உலகமே இன்று சுட்டெரிக்கும் வெயிலால் தகித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் தான், உலகின் வெப்பமான மாதம் என பதிவாகியிருந்தது. நூறு ஆண்டுகளில் அல்லது ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வெப்பமான மாதமாக கூட இந்த ஆண்டில் ஏதேனும் ஒரு மாதம் இடம்பெற வாய்ப்புள்ளது. தீவிர வெப்ப எச்சரிக்கைகளுக்கும், காட்டுத் தீக்கும், பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காற்றின் தரத்திற்கும் உஷ்ணமான வெப்பநிலையே தூண்டுதலாக அமைந்துள்ளது. ஏதோ நம் நிலத்தில் மட்டும்தான் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக நாம் நினைத்து விடக்கூடாது.
உலகளவில், கடலின் மேற்பரப்பு வெப்பநிலையின் தினசரி சராசரி அளவு கூட உச்சத்திற்கு சென்றுள்ளது. இது ஏப்ரல் மாதம் 21.1 டிகிரி செல்சியஸை எட்டியது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து கடலின் வெப்பநிலை தொடர்ந்து உச்சத்தில் பதிவாகி வருகிறது. இது உலகம் முழுவதும் வெப்ப அலைகள் எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இப்போது வரையில் வடகிழக்கு பசிபிக் பெருங்கடல், தெற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலின் தென் அரைக்கோளம், வடகிழக்கு அட்லாண்டிக், வட அட்லாண்டிக்கின் வெப்பமண்டல பகுதி மற்றும் மெடிட்டேரியன் பகுதிகளை வெப்ப அலைகள் தாக்கி வருவதாக சமீபத்தில் தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியிருந்தது.
இந்த வெப்ப அலைகள் கடல்சார் சுற்றுச்சூழலையும், மனிதச் சமுதாயத்தையும் பலவீனப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு கடல்சார் உயிரினங்கள் இறக்க நேரிடலாம்; அவற்றின் இடம்பெயர்தல் முறைகளை மாற்றலாம்; பவளப் பாறைகளில் வெளிருதல் உண்டாகலாம்; வானிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவற்றால் கடலில் உண்டாகும் புயல்கள் வலுவடைந்து, கடலோர சமூகங்களில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையெல்லாம், விட, நம்முடைய பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வந்தால், இந்த வெப்ப அலைகள் இன்னும் தீவிரமடைந்து நீண்ட காலம் நீடிக்கும். அதைத்தொடர்ந்து ஏற்படக்கூடிய பேரழிவுகளும் மிக மோசமானதாக இருக்கும்.
இதுவொரு தீவிர வானிலை நிகழ்வு. கடலினுடைய குறிப்பிட்ட பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து ஐந்து நாட்களாக சராசரி அளவை விட மூன்று அல்லது நான்கு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், இந்த வெப்ப அலைகள் உருவாகிறது. இது வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட நீளக்கூடும் என அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பு (NOAA) கூறுகிறது.
சராசரி வெப்பநிலையை விட மூன்று அல்லது நான்கு டிகிரி செல்சியஸ் உயர்வது மனிதர்களைப் பொறுத்தவரை பெரிய விஷயமில்லை. ஆனால், கடல்சார் உயிர்களுக்கு பேரழிவை உண்டாக்கும். உதாரணமாக, 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மேற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் உண்டான வெப்ப அலைகளால், யாரும் எதிர்பாரா வகையில் திடீரென, அதுவும் குறிப்பிட்ட பகுதிக்குள் வாழ்ந்து வந்த மீன்களும் நீர்வாழ் விலங்குகளும் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதே வெப்ப அலைகள், கடற்பாசி காடுகளை அழித்து, கடற்கரை சுற்றுச்சூழலின் அடிப்படையையே முற்றிலும் மாற்றியமைத்துள்ளதாகவும் இன்னொரு அய்வு கூறுகிறது. பொதுவாக கடற்பாசிகள் குளிர்ச்சியான நீரில் வளரக்கூடியது. பல கடல்சார் உயிரினங்களுக்கு இது வாழ்விடமாகவும் உணவாகவும் இருந்து வருகிறது.
இதேப்போல், 2005-ஆம் ஆண்டு அட்லாண்டிக் வெப்பமண்டல பகுதி மற்றும் கரீபியன் கடற்பகுதிகளில் அதிக வெப்பநிலை நிலவிய போது, பெருமளவில் அங்கிருந்த பவளப் பாறைகள் வெளிரிப் போயின. கணக்கெடுக்கப்பட்ட பவளப் பாறைகளில் 80 சதவிகிதம் வெளிரிப் போயிருந்ததாகவும், அதில் 40 சதவிகிதம் இறந்து போனதாகவும் 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு கூறுகிறது. பவளப் பாறைகள் தாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் தண்ணீரின் வெப்பநிலைக்கு ஏற்ற நுண்ணுணர்வை கொண்டது. தண்ணீர் அதிகம் சூடாகினால், அதன் திசுக்களில் உள்ள ஜூஸாந்தெலே (zooxanthellae) என்ற பாசியை வெளியேற்றுகிறது. அதனால்தான் இவை வெள்ளை நிறமாக மாறுகின்றன. இதையே பவளப் பாறைகள் வெளிருதல் என்கிறோம்.
பவளப் பாறைகள் வெளிரும் போது, அவை இறந்து போவதில்லை. அதன்பிறகும் அவை உயிர் வாழ்கின்றன. ஆனால் எப்போது வேண்டுமானாலும் அவை இறக்க நேரிடலாம். பவளப் பாறைகள் வெளிருவதால் பல பின்விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பவளப் பாறையின் இனப்பெருக்கம் குறைகிறது; எளிதாக நோய் தாக்கி இறக்க நேரிடுகிறது. இதுமட்டுமல்ல, பவளப் பாறைகளை நம்பி ஆயிரக்கணக்கான கடல்சார் உயிரினங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. பவளப் பாறைகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால், அதை நம்பி வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து உண்டாகிறது.
கடல்சார் உணவின் வலைபின்னலை அழிக்கக்கூடிய அந்நிய தாவரங்கள் வளரவும் இந்த வெப்ப அலைகள் காரணமாக இருக்கின்றன. இத்தகைய அந்நிய தாவரங்களின் வளர்ச்சியால், மீன்பிடி கருவிகளில் திமிங்கலங்கள் எளிதாக சிக்குகின்றன.
வெப்ப அலைகளுக்கும் அதிகமான கடல் வெப்பநிலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இதன் காரணமாக சூறாவளிகளும் வெப்பமண்டல புயல்களும் வலுவடையத் தொடங்குகின்றன. மேலும், சூடான வெப்பநிலை காரணமாக ஆவியாதலின் வேகமும் கடலில் இருந்து வானத்திற்கு பரிமாறும் வெப்பமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. சூடான கடலின் மீது புயல்கள் பயணிக்கும் போது, அதிகமான நீராவியையும் வெப்பத்தையும் தன்னோடு எடுத்துச் செல்கிறது. முடிவில் நிலத்தை வந்தடையும் போது சக்திவாய்ந்த புயலாக உருமாறி, அதிகமான மழைப்பொழிவையும் வெள்ளத்தையும் உண்டாக்குகிறது.
அதுமட்டுமின்றி, பவளப் பாறைகளை சார்ந்து கடல்சார் உயிரினங்கள் மட்டும் உயிர் வாழவில்லை. தங்கள் உணவிற்காகவும், வருமானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அரை பில்லியன் மக்கள் இந்தப் பவளப் பாறைகளை நம்பி இருக்கிறார்கள். வெப்ப அலைகள் பவளப் பாறைகளை அழிக்கும்போது, அதை நம்பி வாழ்ந்து வரும் மனிதர்களும் அதற்கான விலையை கொடுக்கிறார்கள்.
வெப்ப அலைகள் கடலோர சமூகத்தினரிடம் “ஆழமான சமூக-பொருளாதார தாக்கத்தை” ஏற்படுத்துவதாக IUCN அறிக்கை ஒன்று கூறுகிறது. உதாரணமாக, 2012-ம் ஆண்டு வடமேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்ப அலைகள் நீடித்ததால், சூடான நீரை விரும்பும் கடல்சார் உயிரினங்கள் வழக்கத்தை விட சீக்கிரமாகவே வடமேற்கு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து சென்றுவிட்டன. இதனால் இந்த மீன்களை பிடிக்க காத்திருந்த அமெரிக்க மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உலகம் மேலும் வெப்பமடையும் போது, இதன் பின்விளைவுகள் இன்னும் மோசமாகும் என்பதை நாம் நியாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், கடந்த சில தசாப்தங்களாக வெப்ப அலைகள் வழக்கத்தை விட நீண்ட நாட்கள் நீடித்தும், தீவிரமானதாகவும், அடிக்கடி ஏற்படக் கூடியதாகவும் மாறியுள்ளது என நேச்சுர் இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கின்றது. 1982 முதல் 2016 வரையிலான இடைபட்ட காலத்தில், வெப்ப அலைகளின் நாட்கள் இரட்டிப்பாகியுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், 87 சதவிகித வெப்ப அலைகளுக்கு மனிதனால் உண்டாகும் வெப்பமயமாதலே காரணமாகும்.
காடழிப்பு மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் வெளியேறும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் பரவுகிறது. இதனால் உண்டாகும் கூடுதல் வெப்பத்தில் 90 சதவிகிதத்தை கடலே உள்வாங்கிக் கொள்கிறது. இது சமீபத்திய தசாப்தங்களில் நடந்த கதையாகும். இதனால் உலகளவில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 1850-ம் ஆண்டிலிருந்து 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளை கணக்கிட்டால் இது 0.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரித்துள்ளது.
உலகளவில் காற்றின் வெப்பநிலை அதிகரித்தால், கடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். அதைத்தொடர்ந்து வெப்ப அலைகளும் அதிகரிக்கும்.
இதுபோதாதென்று, நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், கடந்த ஏழு வருடங்களில் முதல் முறையாக இந்த வருடம் எல் நினோ நிகழ்வு தாக்கவுள்ளது. எல் நினோ என்பது ஒரு காலநிலை நிகழ்வாகும். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்தை மீறி ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பையே எல் நினோ என அழைக்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக அதிகரிப்பதற்கு எல் நினோ காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகளும் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.
உலகளவில் கடலின் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் எதிர்காலத்தில் எந்தளவிற்கு ஆபத்தாக இருக்கும் என பிரபல காலநிலை விஞ்ஞானியான டாக்டர்.கரோலின் ஹோம்ஸிடம் கேட்டபோது, “மலை உச்சியிலிருந்து நாம் கீழே விழுந்துவிட்டதாக நீங்கள் கூறலாம். ஆனால், மலையின் அடிவாரத்தில் என்ன இருக்கிறது என்பது நாம் யாருக்கும் தெரியாது” என்கிறார்.