’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்?’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்!

’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்?’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்!
’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்?’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்!
Published on

ரெம்டெசிவர் மருந்து விற்பனை, தடுப்பூசி செலுத்துதல், ஊரடங்குக்கு முந்தைய நாள் போக்குவரத்து நெரிசல், டாஸ்மாக் திறப்பு என அரசின் சில முடிவுகளால் மக்கள் கூட்டம் முண்டியடித்து, தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது. அரசு இன்னமும் விழிப்போடு இருந்திருந்தால் இந்த ‘கொரோனா ’ஹாட் ஸ்பாட்’ சம்பவங்களை தவிர்த்திருக்கலாம்.

ரெம்டெசிவர் மருந்து விற்பனை:

கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய நேரத்தில், இந்த நோய்க்கு ரெம்டெசிவர் மருந்து நல்ல பலனளிப்பதாக சொல்லப்பட்டது. அதன் காரணமாக ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்ட சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு பக்கம் தீயென கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருந்த நேரத்தில், மற்றொருபக்கம் போதிய தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கான மக்கள் முட்டிமோதி மருந்து வாங்க நின்றுகொண்டிருந்தனர். பின்னர்தான் விழிப்படைந்த அரசு ரெம்டெசிவர் விற்பனையை நேரு மைதானத்திற்கு மாற்றியது, அதன்பின்னர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசே ரெம்டெசிவரை வழங்கும் என சொன்னதால் மக்கள் கூட்டம்கூடி அலைமோதுவது நின்றது. பின்னர் உலக சுகாதார நிறுவனமே கொரோனா சிகிச்சைகள் மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவரை நீக்கியது.

ஊரடங்குக்கு முந்தைய போக்குவரத்து மற்றும் சந்தை நெரிசல்கள்:

அரசு முழுமையான தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவிக்கும் முன்பு இரண்டு நாட்கள் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பலாம் என்றும், அனைத்து கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம் என்றும் அறிவித்தது. திடீரென வந்த இந்த அறிவிப்பால் போக்குவரத்து துறையும், காவல்துறையும் சற்று திணறியது. சென்னையிலிருந்து  தமிழகத்தின் மற்ற ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக  கோயம்பேடு, பெங்களத்தூர் பேருந்து நிலையங்களை முற்றுகையிட்டனர், இதன் காரணமாக பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அதுபோலவே இரு நாட்கள் அனைத்துக்கடைகளையும் திறக்கலாம் என்ற அறிவிப்பும் கடைவீதிகளில் மக்கள்திரளை அதிகரிக்கவே செய்தது. இந்த விசயத்தில் அரசு இன்னும் கூடுதல் திட்டமிடுதலுடன் இருந்திருக்கலாம் என்றே சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசிக்கான கூட்டம்:

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும்கூட, கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை. இதன்காரணமாக பல மருத்துவமனைகளுக்கும், தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கும் மக்கள் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் உள்ள தடுப்பூசி கையிருப்பு குறித்த வெளிப்படையான தகவல்கள் பகிரப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். எந்தெந்த தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் இல்லை அல்லது கையிருப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டால் மக்களின் அலைச்சல் மிச்சமாகும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

டாஸ்மாக் கடைகள் கூட்டம்:

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதால் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவுடன் ஒவ்வொரு கடையிலும் நூற்றுக்கணக்கான மதுகுடிப்போர் வரிசைகட்டி தனிமனித இடைவெளியின்றி நிற்கின்றனர்.  டாஸ்மாக் கடைகள் திறப்பு காரணமாக மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சமும் மக்களிடம் எழ ஆரம்பித்திருக்கிறது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் உள்ளவர்கள் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு செல்வதால் அனைத்து தரப்புமே பீதியில்தான் உள்ளனர். டாஸ்மாக் திறப்பு விசயத்தில் அரசு அவசரம் காட்டியிருக்க தேவையில்லை என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது.

கொரோனா வார்டுக்குள் உறவினர்கள் அனுமதிக்கப்படும் புகார்:

முதல் அலையின்போது கொரொனா வார்டுகள் ராணுவ முகாம் போன்ற கட்டுப்பாட்டுடன் இருந்தது. ஆனால் இரண்டாம் அலையின் போது கொஞ்சம் தளர்வாக இருந்ததால், கொரோனா வார்டிற்குள் நோயாளிகளின் உறவினர்கள் சாதாரணமாக சென்றுவரும் சூழல் நிலவுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கொரோனா நோய்த்தொற்று சங்கிலித்தொடராக பரவும் சூழல்தான் நிலவுகிறது என்று சொல்லப்படுகிறது. கொரோனா வார்டுகள் பழையபடி முழுக்கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை கவனிக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

வரும்முன் காப்பதே சிறந்தது:

கொரோனா பரவலுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது கூட்டம் சேருவதுதான். 6 அடி இடைவெளி நிச்சயம் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில் மக்கள் ஒன்று கூடுவதற்கு சாத்தியமுள்ள எந்தவொரு அறிவிப்பையும், திட்டத்தையும் பலமுறை யோசித்து நன்கு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். தளர்வுகள் கொடுப்பது இங்கு பிரச்னை அல்ல. ஒரு தளர்வு கொடுத்தால் என்னென்ன நடக்கும் அதனை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமிட வேண்டும். நூற்றுக்கு நூறு சதவிதம் அதனை செயல்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி மரணங்களின் எண்ணிக்கை அந்த வேகத்தில் குறையவில்லை. நான் ஒன்றிற்கு 250க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதனால், புதிய தொற்று ஏற்பட அரசு தரப்பில் எவ்விதத்திலும் காரணம் ஆகிவிடாமல் ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பதற்கு இணங்க அரசு செயல்படவேண்டும். மக்களும் கூடுமான வரை தனிமனித இடைவெளியை கடுமையாக கடைபிடித்து பரவலுக்கு சிறிதும் இடம் அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com