ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கிய முன்னோடிகள் மருதுசகோதரர்கள். இவர்கள் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.
மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்து போராட முயன்றதால் ஆங்கிலேயரின் கடும் கோபத்திற்கு ஆளாகி 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் படையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தனர். ஆங்கிலேயருடன் நடந்த போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின், அவரது மனைவி ராணி வேலுநாச்சியாருக்கு உதவியாக இருந்து சிவகங்கை மண்ணை மீட்க உதவினார்கள் மருது பாண்டியர்கள். மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்புவின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினார்கள், இது ஆங்கிலேயருக்கு கடும் கோபத்தை உருவாக்கியது.
1801 சூன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ”ஜம்புத்தீவு பிரகடனம்”என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்குமுன் நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக பல வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.
அதன்பின் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி, சிவகங்கை மீது 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர், இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. கடும் போருக்குபிறகு காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார், அத்துடன் சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.
அவர்களுடன் அவர்களின் ஆண் வாரிசுகள் அனைவரும் ( "துரைச்சாமி" சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர ) தூக்கிலிடப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் இன்றைய பினாங்கு நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.