சட்டப்பேரவையில், “ நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை” என்ற பாடல்வரிகளைக் கொண்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைமை பற்றி பேசியது அரசியல் அரங்கில் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இனி அதிமுகவின் அரசியல் பாதை எந்த மாதிரியான திசையில் பயணிக்கும் என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம் குறித்து சில கருத்துகளை முன்வைத்தார். பின்னர் அதிமுகவினர் மீண்டும் அவைக்குள்ளே வந்தபோது, தாம் தெரிவித்த கருத்துகள் ஓ.பன்னீர்செல்வத்தின் மனதை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியிருந்தால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், துரைமுருகன் மீது தமக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதாகக் குறிப்பிட்டார். தம்முடைய தனிப்பட்ட நிலையை எண்ணும்போது ஒரு பாடல் வரி நினைவுக்கு வருவதாகவும், அது “ நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை. என் நிலை அவைமுன்னவரான துரைமுருகனுக்கும் தெரியும்” என்றார்.
ஏற்கனவே திமுகவினரையே மிஞ்சும் வகையில் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் ஓ.பன்னீர் செல்வம் புகழ்ந்து பேசியிருந்த நிலையில், தற்போது இந்த கண்ணதாசன் பாடல் மூலமாக அதிமுகவுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ்ஸின் பாடல் இபிஎஸ்க்கா? மத்திய அரசுக்கா?
ஓபிஎஸ்ஸின் இந்த பாடல் யாருக்கானது என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது. வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் திமுக அரசு நிறைவேற்றுவதை எதிர்த்து அதிமுக நேற்று வெளிநடப்பு செய்தது. அதன்பின்னரே ஓபிஎஸ் இந்த பாடலை பாடியதால் மத்திய அரசினை எதிர்த்து ஏதும் செய்ய இயலாத அதிமுகவின் இயலாமையை வெளிப்படுத்தும் விதமாக இதனைப் பாடினாரா அல்லது கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் தன்பக்கம் குவித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தனது இயலாமையை வெளிப்படுத்தும் விதமாக இதனைப்பாடினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலாவை எதிர்த்து பாஜக கொடுத்த துணிச்சலில்தான் 2017இல் தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம், ஒரு கட்டத்தில் பாஜக ஓபிஎஸ்ஸை இபிஎஸ்ஸுடன் இணையுமாறு சைகை காட்டியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டாலும், அதன்பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பவர் குறைந்துகொண்டே வருகிறது. எல்லா இடங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கும் நிலையில் பாஜக தனக்கு கைகொடுக்கவில்லை என்ற விரக்தி ஓபிஎஸ்ஸிடம் பொதிந்துள்ளது என்பதையே இந்த பாடல் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
திமுகவிடம் ‘நல்லபிள்ளை’யாக நடந்துகொள்கிறாரா ஓபிஎஸ்?
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த லிஸ்ட்டில் தங்கமணி, வீரமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, இரா.காமராஜ் உள்ளிட்ட அடுத்தகட்ட லிஸ்டையும் திமுக தயாராக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் போராட்டமெல்லாம் நடத்தினர்.
இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை தூசு தட்டி ஒட்டுமொத்த அதிமுகவையே அதிர்ச்சியில் உறையவைத்தது திமுக அரசு. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அதிமுக தலைவர்கள் சிக்குவார்கள் என்று பலமாக பேச்சு அடிபட்டுவருகிறது. இந்த சூழலில்தான் திடீரென புளியந்தோப்பு குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டபட்டுள்ளதாக புகார்கள் வெளிவந்தன. இந்த துறைக்கு அமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸும் இதில் சிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுகிறது. இதனால்தான் சட்டசபையில் துரைமுருகனுக்கு வாழ்த்துப்பா, கருணாநிதிக்கு புகழுரை என நல்லபிள்ளையாக நடந்துகொள்கிறார் என்கின்றனர் அரசியல் செயற்பாட்டாளர்கள். இச்சூழலில் தனது இயலாமையை வெளிப்படுத்தும் விதமாக கண்ணதாசனில் பாடலைப்பாடி அதிமுகவின் கடந்தகால நடவடிக்கைகளில் தனது இயலாமையை வெளிப்படுத்தவே இதுபோல ஓ.பன்னீர்செல்வம் நடந்துகொள்கிறார் என்றும் சொல்கின்றனர்.
திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அதிமுக:
கடந்த காலங்களில் அதிமுகவும், திமுகவும் படுதோல்வி அடைந்த காலங்கள் உண்டு. அப்போதெல்லாம் கருணாநிதியும், ஜெயலலிதாவும் முன்பைவிட வேகமாக வீரியமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு கட்சியினரை சுறுசுறுப்புடன் வைத்திருப்பார்கள். ஆனால் தற்போது அதிமுக கெளரவமான எண்ணிக்கையில் 66 எம்.எல்.ஏக்களை சட்டசபையில் வைத்திருந்தாலும் அதிமுக தலைவர்களின் பதட்டம், இரட்டை தலைமை, சசிகலா வாய்ஸ் என அதிமுக தொண்டர்களை திக்கற்ற திசையில் நிற்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.
இது பற்றி பேசும் பத்திரிகையாளர் ப்ரியன், “அதிமுகவில் ஒற்றை தலைமையை கைப்பற்றவேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடமுமே கடுமையான போட்டி நிலவுகிறது. இதுவரை முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் என அனைத்திலுமே இபிஎஸ்தான் வெற்றிபெற்றார், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் ஓபிஎஸ்ஸால் எதிலும் வெற்றிபெறமுடியவில்லை. இப்போது எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கு சிக்கலில் இருக்கிறார், ஒருவேளை அவருக்கு சிக்கல் அதிகமானால் கட்சியை கைப்பற்றும் கணக்கோடுதான் ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுகிறார். மற்றொருபுறம் புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு விவகாரம் வெளிப்பட்ட பிறகுதான் ஓபிஎஸ், கருணாநிதியை வரலாற்று சிறப்புமிக்க தலைவர் என்றும், துரைமுருகனையும் புகழ்ந்தும் பேசினார். எனவே புளியந்தோப்பு விவகாரத்தில் அரசின் பிடி இறுக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுகிறார்.
கடந்த காலங்களில் அதிமுக, திமுக இதுபோன்ற இணக்கமான நட்புறவோடு இருந்திருந்தால் இது நமக்கு ஆச்சர்யமாக தெரிந்திருக்காது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டே வெறுப்பு அரசியலையே கடைபிடித்தனர். இபிஎஸ் - ஒபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட கருணாநிதி இறந்தபோது மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யவிடாமல் அலைக்கழித்தனர். அத்தகைய ஓபிஎஸ் இப்போது கருணாநிதிக்கு புகழுரை வாசிப்பது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா விதைத்த திமுக வெறுப்பு அரசியலுடனே அதிமுக தொண்டர்கள் வளர்ந்துள்ளனர், தற்போது இவர்கள் திமுகவை புகழ்ந்து பேசுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை. மத்திய அரசு வேளாண்சட்டம் கொண்டுவந்தபோது முழுமையாக ஆதரித்துவிட்டு இப்போது இயலாமையுடன் பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தற்போது சுயநலம் மற்றும் உட்கட்சி பூசல் காரணமாகவே ஒபிஎஸ் இப்படி செயல்படுகிறார், இது அவர் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைக்கும்.
ஓபிஎஸ் மட்டுமின்று செங்கோட்டையனும் “ வரலாற்றிலேயே இப்போதுதான் சட்டசபை கண்ணியமாக நடக்கிறது” என்று கூறியுள்ளார், அப்படியானால் எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் சபை கண்ணியமாக நடக்கவில்லை என அவர் சொல்கிறாரா?. இனி அதிமுகவினர் பலரும் தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்களும் திமுகவை புகழ்ந்து பேசும் நிலை ஏற்படலாம். தங்களுக்கு ஆதரவாக நம்பிக்கை கொடுக்க வேண்டிய தலைவர்களே வழக்குகளில் சிக்கி தவிக்கும் சூழலில், அதிமுக தொண்டர்கள் தற்போது திக்குத்தெரியாத காட்டில் குழப்பத்தில் தவிக்கிறார்கள்.
திமுகவை பிடிக்காதவர்களுக்கான வாய்ப்பாக அதிமுக இருந்தது, திமுக எதிர்ப்புதான் அதிமுகவுக்கான பலம். வழக்குகளுக்கு பயந்து அதிமுக தலைவர்கள் இப்படி செயல்பட்டால், இனிவரும் காலங்களில் சசிகலாவுக்கு கட்சியில் ஆதரவு பெருக வாய்ப்புள்ளது. அதிமுக தலைவர்கள் திமுகவினரிடம் விலைபோய்விட்டனர் என சசிகலா பிரச்சாரம் செய்ய இவர்களின் நடவடிக்கை வழிவகுத்துள்ளது. அதிமுக – திமுக என்பது இருதுருவ அரசியலாக தமிழகத்தில் இருக்கிறது. அப்படி இருக்கையில் ஒரேயடியாக திமுகவிடம் , அதிமுக பம்முவது கதாநாயகன் திடீரென காமெடியன் ஆனதுபோல உள்ளது” என தெரிவித்தார்.