்ற சக பயணிகள் அளித்த வாக்குமூலத்தில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். உண்மை கண்டறியும் சோதனையிலும் சகோதரிகள் பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த ரோத்தக் நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 இளைஞர்களும் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களை விடுதலை செய்தது. 

தீர்ப்பை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த அமர்வு நீதி‌மன்றம் ரோத்தக் நீதிமன்றத்தின் தீர்ப்பை வழிமொழிந்தது. குற்றம்சாட்ட தீபக், குல்தீப் மற்றும் மோஹித் ஆகியோர் வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டனர். 

ஆனால் இந்தப் பொய்ப் புகாரின் மூலம் தங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டதாக 3 இளைஞர்களும் கவலை தெரிவித்துள்ளனர். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளில் சேருவதற்கான வயது வரம்பு 23. தங்கள் மீது வழக்கு இருந்ததால் ராணுவத்தில் சேர முடியவிலை. எங்களுக்கு தற்போது 24 வயது என்கின்றனர் தீபக் மற்றும் குல்தீப். 

இந்த வழக்கால் தீபக்கின் கல்லூரிப் படிப்பும் பாதியில் நின்று போனது. தனக்கு டெல்லி காவல்துறையில் சேர வேண்டும் என்பது சிறுவயது லட்சியம் என்றும் மாணவிகள் கூறிய பொய்யான பாலியல் புகாரால் அந்த லட்சியம் எட்டாக்கனியாகி விட்டது என்கிறார் மோஹித். இது தவிர பொய்யான பாலியல் புகாரால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் சந்தித்த அவமானங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3  பேரும் கவலை தெரிவித்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com