இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவும் உஷார் நிலையில் உள்ளது. தமிழகத்திலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான கவனத்துக்குரிய 10 அப்டேட்ஸ்...
* தொற்றும் தன்மை 70% அதிகம்: அவசர அவசரமாக கொரோனா ஃபைசர் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்து, உலகிலேயே முதன்முறையாக தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த பிரிட்டன் மற்றொரு பேராபத்துக்குள் சிக்கியுள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலை, இரண்டாம் அலையை கடந்துவந்த மக்களுக்கு, மரபியல் மாற்றம் கண்ட கொரோனா வைரஸை தாக்குப்பிடிப்பது மிகப்பெரிய சவலாக உள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
* ஆறுதல் தகவல்: மரபியல் மாற்றம் அடைந்த வைரஸானது மனித செல்களை தாக்கும் திறனை அதிகமாக கொண்டுள்ளது. இந்த வகை வைரஸானது மிகவும் ஆபத்தானது என்றும், வைரஸ் எவ்வாறு உருமாற்றமானது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது முந்தைய வைரஸை விட வித்தியாசமாக இருப்பதாகவும், வளர்சிதை மாற்றம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், தற்போது வழங்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகள் உருமாறிய புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
* இங்கிலாந்து தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலேயே இந்த உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக தென்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளில் மீண்டும் முழு பொதுமுடக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமல்படுத்தினார். மேலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினார். பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், முந்தைய வைரஸை விட வேகமாக பரவ தொடங்கியது. நவம்பர் மாதத்தில் பரவல் வேகம் பன்மடங்கு அதிகரித்து டிசம்பரில் உச்சத்தை தொட்டியது. இதனால் அங்கு கடந்த 14 ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் ஒரே நாளில்
13,000-க்கும் மேற்பட்டோர் உருமாறிய புதிய வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகினர். கொரோனா தொற்றின் அடுத்த பாதிப்பால் பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டங்கள் களையிழந்துள்ளன.
* 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை: உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பிறநாடுகளுக்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு அயர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தற்காலிகத் தடை விதித்துள்ளன. உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இதுபோன்ற கட்டுப்பாட்டுகளை செயல்படுத்தியுள்ளன. இதனிடையே, பிரிட்டனிலிருந்து இத்தாலி திரும்பிய இருவருக்கு உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.
* இந்தியாவில் முன்னெச்சரிக்கை: இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் இன்று முதல் இம்மாதம் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்தத் தடை இன்று இரவு 23:59 மணியிலிருந்து அமலுக்கு வரும். மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள், இங்கிலாந்திலிருந்து பயணிகள் யாரையும் நம் நாட்டிற்கு அழைத்து வரக்கூடாது. இங்கிலாந்திலிருந்து இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயணிகள் அழைத்து வரப்படவில்லை என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களின் (ஏற்கெனவே புறப்பட்ட விமானங்கள், 22ஆம் தேதி இரவு 23:59 மணிக்குள் இந்தியாவிற்கு வரும் விமானங்கள்) பயணிகளையும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பரிசோதனையில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கான மருத்துவ செலவுகளை ஏற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
* தமிழக நிலவரம்: பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா: பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி வழியாக சென்னை வந்த அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்காக அவர் கிண்டியிலுள்ள கிங் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கியுள்ள கொரோனா மரபியல் மாற்றமடைந்த வைரஸ்தானா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* கடந்த 10 நாட்களில் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 1,088 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கார் தெரிவித்துள்ளார். "ஆட்டோ இ-பாஸ் மூலம் கடந்த 10 நாட்களில் பிரிட்டனில் இருந்து வந்த 1,088 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். பிரிட்டனிலிருந்து டெல்லி, மும்பை வழியாக சென்னை வந்தவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். பிரிட்டனுக்கு சென்று வந்த அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். அனைத்து எல்லையோரப் பகுதிகளும் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன" என்றார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.
* பிரிட்டன் மட்டுமின்றி, அனைத்து நாடுகளிருந்து வரும் விமான பயணிகளுக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட 5 மணிநேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தப் பரிசோதனையில் 'நெகடிவ்' வந்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். 'பாசிடிவ்' என வந்தால் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
* மகாராஷ்டிரா: பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மும்பையில் இன்றிலிருந்து வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து நேற்றும் இன்றும் வரும் சுமார் 1000 விமானப்பயணிகளை 7 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* வீரியமிக்க கொரோனா... தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்: ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் கூறிய அறிவுரைகளை கடைபிடிப்பது அவசியம்; சோப்பு அல்லது கிருமிநாசினி திரவம்கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்; கைகளால் கண்கள், மூக்கு வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும்; குறைந்தது 2 மீட்டர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; தரமான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அவசியம் அணிய வேண்டும்; அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.