சிங்கம் என்றாலே, ‘காட்டுக்கே ராஜா’ என்பதும், அதன் கர்ஜனையும்தான் நம் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு அதன் வலிமை, மூர்க்கம், கம்பீரம் எல்லாமே நம்மை வியக்கவைக்கும். ‘வாழ்ந்தா சிங்கம் மாதிரி கம்பீரமா இருக்கனும்ப்பா’ என்று பலரும் சொல்லிக்கேட்டிருப்போம். அப்படியான சிங்கங்களின் தினம் இன்று!
இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள சிங்கத்தை பற்றிய 15 சுவாரஸ்யமான தகவல்களை, இங்கே காணலாம்.
சிங்கங்கள், “ஃபெலிடே” (Felidae) என்ற பூனை குடும்பத்தை சேர்ந்தவை. பெரிய பூனை குடும்பத்தில், புலிக்கு அடுத்தபடியான இடத்தில் உள்ளது சிங்கம். உலகளவிலான சிங்கங்களின் எண்ணிக்கைகளில், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க வகை சிங்கங்கள்தான் அதிகளவில் இருக்கின்றன.
சிங்கங்கள் குழுக்களாக வாழ்கின்றன. இக்குழுவிற்கு ‘Prides’ என்று பெயர். ஒவ்வொரு ப்ரைடிலும் 30 சிங்கங்கள் வரை இருக்கும். இதில் 10-15 ஆண் சிங்கங்களும், 6-7 பெண் சிங்கங்களும், மீதமுள்ளவை அவற்றின் குட்டிகளாகவும் உள்ளன.
பெண் சிங்கங்களுக்கு ஒரு ஆண் சிங்கத்தை பிடித்துவிட்டது என்றால், அந்த ஆண் சிங்கம் பெண் சிங்கத்தின் ப்ரைடில் ஒரு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பெண் சிங்கத்திற்கு விருப்பமான சிங்கமாக 3-4 ஆண்டுகள் வரை இருந்தால்தான் ப்ரைடில் உறுப்பினராக தொடர முடியுமாம்!
சிங்கத்தின் கர்ஜனை, 5 மைல் தூரம் வரை கேட்கக்கூடிய திறன் கொண்டது. அதாவது கிட்டத்தட்ட 8 கிமீ வரை கேட்குமாம்.
சிங்கங்கள் 70 மைல் வேகத்தில் ஓடும். சீட்டாவை போல் வேகம் இல்லாவிட்டாலும் 50 Mph (mile per second) வேகத்தில் பயணிக்க கூடியவை இவை!
சிங்கங்களில் வெள்ளை நிற சிங்கங்களும் உண்டு. ஆனால் இவை தனிப்பட்ட வகையை சேர்ந்ததல்ல. லூசிசம் எனப்படும் மரபணு குறைவு காரணமாக இவ்வகையான சிங்கங்கள் காணப்படுகின்றன.
சுமார் 20-25 ஆண்டுகள் வரை வாழும் திறன் கொண்டவையான இவை, சராசரியாக 10-14 ஆண்டுகள் ஆயுட்காலம் வாழ்கின்றன.
சிங்கங்கள் விரும்பி உண்ணும் உணவு வரிக்குதிரை, காட்டெருமை மற்றும் இதர விலங்கினங்கள். ஆண் சிங்கங்கள் தினசரி 7 கிலோகிராம் இறைச்சி உணவும், பெண் சிங்கங்கள் 5 கிலோகிராம் இறைச்சி உணவும் சராசரியாக உட்கொள்ளும்.
சிங்கங்களில் வேட்டையாடுவது பெண் சிங்கங்கள்தான். மேலும் இவைதான் புத்திசாலிதனமாகவும் தந்திரமாகவும் குழுவாகவும் சேர்ந்து செயல்பட்டு இரையை வேட்டையாடும்.
சிங்கங்களுக்கு அதிகளவு வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் சராசரியாக ஒரு நாளுக்கு 16-20 மணி நேரம் உறக்கம் கொள்ளும். வியர்வை அதிகம் வெளிவராத குளிர்ச்சியான இரவு நேரங்களில் தங்களது வேட்டையை நடத்தும்.
சிங்கங்கள் சிறந்த பார்வை திறன் கொண்டவையாக இருக்கின்றன. சிங்கங்களின் பார்வை திறன் என்பது மனிதர்களின் பார்வை திறனை விட ஆறு மடங்கு அதிகம்.
ஒரு ஆண் சிங்கத்தின் எடை 330-550 பவுண்டுகளும், பெண் சிங்கங்கள் 265-395 பவுண்டுகளும், புதிதாக பிறக்கும் இளம் சிங்கத்தின் எடை என்பது மூன்று பவுண்டுகளாகவும் இருக்கும். இளம்சிங்கங்கள் குறிப்பிட்ட காலம் வரும்வரை தனது தாயின் அரவணைப்பில் மட்டுமே இருக்கும். பெண் சிங்கங்கள் தனது குட்டியை மட்டுமல்லாது தன் குடும்பத்தை இழந்து தவிக்கும் வேறு குட்டிகளுக்கும் பாலூட்டி அதனை வளர்த்தெடுக்கும்.
சிங்கங்களின் மேனியின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதனைக் கொண்டு அவற்றின் வயதை கணக்கிடலாம். மேனி, முடியின் நிறம் கருமையாக மாறும் போது அவை முதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன என்பது அர்த்தம்.
சிங்கங்களின் குதிகால்கள் தரையை தொடுவதில்லை. எனவேதான் அவை எந்தவொரு சத்தமும் இல்லாமல் நடந்து இரையை வேட்டையாடுகிறது. பண்டைய எகிப்து கலாச்சாரத்தில் சிங்கங்கள் வலிமை, கம்பிரம், மூர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் போர் தெய்வங்களாக கருதப்பட்டன.
ஆண், பெண் சிங்கங்கள் மூன்றிலிருந்து நான்கு வயதை அடையும் போதே இனச்சேர்க்கைக்கு தயாராகி விடுகின்றன. இவற்றின் கர்ப்ப காலம் என்பது நான்கு மாதங்கள். அதுமட்டுமல்லாது பெண் சிங்கங்கள் குட்டியை ஈன்றெடுக்கும் வரை தன் கர்ப்பத்தை பற்றிய ரகசியத்தை தன்னகத்தை வைத்துக் கொள்ளும். பிறகு தனது குழுவில் இருந்து வெளிப்பட்டு ஆறு வாரங்கள் தனது குட்டியை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தும்.
WWF, ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை என்பது 40 சதவீதம் குறைந்துள்ளதாக சொல்கிறது. இருப்பினும் இந்தியாவில் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த தகவலின்கீழ் பார்க்கையில், ஜூன் 2020 கணக்கெடுப்பின்படி 523 ஆக இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை என்பது இப்போது 674 ஆக உயர்ந்துள்ளது! மேலும் அவை உயர, அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதும் அவசியம். அப்பொறுப்பு மனிதர்களாகிய நமக்கே நிறைய உள்ளது. செய்வோமா?!
- Jenetta Roseline S