2 வாரங்களில் 24,000+ குழந்தைகளுக்கு தொற்று... - ஆந்திராவை அச்சப்படுத்தும் கொரோனா!

2 வாரங்களில் 24,000+ குழந்தைகளுக்கு தொற்று... - ஆந்திராவை அச்சப்படுத்தும் கொரோனா!
2 வாரங்களில் 24,000+ குழந்தைகளுக்கு தொற்று... - ஆந்திராவை அச்சப்படுத்தும் கொரோனா!
Published on

ஆந்திராவில் குழந்தைகளிடம் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் தாக்கம் குறையாமல் இருந்து வரும் நிலையில், மற்றொரு அச்சம் அங்கு ஏற்பட்டுள்ளது. அது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புதான். ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அம்மாநிலம் முழுவதும் 24,000-க்கும் அதிகமான சிறு வயது குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகமாக 4,200 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கோதாவரி மாவட்டத்தில்தான் ஆந்திர மாநிலத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.

இதற்கடுத்ததாக சித்தூர் மாவட்டத்தில் 3,800 குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் கடந்த 2 வாரத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் ஆந்திர மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அதிகரித்து வரும் இந்தப் பாதிப்பு குறிப்பாக குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள பாதிப்பு அச்சத்தை தருவதாக உள்ளது.

இந்த அதிகரிப்புக்கு காரணம் பொதுமக்களிடம் நிலவி வரும் அலட்சியமே என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பேட்டியளித்துள்ள மருத்துவ நிபுணர்கள், "ஆந்திராவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர் - சிறுமிகளும், 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளும் அதிகளவில் உள்ளனர்.

பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இருக்காது. ஏன் அவர்களுக்கு ஏற்படுவது அறிகுறிகளற்ற பாதிப்பு என்று கூடச் சொல்லலாம். இதை அவர்களால் சொல்ல முடியாது. மேலும் பாதிப்பின் போது குழந்தைகள் சகஜமாக மற்றவர்களிடம் இணக்கமாக இருக்கும்போது நோய்த்தொற்று மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது. இதன்பின் நாள்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை மோசமாக மாறும். மோசமான பின்பே பெற்றோர்களுக்கு விஷயம் தெரிய வரும். இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த கொரோனா காலத்தில் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவுவது குறித்து காணொலி வாயிலான நிகழ்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆரின் புதிய அமைப்பு சிஎஸ்ஐஆர் - அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சியின் தேசியக் கழகம் (என்ஐஎஸ்சிபிஆர்) ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பேசிய டாக்டர் சோமசேகர், "இந்தத் தொற்றுக்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையிலும் பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்களாக இருப்பதுடன், வெறும் 1-2% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரியவர்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறித்தும், அண்மைக் காலங்களில் குழந்தைகளிடையே இரைப்பை சம்பந்தமான அறிகுறிகள் அதிகரித்து வருவது பற்றியும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com