இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து தரப்பு மக்களும் ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.
ஆண், பெண், வளரும் நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் என எங்கு பார்த்தாலும் இதே நிலை தான். அதன் காரணமாக போதை தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
பேரண்டத்தில் வசித்து வரும் மக்களில் பல கோடி கணக்கிலான பேர் இந்த போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்கிறது உலக பொது சுகாதார மையம்.
இது குறித்து மனநல மருத்துவர் அபர்ணா ஸ்ரீதரனிடம் பேசினோம்…
போதை பழக்கம் எதனால் ஏற்படுகிறது? எதெல்லாம் போதை?
ஒருவருக்கு போதை பழக்கம் ஏற்பட பல காரணிகள் உள்ளன. வாழ்க்கை சூழல், பொருளாதாரம், நண்பர்கள், இருப்பிடம் என சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக எதை ஒன்றையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அதற்கு நாம் அடிமையாகி விட்டோம் என்று அர்த்தம்.
மது, புகை, லாட்டரி, கேமிங், கேம்பளிங், மசாஜ், சாப்பாடு, காபி குடிப்பது, ஆன்லைன் சேட்டிங், மொபைல் கேமிங், PORNOGRAPHY, சைபர் செக்ஸ், ஹெராயின், கஞ்சா, உடற்பயிற்சி என பல விஷயங்களில் ஆரம்பத்தில் ஈடுபடும் போது அது சாதரணமாக தான் தெரியும்.
அதுவே அதே விஷயங்களை நாம் ஏதேனும் விரக்தியில் இருக்கும் போதோ, குழப்பத்தில் இருக்கும் போதோ செய்தால் அப்போதைக்கு அது தீர்வு (TEMPORARY RELIEF) கொடுப்பது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.
மருத்துவ ரீதியாக இதை பார்த்தோமானால் நம் மூளை பகுதியில் உள்ள ரிவார்ட் சர்க்யூட் தூண்டப்படுவது தான் இதற்கு காரணம்.
நாளடைவில் அதிகப்படியாக அதே பழக்கத்தை ஒருவர் தொடர்ந்து வந்தால் அது பொருளாதாரம், குடும்பம், சமூகம் என எல்லாவற்றையும் பாதிக்க செய்யும் போது தான் அது போதையாக மாறுகிறது.
தாழ்வு மனப்பான்மை, உணர்ச்சி பிழம்பாக பொங்குபவர்கள், வெளிப்படையாக பேசுபவர்கள், தற்புகழ்ச்சி பெற நினைப்பவர்கள் மாதிரியான குணாதசியங்கள் கொண்டவர்கள் தான் போதை உலகின் அடிமைகள்.
போதை நல்லதா… கெட்டதா…?
எது ஒன்றுமே ஒருவரின் தன்னிலை மறந்த காட்டுப்பாட்டை தாண்டாத வரையில் தப்பில்லை. ஆனால் போதை விஷயத்தில் மட்டும் இதற்கு நாம் விலக்கு கொடுத்தாக வேண்டும். ஏனென்றால் இதன் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும். போதை பழக்கத்திற்கு ஆளானவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதோடு அவர்களை சுற்றி இருப்பவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதால் போதை பழக்கம் கொடிதிலும் கொடிது.
போதைக்கு ஒருவர் அடிமையாகியுள்ளார் என்பதை எப்படி அறிவது? அதற்கான அறிகுறிகள் என்ன?
*போதையின் தேடல் நேரத்தை அதிகமாக்கும். உதாரணமாக ஒருவர் ஒரு சிகரெட் புகைக்கிறார் என்றார் அவரை இரண்டு சிகரெட் புகைக்க தூண்டும்.
*ஒரு நாள் முழுவதும் அந்த போதை வஸ்துவை குறித்தே நினைத்து கொண்டிருப்பது.
*வேலை, குடும்பம் என அனைத்தையும் இழக்கும் அளவிற்கு எந்நேரமும் போதையில் மூழ்கியிருப்பது.
*பயத்தை போக்க, துக்கத்தை போக்க, மனதைரியம் கொண்டு வர, சந்தோஷத்திற்காக என ஏதாவது ஒரு காரணம் சொல்லி போதை தரும் வஸ்துவை பயன்படுத்துவது.
*போதையிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவுவது.
*யாரிடமும் பேசாமல் இருப்பது அல்லது காரணமே இல்லாமல் கடிந்து கொள்வது.
*தனக்குள் தானே பேசிக் கொள்வது.
போதையினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
*சிந்திக்கும் திறனை இழக்கலாம்.
*மூளையின் செயல்பாடுகள் மந்தமாக்கலாம்.
*ஆழ்மனத்துக்குள் இனம் புரியாத பயம்.
*மன அழுத்தம், பதற்றம்.
*போதையை தவிர வேறெதிலும் நாட்டமின்மை.
*குடும்பம், பொருளாதாரம், பணி, படிப்பு மாதிரியானவற்றில் போதையினால் ஏற்படும் சிக்கல்.
*மூளைக்குள் சதா காலமும் போதையை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பதால் ஏற்படும் நரம்பு மண்டல் பாதிப்புகள்.
*உடல் மெலிதல், உடல் பருமன்.
போதை பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி?
*போதை பழக்கத்திற்கு அடிமையாகி போனவர்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் தானாகவே அதிலிருந்து மீண்டு விடலாம். நண்பர்கள், உறவினர்களோடு நேரத்தை இனிதாக செலவிட முயற்சிக்கலாம். போதை பொருளை பயன்படுத்தியதாக வேண்டுமென்ற எண்ணம் வரும்போதெல்லாம் வேறேதேனும் விஷயங்களில் கவனத்தை திசை திருப்பலாம். போதை பழக்கத்திற்கு ஆட்பட்டவர்களை மீட்டெடுக்க உதவும் மருத்துவர்களையும், மறு வாழ்வு மையங்களையும் அணுகலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.