கடந்த தசாப்தத்தை ஒப்பிடுகையில் தற்போது திருமண வயது என்பது ஆண், பெண் இருபாலருக்குமே கிட்டத்தட்ட முப்பதை தொட்டுவிடுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நம்முடைய வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை ஏற்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான வேலைக்கு செல்லும் தம்பதியர் வேலை மற்றும் நிதி நிலையை கருத்தில்கொண்டு குழந்தைப்பேறை தள்ளிப்போடுகின்றனர். அதன்பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும்போது குழந்தையின்மை பிரச்னைக்கு ஆளாகின்றனர். ஏன் இந்த பிரச்னை? திட்டமிடுதலில் என்ன தவறு நடக்கிறது? இதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து விளக்குகிறார் உளவியலாளர் Dr.சுஜிதா.
திருமணம் என்பதற்குள்ளேயே ஆணும் பெண்ணும் இணைந்து தாம்பத்தியத்தில் ஈடுபட்டு அடுத்த தலைமுறையை உருவாக்குவது என அனைத்தும் வந்துவிடுகிறது. அதற்குள்ளேயே மன பொருத்தம், உடல் பொருத்தம், பொருளாதாரம், அனுசரித்துப் போதல், புரிதல் என அனைத்தும் அடங்கும். எனவே திருமணம் நிச்சயிக்கப்படும்போதே எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது? குடும்ப சூழ்நிலை என்ன? என அனைத்தையும் குறித்து கலந்தாலோசித்துவிட்டு அதன்பிறகு வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பது சரியாக இருக்கும்.
இதனால் தான் திருமண வயதினருக்கு திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை என்று சொல்லக்கூடிய ’pre marital counselling’ அளிக்கப்படுகிறது. இந்த ஆலோசனையில் எந்த வயதில் திருமணம் செய்யலாம்? திருமணத்திற்கு ஒரு பெண்ணும், ஆணும் தயாராவது எப்படி? என்று ஆலோசனை வழங்கப்படும். அதேபோல், திருமணத்திற்கு பின்பும் post marital counselling என்று ஆலோசனை கொடுக்கப்படும். அதில் அவர்கள் உடல், மனம் மற்றும் சமூக அளவில் என்னென்ன மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்படும். இதுபோன்ற ஆலோசனைகளை பெறும்போது குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவதோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என எண்ணுவதோ இருக்காது.
எந்த ஆலோசனையும் பெறாமல் திருமணம் நடந்தபிறகு குழந்தைப்பேற்றை தள்ளிப்போட்டால் அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலும், கடன் அதிகமாக இருத்தல், வருமானம் குறைவாக இருத்தல், வேலையின்மை அல்லது கணவன் மற்றும் மனைவி வெவ்வேறு இடத்தில் வேலை செய்தல் போன்ற தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடலாம். இதனால் குடும்பத்தாரிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்படலாம். சிலருக்கு குழந்தையின்மை பிரச்னை உருவாகலாம்.
கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியில் உருவாகும் ஒரு ஹார்மோன் தான் புரோஜெஸ்ட்ரான். இது குழந்தைப்பேறை கொடுக்கக்கூடிய ஹார்மோன். குழந்தைப்பேறை தள்ளிப்போட்டுக்கொண்டே போகும்போது, கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியின் செயல்பாடு மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் உற்பத்தி போன்றவற்றில் குறைபாடு ஏற்படும். குறிப்பிட்ட வயதை தாண்டும்போது ஆண்களுக்கு விந்து சுரப்பு குறைதல், பெண்களுக்கு கருப்பை பிரச்னை, ஹார்மோன் குறைபாடு போன்ற பிரச்னை ஏற்படலாம். இந்த பிரச்னைகளை மருத்துவரீதியாக சரிசெய்து குழந்தை பெற்றுக்கொள்ள தற்போது வசதிகள் உள்ளன. இருப்பினும் அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க திருமண வயது மற்றும் குழந்தைப்பேறு ஆகிய இரண்டையுமே முடிந்தவரை முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது.
காமம் சார்ந்த சந்தேகங்களுக்கு மருத்துவர் மற்றும் நிபுணர்களிடம் பேசி அவர்கள் தரும் பதிலை உங்களுக்குத் தந்துகொண்டிருக்கிறோம். உங்கள் சந்தேகங்களை கமெண்ட்டில் கேளுங்கள்.