சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் வகையில், உலகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மருத்துவக் கழிவுகளின் நச்சுத்தன்மை காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களை கொண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை, பி.என்.ஏ.எஸ். என்ற சர்வதேச மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள பல ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து, லண்டனில் உள்ள தேம்ஸ் நதி மற்றும் இங்கிலாந்தின் பிற நீர்வழிகள் வழியாக, மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 258 ஆறுகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த பட்டியலில் டெல்லி, நியூயார்க் மற்றும் குவாங்சோ போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஆறுகளுடன் பிரேசிலில் உள்ள அமேசான் நதியும் ஆய்வில் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நதிகள், ஆறுகள் மருத்துவக் கழிவுகளால் மாசுபடுவதால் நன்னீர் வாழ்வினங்கள் மற்றும் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீரின் தரம் மற்றும் மாசுபாடு குறித்த உலகளாவிய இலக்குகளுக்கும் இந்த மாசுகள் அச்சுறுத்தலை விளைவிக்கிறது என்று ஆய்வில் எச்சரிக்கப்பட்டும் உள்ளது.
அண்டார்டிகா உள்பட சில இடங்களிலும் உள்ள ஆறுகளில் நிகோடின், கோட்டினைன், கஃபின் மற்றும் பாராசிட்டமால் ஆகியவை கலந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் நான்கில் ஒரு பங்கு இடங்களில் மருந்துக் கழிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். உலகளவில் ஆறுகளில் காணப்படும் பெரும்பாலான ரசாயனங்களின் வீரியம் குறைவு என்றாலும், அது சுற்றுச்சூழல் அல்லது மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்தி: மேட்டுப்பாளையம்: சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்த காட்டு யானை