'மக்களாட்சியின் ஆணிவேர்' கிராம சபைக் கூட்டம் நடைமுறைகள் என்னென்ன? - ஒரு தெளிவுப் பார்வை

'மக்களாட்சியின் ஆணிவேர்' கிராம சபைக் கூட்டம் நடைமுறைகள் என்னென்ன? - ஒரு தெளிவுப் பார்வை
'மக்களாட்சியின் ஆணிவேர்' கிராம சபைக் கூட்டம் நடைமுறைகள் என்னென்ன? - ஒரு தெளிவுப் பார்வை
Published on

ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்கள் கடந்த 18 மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக தடைபட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் என்றால் என்ன, அவை நடப்பது எப்படி, அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பதை சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய அரசில் மக்கள் நேரடியாக பங்குபெறும் ஜனநாயக மன்றமாக கிராம சபைக் கூட்டங்கள் விளங்குகிறது. சட்டமன்றங்களும், நாடாளுமன்ற மக்களவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவையே. ஆனால், இந்த அவைகளில் மக்களின் பிரதிநிதிகள்தான் கலந்துகொள்ள முடியும். மக்கள் பிரதிநிதிகளுடன் மக்கள் நேரடியாக இணைந்து நிர்வாகத்தை பார்வையிடவும், கோரிக்கைகளை முன்வைக்கவும் கூடிய அதிகார மையமாக கிராம சபைக் கூட்டங்கள் விளங்குகிறது.

தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர் கொரோனா பரவல் காரணமாக மே 1, ஆகஸ்டு 15 ஆகிய நாட்களில் நடக்கவில்லை. 2020 ஆம், அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் அக்கூட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி 26 மற்றும் மே 1 ஆம் தேதிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை, தற்போது ஆகஸ்டு 15 ஆம் தேதியும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறாது என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களுக்கு அதிமுக அரசு தடைவிதித்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின்  தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தார். தற்போது திமுக ஆட்சி நடைபெற்றுவரும் சூழலில் கிராம சபைக் கூட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

கிராம சபைக்கூட்டங்கள் எப்போது, எங்கு நடத்தப்படும்?

கிராம சபைக் கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 (குடியரசு தினம்) , மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி)  என ஆண்டுக்கு 4 முறை நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும்  இந்தக் கூட்டம் அதன் தலைவரால் கூட்டப்படும், இந்தக் கூட்டத்தில் கிராமத்தின் தேவைகள் மற்றும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த திட்ட அறிக்கையை, அரசு அதிகாரி முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.

மதசார்புடைய வழிபாட்டுத் தலங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது. ஒரே ஊராட்சியில் பல குக்கிராமங்கள் இருப்பின், சுழற்சி முறையில் வெவ்வேறு குக்கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.

கிராம சபைக்கூட்டத்தின் பணிகள் என்ன?

ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் ஊக்குவிப்பதே கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும். ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும்.

சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம், கிராம சபைக் கூட்டங்களுக்கு உள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் தங்கள் ஊராட்சிகள் தொடர்பாக நிறைவேற்றும் தீர்மானங்களை மத்திய, மாநில அரசுகளால் கூட மீற இயலாது என பல முறை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உதாரணமாக, கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடை நடத்தக்கூடாது என தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டத்திற்கான நடைமுறைகள்:

கிராம சபைக்கான கூட்டத்திற்கான பொருளை தயார் செய்து குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பாக, கூட்டம் குறித்த அறிவிப்பை ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிட வேண்டும். அதன்பின்னர் தண்டோரா, துண்டுப் பிரசுரம் மற்றும் விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு இதனை அறிவித்து ஊராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்துக்கான பொருள் குறித்து, ஒவ்வொரு கூட்டத்துக்கும் மாவட்ட ஆட்சியர் சிலவற்றை அறிவிப்பார், அந்த பொருள் குறித்தும் கிராம சபையில் விவாதிக்க வேண்டும். ஒரு கிராம சபைக் கூட்டத்துக்கு ரூ.1000 வரை ஊராட்சி நிதியிலிருந்து செலவு செய்யலாம் என்பது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

கிராம சபைக் கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்துகொள்ள வேண்டும்?

கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் மக்கள் தொகைக்கேற்ப விகிதத்தில் மக்கள் கலந்துகொள்ளவேண்டும், போதிய அளவில் மக்கள் கலந்துகொள்ளாத கிராம சபைக் கூட்டங்களின் தீர்மானங்கள் செல்லாது. குறைந்தபட்ச மக்கள் கலந்துகொள்ளாத கிராம சபைக் கூட்டங்களை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும்.

கிராமப் பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல, ஊராட்சியின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10,000 பேர் கொண்ட ஊராட்சியில் 200 பேரும் , 10,000-க்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில் 300 பேரும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

கிராம சபைக்கூட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.
  • கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அல்லது அதிகாரிகளோ நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
  • கிராம சபை தீர்மானத்தின் நகலை பெறுவதற்கு கிராம மக்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com