'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு!

'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு!
'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு!
Published on

எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியும் தொடங்கும்போது மிகவும் சாதாரணமாகவே இருக்கும். ஆனால், ஒரு சில போட்டிகள் ஆட்டம் தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் ஆடுகளத்தில் வீரர்களுக்குள் நடக்கும் ஏதோ ஒரு 'சம்பவம்' ஓர் அணிக்கு சாதகமாகவும் மற்றொரு அணிக்கு பாதகமாக அமையும். அப்படி போட்டிகளில் நடக்கும் சில 'தருணங்கள்' காலத்தால் அழிக்கவும் மறக்கவும் முடியாத 'கெத்தான' சம்பவங்களாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில தருணங்களை 'கிரிக்'கெத்து தொடரில் நாம் பார்க்கலாம்.

1996 உலகக் கோப்பை காலிறுதி: இந்தியா Vs பாகிஸ்தான்

1996 உலகக் கோப்பை போட்டித் தொடரை இந்தியா - பாகிஸ்தான் - இலங்கை நாடுகள் இணைந்து நடத்தின. உண்மையிலேயே அசாருதீன் தலைமையிலான இந்திய அணி லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளிடம் தோற்றாலும், மிகவும் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பையின் இந்தக் காலிறுதி ஆட்டத்தை உலகமே எதிர்நோக்கி காத்திருந்தது. அதற்கு காரணம், பாகிஸ்தானை சந்திக்கிறது என்பதுதான். இந்தப் போட்டி மார்ச் 9 ஆம் தேதி, 1996-ஆம் ஆண்டு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சினும், சித்துவும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தபோது சச்சின் 31 ரன்களில் அடா உர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் ரன்களை பட்டாசாக சேகரித்தார் சித்து. கேப்டன் அசாருதீன் 27, சஞ்சய் மஞ்சரேக்கர் 20, வினோத் காம்பளி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் சித்து மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சாளருக்கு ஆட்டம் காட்டினார். சிறப்பாக விளையாடிய சித்து 93 ரன்களில் முஷ்டக் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனாலும், இந்தியாவின் அதிரடி ஓயவில்லை.

அப்போது உலக வேகப் பந்துவீச்சாளர்களில் மிகவும் முன்னணியில் இருந்தவர் வக்கார் யூனிஸ். ஆனால் இந்தியாவின் அஜய் ஜடேஜா, வக்கார் யூனிஸ் பவுலிங்கை ஒரு கை பார்த்தார். கடைசி இரு ஓவர்களில் 40 ரன்களை எடுத்தார். கடைசி 4 ஓவரில் 57 ரன்களை விளாசி 287 ரன்களை பாகிஸ்தானிற்கு இலக்காக நிர்ணயித்தது இந்தியா. பாகிஸ்தான் சேஸிங்கை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் பரபரப்பானர்கள். பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக சயீத் அன்வரும், கேப்டன் அமீர் சொஹைலும் களமிறங்கினர். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். 10 ஓவரில் 84 ரன்களை அடித்து இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்தது பாகிஸ்தான்.

ஆனால், ஜவகல் ஸ்ரீநாத் பந்துவீச்சில் சயீத் அன்வர் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் இந்தியாவுக்கு ஓரளவுக்கு உயிர் வந்தது. ஆனாலும் மறுமுனையில் அமீர் சொஹைல் தொடர்ந்து அதிரடி காட்டினார். அதுவும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பந்துவீச்சை சிதறடித்து அரைசதமும் அடித்தார். அப்போதுதான் ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனைக்கான சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தபோது, வெங்கடேஷ் பிரசாத்தை வம்பிழுத்தார் அமீர் சொஹைல். வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தை பவுண்டரிக்கு அடித்துவிட்டு அவரை நோக்கி விரல்களை காட்டி "திரும்பவும் அதே இடத்தில் பவுண்டரி விளாசுவேன்" எனக் கூறினார்.

அமீர் சொஹைலின் இந்த ஆக்ரோஷ பாணி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கிளர்ச்சியடையச் செய்தது. ஆனால், அமைதியாக அடுத்தப் பந்தை அற்புதமாக வீசிய வெங்கடேஷ் பிரசாத், அமீர் சொஹைலை 'க்ளீன் போல்டு' ஆக்கினார். பிரசாத் மட்டுமல்லாமல் அந்தத் தருணத்தை ஒட்டுமொத்த இந்திய அணியும் உத்வேகத்தில் துள்ளியது. அமீர் சொஹைலை அவுட்டாக்கிய பின்பு, 'பெவிலியனுக்கு நடையை கட்டு' என்ற பாணியில் சொன்னார் வெங்கடேஷ் பிரசாத். இந்தத் தருணம்தான் அந்த ஆட்டத்தில் பெரும் திரும்புமுனையாக அமைந்தது. அது இந்தியாவுக்கு சாதகமாகவும் பாகிஸ்தானுக்கு பாதகமாகவும் அமைந்தது என்றே கூறலாம். இதன் பின்பு இந்தியாவுக்கு 'No Looking Back'. பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 39 ரன்களில் பாகிஸ்தானை வென்றது.

பின்னாளில் இந்தத் தருணம் குறித்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், "அது ஓர் உலகக் கோப்பை போட்டி. அந்தப் போட்டியில் வென்றால் அரையிறுதி, இல்லையேல் நாங்கள் போட்டியில் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நான் அமைதியாக இருப்பதற்கு பெரிதும் முயற்சி செய்தேன். அமீர் சொஹைல் அடித்த அந்த பவுண்டரி என்னை அறைந்தது போல இருந்தது. அதுவும் 35,000 ரசிகர்கள் முன்பு அமீர் சொஹைல் அவ்வாறு அப்படி என வம்பிழுத்தபோது என்னால் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அடுத்தப் பந்தில் அவரை ஆட்டமிழக்கச் செய்தேன். அதுதான் அந்தப் போட்டியை பின்பு மாற்றும் தருணமாக அமைந்தது" என்றார்.

('கிரிக்'கெத்து தருணங்கள் தொடரும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com