“அரபு மண்ணில் துயரால் வாடும் தமிழர்கள்” துபாயிலிருந்து தமிழ் எஃப்.எம் ஆர்.ஜே.நாகா பேட்டி!

“அரபு மண்ணில் துயரால் வாடும் தமிழர்கள்” துபாயிலிருந்து தமிழ் எஃப்.எம் ஆர்.ஜே.நாகா பேட்டி!
“அரபு மண்ணில் துயரால் வாடும் தமிழர்கள்”  துபாயிலிருந்து தமிழ் எஃப்.எம் ஆர்.ஜே.நாகா பேட்டி!
Published on

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப்படும் அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்ல பிற மொழி பேசும் நேயர்களையும் கவர்ந்துள்ள பிரபலமான தமிழ் பண்பலை வானொலி 89.4 . துபாயில் இருந்து காற்றின் அலைவரிசையில் கலக்கும் அந்த வானொலியின் புகழ்பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி ஆசிரியர் ஆர்ஜே நாகா. சென்னையில் பிறந்து வளர்ந்த அவருக்கு 30 ஆண்டுகால வானொலி அனுபவம். கொரோனா காலத்தில் ஊரடங்கால் ஏற்பட்ட வேலையிழப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை மற்றும் தமிழகம் திரும்புவதற்கு அவர்களுக்குக் கிடைத்த உதவிகள் பற்றியும் புதிய தலைமுறை இணையதளத்திடம் பகிர்ந்துகொண்டார் ஆர்ஜே நாகா.

எப்படி இருக்கிறது அயலக வாழ்க்கை?

உண்மையிலேயே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். எப்போதுமே வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டைப் பார்க்கும்போது ஒரு ஏக்கம். மற்றவர்களைப்போல எனக்கும் இருக்கிறது. எந்த நாடாக இருந்தாலும் அதுவொரு சொர்க்கபூமி. நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்ற கனவுகள் இருக்கும். நம்மூரில் இருந்து வெளிநாடுகளை மிகப்பெரிய சொர்க்கமாகத்தான் பார்ப்போம். சொர்க்கமில்லை என்று சொல்லமாட்டேன். சொர்க்கமாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பேன்.

வெளிநாட்டு வாழ்க்கையில் தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை. எவ்வளவு பெரிய வேலைக்குப் போனாலும், குடும்பம், நண்பர்கள், சுற்றத்தாரை விட்டுட்டு இருக்கும்போது, அந்த தனிமையை உணர ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய நினைவுகள் எப்போதும் ஊரைச் சுற்றியும். குடும்பத்தைச் சுற்றியும் நண்பர்களைச் சுற்றியுமே இருக்கும். யாரைக் கேட்டாலும் அயலக வாழ்க்கை ஆனந்தமாக இருப்பதாகச் சொல்லமாட்டார்கள்.

குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் சுகமாக இருக்கலாம். ஆனால் அந்த சுகத்திலும்கூட பெற்றோர், நண்பர்கள், ஊரைப் பற்றிய நினைவுகள் வந்துவிட்டால் தனிமை வந்துவிடும். என்னைக் கேட்டால், சொந்த ஊரிலேயே நல்ல வேலையில் இருந்துகொண்டு ஒரு பயணியாக வெளிநாடுகளுக்கு வந்துபோகலாம் என்பதுதான் இந்த தருணத்தில் நான் சொல்ல விரும்பும் செய்தி.

சென்னையில் இருந்து சென்று பல ஆண்டுகளாக துபாயில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி…

ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளனாக இந்த வானொலிக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. துபாயில் முதல் அனுபவமும் உண்டு. 2004 முதல் 2006 வரை இங்கே பணியில் இருந்திருக்கிறேன். இரண்டு அனுபவங்களும் நிறைய புரிதல்களைத் தந்திருக்கின்றன. தற்போது 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக உற்சாகமாக வேலை செய்துகொண்டிருக்கிறேன்.

செய்தி ஆசிரியராக, செய்தி சேகரிப்பாளராக, செய்தி வாசிப்பாளராக ஒருவரேதான் செயல்படவேண்டும். அப்படித்தான் நானும். பரபரப்பான வாழ்க்கைதான். தொடர்ந்து பணிகள் இருப்பதால் தனிமை தெரிவதில்லை. விடுமுறை நாட்களில்கூட வேலைதான். விழாக்கள், பிரஸ்மீட் இருக்கும். கொரானா காலத்தில் எதுவுமில்லை. தொடர்ந்து 8 டு 10 இரவுநேர நிகழ்ச்சி செய்துவருகிறேன். காலை முதல் மதியம் வரை ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள். இதுதான் இப்போதைய பணியாக தொடர்கிறது.

அரபு நாட்டில் தமிழர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. என்ன மாதிரியான பணிகளில் உள்ளார்கள்?

இங்கு 60 சதவீதம் மக்கள் இந்தியா்கள். குறிப்பாக தமிழர்கள் கட்டுமானத் துறையில்தான் அதிகம் பணியாற்றுகிறார்கள். ப்ளு காலர்ஸ்தான் அதிகம். கம்பிக் கட்டும் வேலை, பிளம்பர், சாலைப் பணி, துப்புரவுப் பணியாளர்கள் 60 சதவீதம் இருப்பார்கள். ஏதோ வேலை கிடைத்தால் போதும் என்று வந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் துப்புரவுப் பணியையும் செய்யவேண்டிய சூழல் நேர்ந்துவிடுகிறது. துபாயில் வந்தால் பெரிய வேலை கிடைக்கும் என்று நம்பி வந்தவர்கள். எளிய பணிகள் முதல் பெரிய பொறுப்பும் அதிகாரமும் உள்ள பணிகள் வரையில் தமிழர்கள் நிறைந்துள்ளார்கள்.

வாழ்க்கை முறை சராசரியாக இருக்கிறது. உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் நடுத்தரவர்க்கம் வாங்கக்கூடிய விலையில்தான் பொருட்கள் இருக்கும். எலலோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பதே அமீரக அரசின் நோக்கமாக உள்ளது. பத்து த்ராம் மதிப்புள்ள பொருள் வாங்கும்போதும், 100 த்ராம் பொருள் வாங்கும்போதும் ஒரே தரத்தில்தான் இருக்கும்.

இங்கு சிலர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். பேச்சிலர்கள் அறைகளில் தங்கி பணியாற்றுகிறார்கள். பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு தங்கும் வசதிகளை ஏற்படுத்தித்தருகின்றன. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தங்குமிடங்கள் லேபர் கேம்ப்ஸ் எனப்படும். பெரிய அறையில் பத்து பேர் தங்கியிருப்பார்கள். சிலநேரங்களில் 15 பேர்கூட தங்கவேண்டிவரும். பொதுவான சமையலறை. ஒவ்வொரு அறையில் தங்கியிருப்பவர்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சமைத்துக்கொள்ளலாம். அதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.

பொருளாதாரரீதியில் சிலரால் ஏற்றம் பெறமுடிவதில்லை. இந்தியாவைப்போல இங்கேயும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. ஆனால் அதை முன்னிலைப்படுத்தி சக மனிதரை யாரும் வெறுப்பதில்லை. ஒவ்வொருவரையும் அவர்களுடைய திறமைகளை வைத்து மதிக்கும் போக்கு இருக்கிறது.

ஊரடங்கால் ஏற்பட்ட வேலையிழப்புகள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் அங்குள்ளவர்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது. அவர்கள் எப்படி மீண்டார்கள்?

தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மை. தொடர்ச்சியான ஊரடங்கால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். ஆன்லைன் மூலம் வேலை செய்பவர்களுக்கு ஓகே. ஆன்லைன் அல்லாத பணிகளைச் செய்தவர்களுக்கு நிறுவனங்கள், சில நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்தார்கள். ஒருகட்டத்தில் உணவும் கிடைக்கவில்லை. தங்கியிருந்த அறைகளுக்கு வாடகையும் கொடுக்கமுடியவில்லை.

மூன்று மாதம் வேலையில்லை, சம்பளமில்லை. சிலரை வேலைகளில் இருந்து நீக்கிவிட்டார்கள். விமான சேவை தொடங்கினால் ஊருக்குப் போய்விடுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள். இப்படி நிறைய பேருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல நிறுவனங்கள் சம்பளத்தில் 20 முதல் 70 சதவீதம் வரை குறைத்தார்கள். கடன்களும் ஊரில் கடமைகளும் உள்ளவர்களுக்கு நிறைய சிக்கல்கள்.

இது பெரிய கொடுமையான காலம் என்று புரியத் தொடங்கியது. பலரும் எப்படியாவது துபாயில் இருந்து சொந்த ஊருக்குச் சென்றால்போதும் என்ற நிலையில் இருந்தார்கள். யாராவது நம்மை அனுப்பிடமாட்டார்களா என்று காத்திருந்தார்கள். தாக்குப்பிடிப்பவர்கள் இருக்கலாம். ஊரடங்கு தளர்த்தப்பட்டு புத்துணர்வுடன் தொழில் தொடங்கலாம் என்று அரசு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. வாழ்க்கை புதுப்பிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. அடைக்கப்பட்ட கதவுகள் மெல்ல திறக்கப்படுகின்றன.

துபையில் ஊரடங்கு எப்படி கடைப்பிடிக்கப்பட்டது. உங்களுடைய தனிப்பட்ட அனுபவம் எப்படி?

மூன்று கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு அமலில் இருக்கும்போதும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்பட்டது. எங்களால் அந்த காலகட்டத்தில் வானொலியில் இயங்கமுடியவில்லை. எந்த நிறுவனத்தையும் திறக்கக்கூடாது. அப்படி திறந்தால் அதன் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பபடும். எக்காரணத்தைக் கொண்டும் தொழிலாளர்களை வேலைக்கு வரச்சொல்லி நிறுவனங்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது என்று அறிவித்திருந்தார்கள்.

நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்தோம். மார்ச் 23 ஆம் தேதிக்குப் பிறகு ஏப்ரல் 14 வரைக்கும் அலுவலகம் செல்லமுடியவில்லை. எனக்கு சமைக்கத் தெரியாது. மெஸ்ஸில் இருந்துதான் சாப்பாடு வரும். பின்னர் சமூகவலைதளங்கள் மூலமாக நண்பர்களுடன் தொடர்புகொள்ளத் தொடங்கினோம். அவர்களுடைய நிலையை அறிந்து நண்பர்களின் மூலம் உதவிகள் செய்தோம்.

வானொலி செயல்படாமல் இருக்கக்கூடாது என்பதற்காக சமூகவலைதளத்தில் செயல்பட திட்டமிட்டோம். ஊரடங்கு தொடர்பான தகவல்கள், உதவிகள், தனிப்பட்ட அனுபவங்களை நேரலை செய்தோம். தனிப்பட் அனுபவம் என்றால், கொரோனா எனக்கு சமைக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

அரபு நாடுகளில் எந்த தொழில்துறையில் தமிழர்கள் அதிகம் வளர்ந்துள்ளார்கள்?

ஏழு ஏமிரேட்ஸ்களிலும் தமிழர்களின் வளர்ச்சி ரொம்ப சிறப்பாகவே இருக்கிறது. பிற நாட்டினரைவிட இந்தியாவில் இருந்துவந்து தொழில் நடத்துபவர்கள்தான் அதிகம். தமிழர்கள் நடத்தும் நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவீதம் இருக்கிறது. எங்களுடைய வானொலியை நடத்திக்கொண்டிருப்பவரே ஒரு மதுரைத் தமிழர்தான். பாரம்பரிய உணவங்கள் நடத்துகிறவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள்தான்.

ஆடிட்டர்களாக பணியாற்றிவருகிறார்கள். இன்னொரு பக்கம் ஆட்டோமொபைல்ஸ் தொழில், கட்டுமானத் தொழிலில் பெரிய நிறுவனங்களை நடத்திவருகிறார்கள். தொலைக்காட்சி நடத்திய ஒரு தமிழரும் இங்கே இருந்திருக்கிறார். அவர் இலங்கைத் தமிழர். 2004 ஆம் ஆண்டு தொழிலாளியாக நான் பார்த்த தமிழர், இன்று கடும் உழைப்பால் 250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அதிபராக உயர்ந்திருக்கிறார்.

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவிகள் கிடைத்தன?

இரண்டு மணி நேரம் இளையராஜா பாடல்களுடன் இரவுநேரத்தில் மேஸ்ட்ராலஜி என்றொரு நிகழ்ச்சி. இரண்டரை ஆண்டுகளாக நடத்திவருகிறேன். அதில் இப்படிக்கு இதயம் என்று ஒரு செக்மெண்ட். அந்த நிகழ்ச்சியின் வழியாக உதவிகளைப் பெற்றுக்கொடுத்தோம். யாருக்கு உதவி தேவையோ அவர்கள் பேசலாம். உதவுபவர்களும் பேசுவார்கள். ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கித்தந்தார்கள். இலவச விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்தார்கள். இப்படியான உதவிகளைச் செய்யக்கூடிய நல்ல உள்ளங்கள் இருக்கின்றன.

அப்படி உதவி செய்தவர்களில் சிலரைப் பற்றிக் கூறமுடியுமா?

அரபு நாடுகளில் தவிப்பவர்களுக்கு தாயாகமாக இருந்து உதவிய சில நல்ல உள்ளங்களைச் சொல்லவேண்டும். திருமதி உமாசங்கரி, ஃபிர்தெளஸ் பாஷா, கவுசர் பெக் இவர்கள் எல்லாம் தங்களுடைய வேலை நேரம் போக உதவுவதற்காகவே தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். இன்று தமிழகம் வந்துள்ள பலரும் இவர்களுடைய உதவியால்தான் மண்ணைத் தொட்டிருக்கிறார்கள்.

மறக்கமுடியாத ஒரு சம்பவம். அவர் பெயர் நீதியரசன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமீரகம் வந்திருக்கிறார். காலில் ஒரு காயம். அது பெரிதாகி காலையே எடுக்கவேண்டிய அளவுக்குப் போய்விட்டது. ஊரடங்கில் அவர் வேலையையும் இழந்துவிட்டார். விசாவும் முடிந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊருக்குச் சென்று ஆறு ஆண்டுகளாகிவிட்டது. எப்படியாவது ஊருக்குச் செல்லவேண்டும் என என்னைத் தொடர்புகொண்டார்.

நான் கெளசரிடம் பேசினேன். உடனே அவர் துணைத் தூதரகத்தில் பேசி ஏற்பாடுகள் செய்தார் கெளசர். பெரும் முயற்சிக்குப் பிறகு நீதியரசன் ஊருக்குச் சென்றுவிட்டார். அவர் நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். இந்த கொரோனா பாதிக்கப்பட்ட தமிழர்கள்மீது செல்வாக்குள்ள தமிழர்கள் கருணை காட்டுவதற்கு வாய்ப்பை அளித்திருக்கிறது. இதையெல்லாம் எனக்கு வானொலிதான் சாத்தியப்படுத்தியது.



உங்களுடைய 89.4 பண்பலை சார்பில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்தீர்களா?

ஏழு எமிரேட்ஸில் உள்ளவர்களும் வானொலி கேட்கிறார்கள். வானொலிதான் அவர்களுக்கான பெரிய ஆதாரமாக இருந்தது. வேலையில் இருக்கும்போதே வானொலி கேட்ட நேயர்களால், வேலையில் இல்லாதபோதும் கேட்காமல் இருக்கமுடியவில்லை. இங்கு இணையம் சுலபமான விஷயம். எளிய தொழிலாளர்கள் பேஸ்புக், யூ டியூப் தளங்களில் பரிச்சயம் பெற்றிருப்பார்கள். சமூகவலைதளங்கள் வழியாக கொரோனா விழிப்புணர்வு கருத்துக்களை நிறையவே சொன்னோம்.

பேஸ்புக் பக்கத்தில் வந்தே பாரத் திட்டத்தில் எப்படி பதிவு செய்வது. விமானத்தில் செல்ல என்ன முயற்சிகளைச் செய்யவேண்டும் என தொடர்ந்து செய்திகள் சொல்லிக்கொண்டே இருந்தோம். வானொலி பொழுதுபோக்கு மட்டுமல்ல நெருக்கடிக்காலங்களில் அதுவும் ஒரு துணையாக மக்களுக்காகப் பணியாற்றும் என்பதை நிரூபித்தோம்.

பண்பலை அனுபவத்தில் மறக்கமுடியாத மனிதர்களின் நட்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

பண்பலை வானொலியைக் கேட்கக்கூடியவர்கள் தமிழர்கள் என்று இயல்பான வட்டத்தில் யோசிப்போம். தமிழர்களைக் கடந்து மலையாளம் பேசக்கூடிய நண்பர்கள், இந்தி தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழர்களைப் புரிந்துகொண்டு சிரிக்கக்கூடிய பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், தெலுங்கு பேசக்கூடிய குடும்பத்தினர் என இவர்கள் தமிழை ரசிக்கிறார்கள். இங்கு தமிழைப் போல மலையாளம், ஹிந்தி வானொலிகளும் உள்ளன.

தூதரகத்தில் பணியாற்றுபவர்கள் முதல் தொழிலதிபர்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் நண்பர்கள் வரையில் மிகப்பெரும் நட்பையும் நேசத்தையும் இந்த பண்பலை வானொலி எனக்குக் கொடுத்திருக்கிறது. பெரிய மனிதர்களிடம் எப்படி நட்பு இருக்கிறதோ, அதேபோலத்தான் கட்டுமானத் தொழிலில் கம்பிக் கட்டுகிறவர்களிடமும் இருக்கிறது. அவர்களும் தமிழை ரசிக்கிறார்கள். வானொலியில் பேசுகிறார்கள்.

மறக்கமுடியாதவர்களில் ஒருவர் தப்பாட்டக் கலைஞர் கருப்பச்சாமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்வில் சந்தித்தேன். “ஒரு கலைக்குழுவை நடத்தினேன். தொடர்ந்து நடத்தமுடியவில்லை. பெரிய வருத்தம். வேறு வழி தெரியல. குடும்பத்தை எல்லாம் விட்டுவிட்டு இங்கு வந்துவிட்டேன். கம்பி கட்டும் வேலை செய்துவருகிறேன்” என்று தன்னைப் பற்றிக் கூறினார்.

என்னிடம் அவர் பேசியது மனத்தைத் தொட்டது. உடனே அவரிடம் தப்பாட்டக் கலையைப் பற்றிப் பேசி சிறு காணொளியாக தயாரித்து, அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். பண்பலையிலும் சிறு உரையாடலுக்கு ஏற்பாடு செய்தேன். நட்பு தொடர்ந்தது. “ஒரு தப்பாடக்கலைஞராக ஏதாவது செய்யணும். எனக்கு ஒரு தப்பு கிடைச்சா போதும்” என்று ஒருநாள் தன் ஆசையை வெளிப்படுத்தினார். பொங்கல் திருவிழாவுக்காக ஒரு பிரபல தப்பாட்டக்குழுவினர் துபாய் வருவதாக இருந்தது. அந்தக் குழுவின் தலைவரிடம் பேசி புதிய இசைக்கருவியை வாங்க முயற்சி செய்தோம். பின்னர் அது கிடைத்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அலையன் நகரில் பொங்கல் திருவிழா. அதில் அவர் கருப்பச்சாமி வேடமிட்டு ஆடினார். வாழ்க்கையில் மிகப்பெரிய ஆனந்தம் அந்தக் கனம்தான் என்று நெகிழ்ச்சியில் அழுதேவிட்டார். வெளிநாட்டில் வேலைக்கு வரக்கூடிய இந்த மாதிரி மனிதர்களைப் பார்க்கிறபோது ஆச்சரியமாக இருக்கிறது. சம்பாத்தியத்தைக் கடந்து எப்படி கலையுடன் வாழ்க்கையை நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.


இன்னொரு மதிப்பிற்குரிய நண்பர், அபுதாபியில் இந்திய துணைத்தூதரகத்தில் மிகப்பெரும் பொறுப்பில் இருக்கும் ராஜீமுருகன். தினந்தோறும் கவிதைகள் அனுப்புவேன். படித்துவிட்டுப் பேசுவார். வானொலி எனக்குப் பெற்றுக்கொடுத்த உயர்ந்த நட்பு அவருடையது.

மும்பையில் பிறந்துவளர்ந்தவர் ஜான். டாக்ஸி டிரைவர். தொடர்ச்சியாக வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பவர். தமிழ் புரியும், பேசுவார். ஆனால் ஹிந்திதான் சரளம். என் நிகழ்ச்சிக்கு அவர் காட்டும் அக்கறைக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது. மற்றொருவர் பெட்ரோல் பங்க்கில் வேலைபார்க்கும் நண்பர் அல்கூஸ் ரவி.
என் நிகழ்ச்சிகளில் நான் யாரோடு பேசினேன். எத்தனை பாடல்கள் போட்டேன். எங்கே சிரித்தேன் என்கிற அளவுக்குத் துல்லியமாக நினைவில் வைத்துப் பேசுவார். மிக எளிமையான மனிதர். இப்படி எத்தனையோ மனிதர்கள், சுவையான அனுவங்களுடன் பண்பலை அன்பலையாக தொடர்கிறது.

புகைப்படங்கள்: சுபான், துபாய்  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com