மதுரை தனியார் நிறுவனத்திற்கு " தமிழ் தேவி மூலிகை எரிபொருள் " விற்பனை உரிமை: ராமர் பிள்ளை

மதுரை தனியார் நிறுவனத்திற்கு " தமிழ் தேவி மூலிகை எரிபொருள் " விற்பனை உரிமை: ராமர் பிள்ளை
மதுரை தனியார் நிறுவனத்திற்கு " தமிழ் தேவி மூலிகை எரிபொருள் " விற்பனை உரிமை: ராமர் பிள்ளை
Published on

இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்வதற்கான உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ராமர் பிள்ளை வழங்கி உள்ளார். லாபத்தில் 30 சதவிகிதம் கமிஷன் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்தார்.

ராஜபாளையம் அருகில் உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. கடந்த 20 வருடங்களாக பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரி பொருளை மூலிகையில் இருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த மூலிகை பெட்ரோல் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து பல விமர்சனங்கள் வந்த நிலையில், இதுவரை மூலிகை பெட்ரோலை அவர் யாருக்கும் விற்பனை செய்யவில்லை.

ராமர்பிள்ளையின் இந்த கண்டுபிடிப்பை உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் தனது விற்பனையை தொடங்கினார். இதற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து இந்த மூலிகை பெட்ரோல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான முழு உரிமையை மதுரையைச் சேர்ந்த கம்யூனிட்டி கிரேட் இண்டஸ்ட்ரியல் பார்க் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கு இந்த நிறுவனம் ராமர் பிள்ளைக்கு லாபத்தில் 30சதவீத பங்கை அளிக்க உள்ளது. மேலும் ராயல்டி குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயார் செய்யும் முறை குறித்து நேரடியாக செய்தியாளர்கள் மத்தியில் செயல்முறை விளக்கம் அளித்தார். சாக்கடை கழிவுநீரை, சுண்ணாம்பு கொண்டு சுத்திகரிப்பு செய்து அதில் இவரது கண்டுபிடிப்பான இரு கலவைகளை கலந்து எரிபொருளாக மாற்றிக் காட்டினார்.

கழிவுநீரில் இருந்து தான் கண்டுபிடித்த இந்த எரிபொருளுக்கு தன்னுடைய தாயின் நினைவாக " தமிழ் தேவி மூலிகை எரிபொருள் " என பெயரிட்டுள்ளதாக ராமர் பிள்ளை தெரிவித்தார். பின்னர் அவர் கண்டுபிடித்த மூலிகை எரிபொருளை இருசக்கர வாகனத்தில் ஊற்றி இருவரை வாகனத்தில் அமர வைத்து இயக்கியும் காட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 21 வருடகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செய்தியாளர்கள் மத்தியில் தயாரிப்பு முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. என்னுடைய கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான முழு உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளேன். வரும் 18ம் தேதி முதல் வியாபார ரீதியாக மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும்.

இது கலப்படமான பொருள் கிடையாது என நீதிமன்றத்தின் மூலம் சான்றிதழ் வாங்க இத்தனை ஆண்டு காலம் தேவைப்பட்டது. பொருளாதார ரீதியாக நான் சாதாரணமானவன். தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தின் உதவியால் மட்டுமே மூலிகை எரிபொருள் வெளி வந்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com