நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளின் பாதுகாப்பிற்காக இரண்டு யானைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கடந்த 17ம் தேதி சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பிரத்யேக பகுதியில் அவற்றை பிரதமர் மோடி திறந்து விட்டார். தொலைதூர பயணக் களைப்பு மற்றும் புதிய வாழ்விடத்தால் ஏற்பட்டுள்ள மிரட்சி ஆகியவை சிவிங்கி புலிகளிடம் தென்பட்ட போதிலும் அவை நலமாகவே உள்ளன. 24 மணி நேரமும் சிறுத்தையின் உடல் நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிவிங்கி புலிகளின் பாதுகாப்புக்காக சத்புரா புலிகள் காப்பகத்தில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு லட்சுமி மற்றும் சித்நாத் என்ற இரண்டு யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
8 சிவிங்கி புலிகளும் தனித்தனியாக அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் சிவிங்கி புலிகளை உன்னிப்பாகக் கண்காணித்து, ஒரு மாத காலம் தனிமைப்படுத்தி அந்த காலத்தில் அவைகளுக்கு உணவாக எருமை இறைச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிவிங்கி புலிகள் இருக்குமிடத்தில் வேறெந்த வனவிலங்கும் வந்துவிடாது என்பதற்காக லட்சுமி மற்றும் சித்நாத் என்ற இரண்டு யானைகளை கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் சித்நாத் யானை, புலி ஒன்றை மீட்கும் ஆப்ரேஷனில் ஈடுபட்ட அனுபவம் கொண்டது என்றும் கோபமான சுபாவம் கொண்ட இந்த யானை கடந்த 2010 ஆம் ஆண்டில் இரண்டு பாகங்களை தாக்கிக் கொன்றது எனவும் கூறுகிறார் குனோ தேசிய பூங்கா அதிகாரி பிரகாஷ் குமார் வர்மா.
இதையும் படிக்க: 74 ஆண்டுகளுக்கு பின் இந்திய காட்டில் சீட்டா: புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைக்குமா?