சென்னை திருமங்கலத்தில் உள்ள நகைக் கடையில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சென்னை அண்ணாநகர் அருகேயுள்ள திருமங்கலம் 2வது அவென்யூவில் 3 மாடிகள் கொண்ட நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை வழக்கம்போல் இரவு பூட்டிச்சென்ற உரிமையாளர் ஐயப்பன், காலையில் வந்து திறந்துள்ளார். ஆனால் அவருக்கே காலையிலேயே ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.
கடையில் இருந்த நகைகள் பெரும்பாலும் திருடப்பட்டிருந்தது. கடை மூடியிருக்கும் போது எப்படி திருடு போயிருக்கும் என்று
ஆராய்ந்து பார்த்ததில் மாடிப் படியில் இருந்த கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை போன வழியை உரிமையாளர் உணர்ந்தார். மாடியில் கதவு இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படித் தெரியும்? அப்படியென்றால் இந்தக் கொள்ளை நகைக்கடையை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவரின் உதவி இல்லாமல், கொள்ளையர்களால் செய்திருக்க முடியாது. இவ்வாறு எல்லாம் எண்ணிய உரிமையாளர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கடையில் இருந்த 10 கிலோ அளவிலான தங்க நகைகள்
கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்துடன் கடையில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் சாவியை எடுக்காமலே உரிமையாளர் வீட்டுக்குச் சென்றது, கொள்ளையர்களுக்கு மேலும் வசதியாக போய்விட்டது. முதற்கட்ட விசாரணையில், இரவு அருகில் உள்ள வணிக வளாகத்தின் வழியாக கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள், நகைகளை திருடிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிப்பதை நுணுக்கமாக திட்டமிட்டு வந்துள்ள அந்தக்கும்பல், வந்தவுடனேயே சிசிடிவி கேமராக்களை சுவற்றின் பக்கம் திருப்பி வைத்துள்ளதும், அதுமட்டுமின்றி சிசிடிவி கேமராவின் காட்சிகள் பதிவுசெய்யப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்கையே எடுத்து சென்றதும் தெரியவந்துள்ளது. இதனால் கொள்ளையர்கள், ஏற்கெனவே பல இடங்களில் கைவரிசையை காட்டியிருக்கும் ஒரு கும்பலாக இருக்கலாம் என்பதையும், நகைக்கடையின் தற்போதைய ஊழியர் அல்லது முன்னாள் ஊழியரின் உதவியுடன் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்பதையும் காவல்துறை கணித்தது.
கேமராக்களை திருப்பினாலும், கொள்ளையர்களின் கைரேகைகளை கண்டுபிடித்து அதை குற்றவாளிகள் பட்டியலும் ஒப்பிட்டுப்பார்க்க முடிவு செய்த காவல்துறை, கைரேகை நிபுணர்களின் உதவியுடனுடம், மோப்ப நாய்களுடனும் தடயங்களை சேகரித்தது. அத்துடன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள பழைய குற்றவாளிகள் குறித்த விவரங்களையும் திரட்டி வருகிறது. மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் காவல்துறையினரின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்கள் இடையிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் இந்த நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதும், சோதனை முடிவில் உரிமையாளர் குறிப்பிட்ட தொகையை அபராதமாக கட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி இந்த கடைக்கு ஐயப்பன் மட்டுமே உரிமையாளர் இல்லை. அவருக்கு சிவசங்கரன் என்ற ஒரு சகோதரரும் உள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து கடை நடத்தி வந்துள்ளனர். கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ள இந்த சமயத்தில், சிவசங்கரன் வெளியூர் சென்றுள்ளார். அதனால் உடனடியாக அவரை சென்னைக்கு புறப்பட்டு வருமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நகைக்கடைக்குள் புகுந்து நாதுராம் கும்பல் கொள்ளையடித்து சம்பவம் நினைவில் இருந்து நீங்குவதற்கு மீண்டும் இப்படி ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது சென்னை மாநகர காவல்துறைக்கே சாவல் விடும் வகையில் தான் அமைந்துள்ளது.
(தகவல்கள்: சுப்ரமணியன், புதிய தலைமுறை செய்தியாளர், சென்னை)