“ஓ.பி.சி. இட ஒதுக்கீடு நீதித்துறையின் கையில் உள்ளது” –பா.ஜ.க வானதி சீனிவாசன் பேட்டி!

“ஓ.பி.சி. இட ஒதுக்கீடு நீதித்துறையின் கையில் உள்ளது” –பா.ஜ.க வானதி சீனிவாசன் பேட்டி!
“ஓ.பி.சி. இட ஒதுக்கீடு நீதித்துறையின் கையில் உள்ளது” –பா.ஜ.க வானதி சீனிவாசன் பேட்டி!
Published on

“கருத்துரிமை என்கிற பெயரில் ஒருவரது மத உணர்வுகளையோ இன உணர்வுகளையோ மொழி உணர்வுகளையோ காயப்படுத்துவதை சட்டம் அனுமதிக்கவில்லை. கந்தசஷ்டி கவசம் முருகனை வழிபடக்கூடிய இந்துக்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கக்கூடிய ஒரு முக்கிய கவசநூல். அதனை, அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்தால், அவருக்கான தண்டனை கட்டாயம் கிடைக்கவேண்டும்” என்று ஆவேசமாக பேசுகிறார், பாஜக மாநிலத் துணைத்தலைவர் வானதி சீனிவாசன்.

கந்தசஷ்டி கவசம் பிரச்னை, திமுக மீதான குற்றச்சாட்டுகள், பி.எம் கேர் நிதியில் வெளிப்படைத் தன்மையின்மை, பத்திரிகையாளர்கள் பணிநீக்கத்துக்கு பா.ஜ.க நெருக்கடி காரணமா போன்ற பல்வேறு கேள்விகளை வானதி சீனிவாசனிடம்  முன்வைத்தோம்…   

 இந்தக் கொரோனா சூழலிலும் கந்தசஷ்டி கவசம் பிரச்னையில் பாஜகவினரின் போராட்டம் தேவையா?

இந்த நேரத்தில் இல்லை. எந்த சூழலிலும் பாஜக போராடும். மேலும், இது கறுப்பர் கூட்டத்தை கேட்கவேண்டிய கேள்வி. முதலில் ஆரம்பித்தவர்கள் அவர்கள்தான். கொரோனா காலத்தில் மக்கள் கூடக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும், சமூக இடைவெளியோடு தவிர்க்கமுடியாத சில போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அப்படி சட்டத்தை மீறினால் விதிமீறலுக்கானவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஓ.பி.சி இட ஒதுக்கீடு பிரச்னையை மறைக்கவே கந்தசஷ்டி கவசம் சர்ச்சையை பா.ஜ.க கையில் எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

இப்பிரச்சனையை மற்ற அரசியல் கட்சிகளும் கையில் எடுத்து அரசியல் செய்திருக்கிறார்களே?  பாஜக மட்டும் அரசியல் செய்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? ஓ.பி.சி இட ஒதுக்கீடு என்பது புதிதாக ஆரம்பித்தப் பிரச்சனை கிடையாது. பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு, நீதித்துறை மூலம்தான் தீர்வுகாணவேண்டும்: அரசியல் ரீதியாக அல்ல. ’ஒவ்வொரு மாநிலத்திலும் கடைபிடிக்கக்கூடிய ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கு  தகுந்தமாதிரி, இடஒதுக்கீட்டை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை விளக்கிவிட்டது. ஆனால், தாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது அமைதியாக இருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் இதனை அரசியலாக்க நினைக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. அதனால், தீர்ப்புக்கு முரணாக எந்த முடிவையும் அரசு எடுக்க முடியாது. முழுக்க முழுக்க நீதித்துறையின் கையில் இருப்பதால் அரசு பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், பிராமணர்களுக்கு மட்டும் 10  சதவீத இட ஒதுக்கீடு உடனே  நிறைவேற்றியது எப்படி?

எல்லா மாநிலத்திலும் ஃபார்வர்ட் கம்யூனிட்டியினர் இருக்கிறார்கள். இதுவரை, இடஒதுக்கீட்டில் வராத சமூகம் அவர்கள். அதிலும், அந்தப் 10  சதவீதம் என்பது நலிவடைந்தவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுத்ததற்கு அகில இந்திய அளவில் முரண்பாடுகள் யாருக்கும் எழவில்லையே? மேலும், அது அரசியல் ரீதியாக வாக்குறுதி கொடுக்கப்பட்ட முடிவு. அதனால், இரண்டையும் ஒப்பிடவேண்டாம்.

பாஜகவில் தொடர்ச்சியாக நடிகர்களாக சேர்கிறார்களே? நடிகர்களை வைத்துதான் பாஜக விளம்பரம் தேடிக்கொள்கிறதா?

தமிழகத்தைப் பொருத்தவரை அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முன்பு நடிகர்கள் திராவிடக் கட்சிகளில்தான் சேர்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது பா.ஜ.க நோக்கி வருகிறார்கள். அதனால், பொறுப்புகளை கொடுத்து, அவர்களையும் கட்சியின் வளர்ச்சியில் பங்குகொள்ள வைக்கிறோம். அவர்களின், பிரபலத் தன்மையால் வாக்குவங்கி அதிகரிக்கும். அ.தி.மு.கவிலும் நிறைய நடிகர், நடிகைகள் சேர்ந்தார்கள். அப்போ, ஜெயலலிதா அம்மாவைத் தாண்டி அவர்கள் விளம்பரம் தேடிக் கொடுத்தார்கள் என்று  நம்புகிறீர்களா?

இதற்கு, ஏன் பெரியார் சிலைமீது காவிச்சாயம் பூசவேண்டும்?

எந்த சிலையையும் அவமதிப்பதிலோ அசிங்கப்படுத்துவதிலோ எங்களுக்கு உடன்பாடு கிடையாது. தனிப்பட்ட நபர்கள் செய்திருந்தால், அவர்களும் சட்டத்தின்முன்பு நிறுத்தப்படவேண்டும். அதனால், ஒருபோதும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நாங்கள் செல்லமாட்டோம். பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசியது கண்டிக்கப்பட வேண்டியது.

கொரோனா பணிகளை பார்க்காமல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என்று தொடர்ச்சியாக ஆட்சியை கலைப்பதிலேயே பாஜக குறியாக இருக்கிறதே?

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக வந்தது பாஜக. ஆனால், மஜதவும் காங்கிரஸும் தேர்தலுக்கு முன்பு பிரிந்து நின்றவர்கள் தேர்தல் முடிந்தவுடன் ஏன் கைக்கோர்த்தார்கள்? பாஜக வரக்கூடாது என்பதற்காகத்தானே? சரி, அப்படியாவது, அந்த இரண்டு கட்சிகளும் ஆட்சியை நடத்தினார்களா? இல்லையே? அதிலிருக்கும் எம்.எல்.ஏக்கள் தானாகவே எங்கள் கட்சிக்கு வந்தார்கள். நாங்கள், அடுத்தக்கட்சி எம்.எல்.ஏக்களின் உதவியோடு ஆட்சியமைக்கவில்லை. அந்த எம்.எல்.ஏக்களும் மீண்டும் மக்களை சந்தித்துதான் ஆட்சியமைத்தோம். மத்திய பிரதேசத்தில் ஜோதிராத்ய சிந்தியாவுக்கு  சரியான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எங்கள் கட்சியில் சேர்ந்தார். இதில், பாஜக எங்கு பணம் கொடுத்தது? ஜோதிராத்ய சிந்தியாவுக்கு பாஜக பணம் கொடுத்து சேர்த்தது என்றால் எவ்வளவு பெரிய நகைப்புக்குரியது. அவர், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இல்லாத பணமா? இது, அபத்தமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பிரச்சனை மூலம் வெளியேறும் எம்.எல்.ஏக்கள் வந்தால் நாங்கள் மறுப்பு சொல்வதில்லை. இதேதான், இப்போது ராஜஸ்தானுக்கும் பொருந்தும். அதற்காக, நாங்கள் சச்சின் பைலட்டுக்கு பணம் கொடுத்தோம் என்றாகிவிடுமா? ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ‘நானும் சச்சினும் பேசி 18 மாதங்கள் ஆகிறது’ என்கிறார். அப்போ, பிரச்சனை எங்களிடம் இல்லை. அவர்களிடம்தான் உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பி.எம் கேர் நிதியைக் கொடுத்துதான் இழுப்பதாக விமர்சிக்கிறார்களே?

அப்படி, குதிரை பேரம் நடந்திருந்தால் ஆதாரத்தைக் கொடுங்கள். எங்கிருந்து பணம் போனது? எவ்வளவு போனது?  யார் பேசினார்கள்? ஆதாரம் இல்லாமல் பி.எம் கேர் நிதி குறித்து பேசவேண்டாம்.

அப்படியென்றால், பி.எம் கேர் நிதியில் ஏன் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க பா.ஜ.க மறுக்கிறது?  

அரசு பி.எம் கேருக்கு பணம் வாங்கினால், அரசின் தணிக்கை அங்கு இருக்கும். அதுமட்டுமல்ல பி.எம் கேரிலிருந்து மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிக்கொண்டுதான் இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் அதுகுறித்து பதில் சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறோம். கேள்வி எழும்போது அரசு அதற்கான பதிலைக் கொடுக்கும்.

வினவு’ இணையதளத்தில் உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளதே?

வினவில் என்னைப் பற்றி மட்டுமல்ல.  பிரதமர் மோடி, அமித்ஷா என்று எல்லோரைப் பற்றியும் கற்பனை புனைவுக் கதைகள் நிறைய உள்ளன. அது வினவு அல்ல: புனைவு. அந்த வினவுக் கட்டுரையில் என்மீது புகார் சொன்ன நபர்கள் சொன்னது பொய்  என்று கட்சியில் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் நீக்கவும் பட்டுவிட்டார்கள். அவர்கள்மீது கிரிமினல் மான நஷ்டஈடு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

’தி.மு.க இந்துவிரோத கட்சி’ என்று பாஜக தொடர்ந்து பரப்புரை செய்வது வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக என்கிறார்களே?

கலைஞர் காலம் முதல் மு.க ஸ்டாலின் வரை எந்தெந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் தி.மு.க இந்துவிரோத போக்கினை கடைபிடித்தது என்று எங்களால் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். கிறிஸ்துமஸ்க்கும் ரம்ஜானுக்கும் வாழ்த்து சொல்லும் மு.க ஸ்டாலின் என்றாவது கோயிலுக்கு வந்திருக்கிறாரா? இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறாரா? அப்போ, இதெல்லாம் இந்துவிரோத போக்கில்லாமல் வேறு என்ன?

ஆனால், பெரும்பான்மையினரான இந்து மக்களுக்காக  ஓ.பி.சி இட ஒதுக்கீட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக திமுகதானே போராடிக் கொண்டிருக்கிறது?

இத்தனை மக்களுக்கு போராடுபவர்கள் அந்த மக்கள் மதிக்கும் தெய்வங்களை மட்டும் ஏன் இழிவுப்படுத்துகிறார்கள்? உரிமைகளுக்காக போராடுவது என்பது வேறு.  நம்பிக்கைகளை சிதைப்பதும் அவமானப்படுத்துவதும் என்பது வேறு. தமிழகத்தில் இரண்டு கட்சிகளாக இருந்த அரசியல் வரலாறு, இப்போது மூன்றாவது கட்சியாக பாஜக மூலம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் என்கிற பொய் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் செய்கின்றன. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வந்து தமிழகத்தை ஒரு ஆள்கின்ற கட்சிபோல் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. மேலும், மாநிலத்தில் பட்டியல் சமூகத்தினரை தலைவராக்கியிருப்பதன் மூலம் பாஜக ஒரு வித்தியாசமான கட்சி என்பது மட்டுமல்ல. இங்கு அனைத்து சமூக மக்களும் மதிக்கப்படுவார்கள் என்பதை காட்டியிருக்கிறது. ஆக, இவையெல்லாம் சேர்ந்துதான் திமுக பாஜகவை ஒவ்வொரு நாளும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் விதமாக  பா.ஜ.கவினர் அழுத்தம் கொடுப்பது சரியா?

பத்திரிகையாளர்கள் என்ன செய்தியோ அதனை எழுதுவதில் தவறில்லை. ஆனால், அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை காட்டினால் நியாயமான செய்தியை மக்கள் எதிர்பார்க்க முடியாது. எத்தனையோ பத்திரிகையாளர்கள் செய்தியை செய்தியாக கொடுக்கும்போது எந்தப் பிரச்சனையும் அல்ல. குறிப்பிட்டத் தலைவருக்கு சார்பாக அவர்கள் செயல்படும்போது யாராக இருந்தாலும் கேள்வி எழுப்பத்தான் செய்வார்கள். தேச ஒற்றுமையை அழுத்தமாக பேசும் பத்திரிகையாளர்களை எதிர்கட்சி முகாம்கள் ’சங்கிகள்’ என்று திட்டுவதை சமூக வலைதளத்தில் பார்க்கிறோம். பாஜக எப்போதும் பத்திரிகை சுதந்திரத்திற்கு மரியாதைக் கொடுக்கும் கட்சி.

ஆனால், எஸ்.வி சேகர் தொடர்ச்சியாக  பத்திரிகையாளர்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசுகிறாரே?

எஸ்.வி சேகரின் கருத்துக்கு எப்படி கட்சி பொறுப்பாகும்? எஸ்.வி சேகராகட்டும் ஒரு சில நபர்களாகட்டும் அவர்களின் விமர்சனங்களை அவர்களின் பாணியில் சொல்கிறார்கள். கட்சி அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர்கள் பிரச்சனையில் எப்படி நடக்கிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும். பத்திரிகையாளர்களை நீக்கம் செய்தால் நிர்வாகத்திடம்தான் கேட்கவேண்டும். அதில், பாஜக எங்கு தலையிட்டது? நிர்வாகத்திடம் போய் யாருடைய வேலையும் எடுங்கள் என்று சொல்வது கிடையாது. இதில் எங்களுக்கு எந்த பங்கும் கிடையாது.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com